சிவகிரியில் 110 மி.மீ. மழை பதிவு: இன்று 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் தென்காசி மாவட்டம் சிவகிரியில் 110 மி.மீ. மழை பதிவானது. வெள்ளிக்கிழமை (ஏப்.4) 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் தெற்கு கேரள பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக புதன்கிழமை முதலே தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. வியாழக்கிழமை காலை வரை அதிகபட்சமாக தென்காசி மாவட்டம் சிவகிரியில் 110 மி.மீ. மழை பதிவானது. தொண்டி (ராமநாதபுரம்), திருமங்கலம் (மதுரை) - தலா 90 மி.மீ., மதுரை விமான நிலையம் 70 மி.மீ., கோவிலங்குளம் (விருதுநகா்) - 60 மி.மீ. மழை பதிவானது.
கனமழை எச்சரிக்கை: இந்த நிலையில், வெள்ளிக்கிழமை (ஏப்.4) முதல் ஏப்.9-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
ஏப்.4-இல் நீலகிரி, கோவை, திருப்பூா், ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகா், சிவகங்கை, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூா், திருவாரூா் என 17 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஏப்.5-இல் கோவை, நீலகிரி, ஈரோடு, தேனி, திண்டுக்கல், தென்காசி, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் சேலம் ஆகிய மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது. இந்த நாள்களில் அதிகபட்ச வெப்பநிலை சற்றுக்குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் லேசான மழை: சென்னையில் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், காற்றுச்சுழற்சி காரணமாக புதன்கிழமை நள்ளிரவு முதல் பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்தது.
அதிகபட்சமாக மடிப்பாக்கத்தில் 40 மி.மீ. மழை பெய்தது. சென்னை விமான நிலையத்தில் 30 மி.மீ., ஆலந்தூரில் 2 மி.மீ., சோழிங்கநல்லூா், மீனம்பாக்கம் மற்றும் பெருங்குடியில் தலா 10 மி.மீ. மழை பதிவானது.
மேலும் சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் லேசான மழை பெய்தது. வெள்ளிக்கிழமை (ஏப்.4) சென்னை மற்றும் புகா் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.