ஏகாம்பரநாதா் கோயிலில் பழைமையான தண்டாயுதபாணி சிலை கண்டெடுப்பு!
Doctor Vikatan: அனீமியா... இரும்புச்சத்து மாத்திரைகள் சாப்பிட்டால் சருமம் கறுப்பாக மாறுமா?
Doctor Vikatan: என் வயது 62. எனக்கு ஹீமோகுளோபின் அளவு 8.4 என்பதாக இருக்கிறது. மருத்துவர் பரிந்துரைத்ததன் பேரில் அயர்ன் சப்ளிமென்ட்ஸ் எடுத்து வருகிறேன். நான் ஓரளவு நிறமாகவே இருப்பேன். ஆனால், அயர்ன் சப்ளிமென்ட்ஸ் எடுக்க ஆரம்பித்த பிறகு என் சருமம் ரொம்பவும் கருத்துவிட்டது. அயர்ன் சப்ளிமென்ட்ஸ்தான் காரணம் என்கிறார்கள் என் நண்பர்கள். இது உண்மையா... இரும்புச்சத்து மாத்திரைகள் எடுப்பதால் ஒருவரது சருமம் கறுப்பாக மாறுமா?
-Uma, விகடன் இணையத்திலிருந்து
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண்

நீங்கள் கேள்விப்பட்டதுபோல, இரும்புச்சத்து சப்ளிமென்ட்ஸ் எடுக்கும்போது சரும நிறம் கறுப்பாக மாறுவது இயல்புதான். ஆனால், நீண்டகாலமாக அயர்ன் சப்ளிமென்ட் எடுப்போருக்கும், இரும்புச்சத்து ஓவர்லோடு ஆகும் நிலையிலும்தான் இப்படி நடக்கும்.
அனீமியாவில் 'அயர்ன் டெஃபிஷியன்சி அனீமியா' (Iron deficiency anemia) என்றொரு நிலை உண்டு. அதில் நீண்ட காலத்துக்கு அயர்ன் சப்ளிமென்ட்ஸ் எடுக்கும்போது, சருமத்தில் கருந்திட்டுகள் உருவாவதைப் பார்க்கலாம். பெரும்பாலும் இந்த பாதிப்பானது தற்காலிகமானதுதான். தானாகவே சரியாகிவிடக்கூடியதுதான். அரிதாக சிலருக்கு நிரந்தரமாக அப்படியே தங்கிவிடுவதும் உண்டு.

உடலில் இரும்புச்சத்து குறைபாடு இருக்கிறது, ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருக்கிறது என்ற நிலையில், உடல் ஸ்ட்ரெஸ்ஸில் இருக்கும். ஏனெனில் உடலில் ரத்த ஓட்டம் போதுமான அளவு இல்லாவிட்டால், இதயம், மூளை உள்பட உடல் உறுப்புகள் பலவும் கூடுதலாக வேலைசெய்ய வேண்டிய அழுத்தத்துக்கு உள்ளாகும்.
அதாவது உடல் உறுப்புகளுக்குப் போதுமான ஆக்ஸிஜன் கிடைக்காததால், உறுப்புகள் எப்போதும் ஒருவித அழுத்தத்தில் இருக்கும். இத்தகைய அழுத்தம் உடலுக்கு நல்லதில்லை. இதனால் வேறு பெரிய பிரச்னைகள் வரலாம். இதயம் மிகுந்த அழுத்தத்துக்கு உள்ளாகி, வேகமாகத் துடிக்கும். களைப்பு அதிகரிக்கும். அதிக களைப்பின் காரணமாக கார்போஹைட்ரேட் அதிகமுள்ள உணவுகளைச் சாப்பிடத் தோன்றும்.
அதன் விளைவாக உடல் இயக்கம் குறையும். உடல் எடை அதிகரிக்கும். அதன் தொடர்ச்சியாக ரத்தச் சர்க்கரை அளவும் கொலஸ்ட்ரால் அளவும் அதிகமாகும். எனவே, அனீமியா பிரச்னையால் வேறு வேறு பாதிப்புகளும் தொடர்ச்சியாக ஏற்படும்.

அயர்ன் சப்ளிமென்ட் எடுத்தால் சருமத்தில் கருமை வருகிறது என்பதற்காக அவற்றைத் தவிர்த்தால், அனீமியா பிரச்னையை சரிசெய்யவே முடியாது. அனீமியா பிரச்னைக்கு ஆரோக்கியமான உணவுப்பழக்கம் அடிப்படை. நிறைய காய்கறிகள், பழங்கள் அவசியம். அவற்றில் இரும்புச்சத்து மட்டுமன்றி, வைட்டமின்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்டுகளும் இருக்கும். அதீத ப்ளீடிங் போன்ற வேறு ஏதேனும் காரணங்களால் தீவிர அனீமியா பாதித்திருந்தால், அதிலிருந்து மீள சப்ளிமென்ட் எடுத்தே ஆக வேண்டும். சரும அழகை நினைத்துக் கவலைப்பட்டு சப்ளிமென்ட்டுகளை தவிர்ப்பது சரியான விஷயமல்ல.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.