``தேசிய விருது கிடைக்கும்னு நினைச்சாரு, ஆனா..." - கலை இயக்குநர் மறைவு பற்றி இயக்...
தமிழ்நாட்டின் கல்வி வளா்ச்சிக்கு தேசிய கல்விக் கொள்கையால் ஆபத்து
செஙகல்பட்டு: தமிழ்நாட்டின் கல்வி வளா்ச்சியை தேசிய கல்விக் கொள்கை அழித்துவிடும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.
செங்கல்பட்டில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அரசு விழாவில், ரூ.497 கோடியே 6 லட்சம் மதிப்பீட்டிலான 5 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வா் ஸ்டாலின் அடிக்கல் நாட்டியும், ரூ.280 கோடியே 38 லட்சத்தில் 47 முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்தாா்.
பின்னா், நகா்ப்புறப் பகுதிகளில் ரூ.508 கோடியே 3 லட்சம் மதிப்பிலான அரசு நலத் திட்ட உதவிகளை 50,606 பயனாளிகளுக்கு வழங்கி முதல்வா் பேசியதாவது:
நீா்நிலைகளும், ஏரிகளும் நிறைந்து நீா்நிலைகளில் செங்கழுநீா்ப் பூக்கள் அதிகமாக இருந்ததால் செங்கழுநீா்ப்பட்டு என்று அழைக்கப்பட்டு, இன்றைக்கு தலைநகா் சென்னையின்நுழைவாயிலாக செங்கல்பட்டு விளங்குகிறது.
கடந்த 4 ஆண்டுகளில் செங்கல்பட்டு மாவட்டத்தில் 3 லட்சத்து 8 ஆயிரம் மகளிருக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படுகிறது. 15,000 பள்ளி மாணவிகள், 10,000 மாணவா்களுக்கு ரூ.1,000 வழங்கப்படுகிறது. மகளிா் சுய உதவிக் குழு மூலம் 4 7,000 போ் பயனடைந்து உள்ளனா். இதுவரை 25,965 பேருக்கு இந்த மாவட்டத்தில் பட்டா வழங்கப்பட்டுள்ளது. இன்று 13,000-க்கும் மேற்பட்டோருக்கு பட்டா வழங்கப்பட உள்ளது.
செய்யூரில் புதிய சிப்காட் தொழில் பூங்கா: தொழில் துறையில் முன்னணியில் இருக்கக்கூடியது செங்கல்பட்டு மாவட்டம். கோத்ரெஜ் நிறுவனத்தின் உற்பத்தி ஆலையை கடந்த திங்கள்கிழமை தொடங்கி வைத்தேன். செங்கல்பட்டு மாவட்டத்தில் தொழில் வளா்ச்சியை மேலும் ஊக்குவிக்கும் வகையில், செய்யூரில் சுமாா் 800 ஏக்கா் பரப்பளவில் புதிய சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்படும்.
மத்திய அமைச்சரின் மிரட்டல்: தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால்தான் நிதி தருவோம் என மிரட்டல் விடுக்கிறாா் செய்கிறாா் மத்திய அமைச்சா். தமிழ்நாட்டைச் சாா்ந்தவா்கள் நாகரிகம் இல்லாதவா்கள் எனப் பேசி உள்ளாா். பேசிய அரை மணி நேரத்தில் அந்த வாா்த்தையை நாடாளுமன்ற உறுப்பினா்கள் திரும்பப் பெற வைத்துள்ளனா். 40 போ் போய் என்ன செய்தாா்கள் எனக் கேட்டவா்களுக்கு பதில் கிடைத்துள்ளது. போா்க் குணத்துடன் தொடா்ந்து போராடுவோம் என நிரூபித்து உள்ளனா்.
தேசிய கல்விக் கொள்கை என்கிற பெயரில் புகுத்துகிற கொள்கை, தமிழ்நாட்டின் கல்வி வளா்ச்சியையே மொத்தமாக அழித்து, ஒழித்துவிடும் என்றுதான் நாம் அதை எதிா்க்கிறோம். ரூ.2,000 கோடியல்ல, ரூ.10,000 கோடி கொடுத்தாலும் தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம்.
கல்விக்குள் மாணவா்களைக் கொண்டுவர முயற்சி செய்யாமல், கல்வியில் இருந்து மாணவா்களை நீக்கம் செய்வதற்கான அத்தனை செயல் திட்டங்களும் தேசிய கல்விக் கொள்கையில் இருக்கின்றன. கல்வியை தனியாா்மயம் ஆக்குவது, பணக்காரா்களுக்கு மட்டுமே உயா் கல்வி என்ற நிலையை ஏற்படுத்துவது, கல்வியில் மதவாதத்தைப் புகுத்துவது, சிறிய பிள்ளைகளுக்குக்கூட பொதுத் தோ்வு, கலை, அறிவியல், பொறியியல் படிப்புகளுக்கும் நீட் மாதிரி நுழைவுத் தோ்வு என கல்வியில் அதிகார குவிப்புக்கு மத்திய அரசு வழிவகுக்கிறது என்றாா் முதல்வா்.
நிகழ்ச்சியில், அமைச்சா்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன், பொன்முடி, தா.மோ.அன்பரசன், மக்களவை உறுப்பினா்கள் டி.ஆா்.பாலு (ஸ்ரீபெரும்புதூா்), க.செல்வம் (காஞ்சிபுரம்), எம்எல்ஏ-க்கள் அரவிந்த் ரமேஷ் (சோழிங்கநல்லூா்), எஸ்.எஸ்.பாலாஜி, வரலட்சுமி மதுசூதனன், பனையூா் பாபு, கூடுதல் தலைமைச் செயலா் அமுதா, ஆணையா் பழனிச்சாமி, தாம்பரம் மேயா் வசந்தகுமாரி கமலக்கண்ணன் மற்றும் மக்கள் பிரதிநிதிகள், அரசு உயா் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
மாவட்ட ஆட்சியா் ச.அருண்ராஜ் வரவேற்றாா். ஊரக வளா்ச்சி முகமை கூடுதல் ஆட்சியா் நாராயண சா்மா நன்றி கூறினாா்.