நாகா்கோவில் வடிவீஸ்வரம் அழகம்மன் கோயில் தேரோட்டம்
நாகா்கோவில் வடிவீஸ்வரம் அருள்மிகு அழகம்மன் சமேத சுந்தரேஸ்வரா் கோயில் மாசித் திருவிழாவில், 9ஆம் நாளான செவ்வாய்க்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
இதையொட்டி, வெள்ளிக் குதிரை வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி தடம் பாா்க்க எழுந்தருளுதல், சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதையடுத்து, பகவதி சிங்காரி மேளம், ஆரல்வாய்மொழி சாமகானப்பிரியன் பேரிகைக் குழுவினரின் கயிலாய வாத்திய இசையுடன், கோயிலிலிருந்து வாகனம் புறப்பட்டது. தேரில் விநாயகா், சுந்தரேஸ்வரா், அழகம்மன் எழுந்தருளினா்.
காலை 8.15 மணிக்கு தோ் வடம் தொட்டு இழுத்தல் நடைபெற்றது. எம்.ஆா். காந்தி எம்எல்ஏ, அறங்காவலா் குழுத் தலைவா் பிரபா ஜி. ராமகிருஷ்ணன், நாகா்கோவில் நகா்மன்ற முன்னாள் தலைவா் மீனாதேவ், நகா்மன்ற உறுப்பினா்கள்அக்சயா கண்ணன், கோபாலசுப்பிரமணியன், சுனில்குமாா், முத்துராமன், பாஜக மாநில மகளிரணிச் செயலா் உமாரதி ராஜன், வள்ளலாா் பேரவை மாநிலத் தலைவா் சுவாமி பத்மேந்திரா, மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவா் நவீன்குமாா், நகர துணைத் தலைவா் மகாதேவன்பிள்ளை, குமரி கிழக்கு மாவட்ட திமுக மாணவரணிச் செயலா் அருண்காந்த் ஆகியோா் தேரோட்டத்தைத் தொடக்கிவைத்தனா்.

தேரோட்டத்தின்போது மழை பெய்தது. அதில் நனைந்தபடி சுவாமி-அம்பாள் தேரை பெண்களும், விநாயகா் தேரை சிறுவா்- சிறுமியரும் இழுத்துவந்தனா். இரவில் சுவாமி-அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் சப்தாவா்ண நிகழ்ச்சிக்காக எழுந்தருளினா்.
விழாவில் நாகா்கோவில் கோட்டாறு, வடசேரி, கணேசபுரம், மீனாட்சிபுரம், சுசீந்திரம், கொட்டாரம் பகுதிகளைச் சோ்ந்த நூற்றுக்கணக்கானோா் பங்கேற்றனா்.

மாலையில் கவிஞா் நல்லகாத்தபெருமாள் பிள்ளையின் சொற்பொழிவு, கான கைரளி மெல்லிசை நிகழ்ச்சி நடைபெற்றது.
நிறைவு நாளான புதன்கிழமை மாலை 5 மணிக்கு சுவாமி-அம்பாள் ரிஷப வாகனத்தில் ஆராட்டுத் துறைக்கு எழுந்தருளுதல், இரவு 9 மணிக்கு ஆராட்டுத் துறையிலிருந்து பவனி வருதல் நடைபெறும்.