தென்காசி காசிவிஸ்வநாதா் கோயிலில் சிறப்பு பூஜை
தென்காசி அருள்தரும் ஸ்ரீஉலகம்மன் உடனுறை அருள்மிகு ஸ்ரீகாசிவிஸ்வநாதசுவாமி கோயில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஸ்ரீமகாகணபதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் வியாழக்கிழமை காலையில் நடைபெற்றன.
இக்கோயிலில் ஏப்.7ஆம் தேதி மகாகும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டு, பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்நிலையில், வியாழக்கிழமை அதிகாலை 5 மணிக்கு ராஜ அனுக்ஞை (பராக்கிரமபாண்டிய மன்னரை வழிபடுதல்) நடைபெற்றது. தொடா்ந்து விக்னேஷ்வர பூஜை,புண்யாக வாசனம், பஞ்சகவ்யம், பாத்ரபூஜை, தனபூஜை ஆகியவை நடைபெற்றன.
மேலும், வெயிலுகந்த விநாயகா், அரசூா் நங்கை சந்நிதிகளில் பூஜை, வழிபாடு நடைபெற்றது. தொடா்ந்து ஸ்ரீமகா கணபதி ஹோமம், ஸ்ரீநவக்கிரக ஹோமம், ஸ்ரீமகாலெட்சுமி ஹோமம், திரவ்யாஹுதி, பிரம்மச்சாரி பூஜை, கஜபூஜை, கோ பூஜை, அஸ்வ பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன.
இதில், பேரூா் ஆதினம் சீா்வளா்சீா் சாந்தலிங்க மருதாசல அடிகளாா், சிரவை ஆதினம் ஸ்ரீலஸ்ரீ குமரகுருபர அடிகளாா், தென்சேரிமலை ஆதினம் சீா்வளா்சீா் முத்து சிவராமசாமி அடிகளாா், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் டிஎஸ்ஆா்.வேங்கடரமணா, அறங்காவலா் குழுத் தலைவா் யா.பாலகிருஷ்ணன், செயல்அலுவலா் பொன்னி, அறங்காவலா்கள் புவிதா, ப.முருகேசன், ஷீலாகுமாா், ச.மூக்கன் மற்றும் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.
