Kerala CM: கவர்னருடன் டெல்லி சென்று கேரளாவுக்கு நிதி கேட்ட பினராயி விஜயன்... வியக்க வைத்த நிகழ்வு!
கேரள முதல்வர் - கவர்னர் நட்பு:
கேரள கவர்னராக இருந்த ஆரிப் முஹம்மதுகான் முதல்வர் பினராயி விஜயனுக்கு குடைச்சல் கொடுத்துக்கொண்டிருந்தார். அவர் 5 ஆண்டுகளாக கவர்னராக இருந்த நிலையில் பஞ்சாப் கவர்னராக நியமிக்கப்பட்டார். பஞ்சாப் கவர்னராக இருந்த ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கேரள கவர்னராக நியமிக்கப்பட்டார். புதிய கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரும் முதல்வர் பினராயி விஜயனும் அதீத நட்பு பாராட்டி வருகின்றனர்.
கேரள கவர்னராக பதவி ஏற்க கடந்த டிசம்பர் மாதம் இறுதியில் கேரளா வந்த ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை திருவனந்தபுரம் விமானநிலையம் வரைச் சென்று வரவேற்றார் பினராயி விஜயன். கவர்னர் பதவி ஏற்றபின் தனது மனைவியுடன் ராஜ்பவனுக்குச் சென்று அவரை சந்தித்தார் பினராயி விஜயன். குடியரசுதின விழாவின்போது ராஜ்பவனில் நடைபெற்ற தேனீர் விருந்தில் முதல்வர் பினராயி விஜயன் கலந்துகொண்டு கவர்னரிடம் அன்பை பரிமாறிக் கொண்டார்.
அதுபோன்று கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரும் முதல்வர் பினராயி விஜயனிடம் தோழமை பாராட்டி வருகிறார். ஏற்கெனவே நடந்த சட்டசபை கூட்டத்தில் கேரள அரசு தயாரித்துகொடுத்த உரையில் ஒரு வார்த்தைகூட விடாமல் வாசித்தார் கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர். மத்திய அரசு கேரளாவுக்கு நிதி ஒதுக்காமல், பாகுபாடு காட்டுவதாக அந்த உரையில் இடம்பெற்ற வரிகளையும் வாசித்தார் கவர்னர்.

சி.பி.எம் கட்சியைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் அச்சுதானந்தனை அவரது வீட்டுக்குச் சென்று சந்தித்த கவர்னர், "நான் கல்லூரி படிக்கும் காலத்திலேயே பார்க்க வேண்டும் என விரும்பிய தலைவர் அச்சுதானந்தன்' என சிலாகித்தார்.
பால பருவத்தில் இருந்தே ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் செயல்பட்டுவரும் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரிடம் முதல்வர் பினராயி விஜயன் நெருக்கமாக நட்பு பாராட்டிவருவது அரசியலில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருந்தது.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனுடன் சந்திப்பு
எதிர் கட்சிகள் ஆளும் மாநிலங்களில் கவர்னர்கள் குடைச்சல் கொடுத்துவரும் நிலையில், கேரளா மாநிலத்துக்கான நிதிகளை வழங்க வேண்டும் என டெல்லியில் உள்ள கேரளா ஹவுசில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனை கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருடன் சென்று சந்தித்துள்ளார் முதல்வர் பினராயி விஜயன். இன்று காலை நடந்த இந்த சந்திப்பின்போது கேரள அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி கே.வி.தாமஸ் உடன் இருந்தார்.

கேரளா ஹவுசுக்கு வந்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனை முதல்வர் பினராயி விஜயன், கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் மற்றும் கேரள அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி கே.வி.தாமஸ் ஆகிய மூவரும் இணைந்து வரவேற்றனர். டெல்லி சென்று மத்திய அமைச்சர்களை சந்திக்கும் முதல்வர்களுடன் கவர்னர்கள் செல்வது ஆச்சர்யமாக நிகழ்வாக இருக்கும். அதிலும் எதிர்கட்சி ஆளும் கேரளாவில் முதல்வரும், கவர்னரும் இணைந்து மத்திய நிதி அமைச்சரை சந்தித்து நிதி கேட்டிருப்பது அரிதான நிகழ்வாக பார்க்கப்படுகிறது.