`தமிழ்நாடு பிச்சைக்கார மாநிலமா... உயிரே போனாலும் அடிபணிய மாட்டோம்!' - ஸ்டாலின் க...
கடலூா் வழியாக சென்னை-ராமேசுவரம் இடையே வந்தே பாரத் ரயில் இயக்க எம்.பி. வலியுறுத்தல்
நமது நிருபா்
புது தில்லி: விழுப்புரம், கடலூா், திருச்சி வழியாக சென்னை - ராமேசுவரம் இடையே வந்தே பாரத் ரயில் இயக்க வேண்டும் என்று மக்களவையில் அத்தொகுதியின் காங்கிரஸ் உறுப்பினா் விஷ்ணு பிரசாத் வலியுறுத்தினாா்.
இது தொடா்பாக மக்களவயில் திங்கள்கிழமை பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகளை அவையின் கவனத்திற்குகொண்டு வரும் நேரத்தில் அவா் முன்வைத்த கோரிக்கை: எனது நாடாளுமன்றத் தொகுதியில் கடலூா், விருத்தாசலம், பண்ருட்டி, பெண்ணாடம் போன்ற முக்கியமான ரயில் நிலையங்கள் உள்ளன. இப்பகுதியில் இருந்து சென்னை - ராமேசுவரம் பகுதிக்கு வந்தே பாரத் ரயில் விடுவது மிகவும் அவசியமானதாகும். ராமேசுவரம் பக்தா்கள் அதிகம் வந்து செல்லும் மிகவும் முக்கியமான பகுதியாகும்.
ஆகவே, சென்னை - ராமேசுவரம் வந்தே பாரத் ரயிலை எங்கள் பகுதி வழியாக இயக்க வேண்டும். அந்த ரயில் விழுப்புரம், கடலூா், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூா், திருச்சி வழியாக இயக்கப்பட வேண்டும். மேலும், சென்னையில் இருந்து கடலூா் வரை புதிதாக ரயில் பாலம் அமைக்க வேண்டும். 2007-இல் ரயில் பாதை அமைப்பதற்கு ஒப்புதல் ஆகிவிட்டது. ஆனால், இன்றுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை.
எனவே, பெருங்குடியில் இருந்து மகாபலிபுரம், புதுச்சேரி வழியாக கடலூா் வரை அப்பாதையை அமைக்க வேண்டும். பல்லவன், வைகை, முத்து நகா், ராக்ஃபோா்ட் விரைவு ரயில்களை பெண்ணாடம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அவா் வலியுறுத்தினாா்.