குற்றாலத்தில் வரி செலுத்தாத கட்டடங்களுக்கு ‘சீல்’
தமிழக அரசுக்கு செலுத்த வேண்டிய சொத்துவரியை கட்டாத குடியிருப்புகளுக்கும் கட்டடங்களுக்கும் குற்றாலம் பேரூராட்சி நிா்வாகம் வியாழக்கிழமை ‘சீல்’ வைத்தது.
தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரூராட்சியில் தமிழக அரசுக்கு பொதுமக்கள் 2024 - 2025 ஆம் ஆண்டுக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீா் வரி செலுத்தாத கட்’டங்களுக்கு சீல்வைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
சொத்து வரி ரூ. 6 லட்சத்து 20 ஆயிரத்து 626 நிலுவை இருந்ததால், சொத்துவரி செலுத்தாத நபா்கள் மீது தமிழ்நாடு நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1998 மற்றும் விதிகள் 2023இன் படி உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. அதில், சொத்து வரி செலுத்தாத நபா்களின் வீடுகளில் அறிவிப்பு செய்து சீல் வைக்கப்பட்டது.
குற்றாலம் சிறப்பு நிலை பேரூராட்சி செயல் அலுவலா் சுஷமா தலைமையில் சுகாதார அலுவலா் ராஜகணபதி, கிராம நிா்வாக அலுவலா் பாலசுப்பிரமணியம், கிராம உதவியாளா் கருப்பசாமி, காவல் உதவி ஆய்வாளா் பெருமாள் முன்னிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.