Doctor Vikatan: சர்க்கரைநோய்க்கு அலோபதி மருந்துடன் சித்த மருந்துகளையும் சேர்த்து எடுக்கலாமா?
Doctor Vikatan: என்னுடைய மாமனாருக்கு 70 வயதாகிறது. அவருக்கு சர்க்கரைநோய் இருக்கிறது. ஒரு பக்கம் அலோபதி மருந்துகளை எடுத்துக்கொள்கிறார். இன்னொரு பக்கம் சித்த மருந்துகளையும் எடுக்கிறார். சர்க்கரைநோய்க்கு சித்த மருந்துகள் உதவுமா... அலோபதி மருந்துகள் எடுக்கும்போது கூடவே சித்த மருந்துகளையும் சேர்த்து எடுப்பது சரிதானா?
பதில் சொல்கிறார் திருப்பத்தூரைச் சேர்ந்த சித்த மருத்துவர் விக்ரம்குமார்.

சர்க்கரைநோய்க்கு சித்த மருத்துவத்தில் மிகச் சிறந்த தீர்வுகள் உள்ளன. இப்போது ஒருங்கிணைந்த மருத்துவம் குறித்து நிறைய பேசுகிறோம். அந்த வகையில் சித்த மருந்துகளோடு, அலோபதி மருந்துகளையும் சேர்த்துச் சாப்பிடலாமா என்பதை, உங்களுக்கு சிகிச்சை அளிக்கும் சித்த மருத்துவரும் அலோபதி மருத்துவரும் சேர்ந்து முடிவு செய்ய வேண்டும்.
இதில் கவனிக்க வேண்டிய முதல் விஷயம் உங்களுடைய ரத்தச் சர்க்கரை அளவு. ஒருவேளை உங்களுடைய ரத்தச் சர்க்கரை அளவு மிக அதிகமாக இருக்கும் பட்சத்தில், ஒருங்கிணைந்த மருத்துவ முறையில் சிகிச்சை மேற்கொள்ளும்போது, பலவித சிக்கல்களைக் குறைக்க முடியும். அதாவது சர்க்கரைநோயால் ஏற்படும் பாதிப்புகளை மட்டுமன்றி, அந்த நோயால் ஏற்படக்கூடிய உப பாதிப்புகளான கால் எரிச்சல் போன்றவற்றைக் குறைக்க ஆவாரைக் குடிநீர், மதுமேக சூரணம் போன்ற மிகச் சிறந்த மருந்துகள் சித்த மருத்துவத்தில் உள்ளன. இத்தகைய மருந்துகளால் பலன் பெற்றவர்களின் அனுபவங்களே இதற்கு சாட்சி.
எனவே, நீங்கள் அலோபதி, சித்தா என இரண்டு மருத்துவ முறைகளையும் பின்பற்றப் போகிறீர்கள் என்றால், அதற்கு முன் மருத்துவரிடம் கலந்தாலோசிப்பது அவசியம்.

மருத்துவ ஆலோசனையின்றி நீங்களாக இரண்டையும் பின்பற்றினால், உங்களுடைய ரத்தச் சர்க்கரை அளவில் மாறுபாடு ஏற்பட வாய்ப்புகள் அதிகம். திரிபலா சூரணம், மதுமேக சூரணம் போன்ற சிறந்த மருந்துகள், அரசு மருத்துவமனைகளிலேயே எப்போதும் கிடைக்கும். மருதம்பட்டை குடிநீர், ஆவாரை குடிநீர், வில்வம் மாத்திரை போன்ற பெரு மருந்துகள் பல உள்ளன. எனவே, உங்களுடைய வயது, ரத்தச் சர்க்கரையின் அளவு ஆகியவற்றைப் பொறுத்து மருத்துவ ஆலோசனையோடு இவற்றைப் பின்பற்றினால் சர்க்கரைநோயை கட்டுப்பாட்டில் வைத்து ஆரோக்கியமாக வாழ முடியும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.