தமிழகத்தில் கோடை விடுமுறை எப்போது? வெளியான இறுதித் தேர்வு அட்டவணை!
`வீடு கட்டும் திட்டம் இருக்கா?’ - கிச்சன் டு பெட்ரூம்... பக்காவாக வடிவமைக்க சூப்பர் டிப்ஸ்!
வீடு கட்டுவது கனவாக இருந்தாலும், பட்ஜெட் பற்றி யோசிக்கும் போது செலவுகளை குறைக்க பல ஆசைகளை தியாகம் செய்ய வேண்டியிருக்கும். அட்ஜெஸ்ட்மென்ட் செய்ய வேண்டியிருக்கும். பில்டர்களிடம் கொடுத்து வீடு கட்டுபவர்கள் அடிப்படையான மாடல் போக, கூடுதலான டிசைன்களுக்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
டிசைன், டிரெண்ட் என்பதையெல்லாம் தாண்டி வீட்டின் ஒவ்வொரு அறையையும் வடிவமைக்க சில அடிப்படை விதிகள் இருக்கிறது. அதை ஃபாலோ செய்தாலே வீட்டில் நிம்மதியையும், அழகையும் தக்கவைத்துக்கொள்ள முடியும். அதற்கான வழிமுறைகளை வழங்குகிறார் கோவையைச் சேர்ந்த கட்டடவியல் வல்லுநர் ஜி.கணேஷ்.

வரவேற்பறை
தற்போது நவீனமயமாக வீடுகளில் வரவேற்பறையின் உயரம் முதல் தளம் வரை அமைக்கப்படுகிறது. இதை கோர்ட்யார்டு (Courtyard) என்பார்கள். இதன் மூலம் முதல் தளத்திலிருந்து நாம் தரைத்தளத்தை எட்டிப் பார்க்க முடியும் இப்படி கட்டப்படும் வீடுகள் பார்க்க பிரமாண்டமாக இருக்கும். வீட்டை ராயல் லுக்கில் காட்டும். ஆனால், கீழே உள்ள அறையில் நாம் பேசுவது மொத்தமாக வீட்டின் எல்லா புறமும் சென்றடையும். மேலும் ஹாலில் வைத்துள்ள டிவியில் வரும் சத்தம் முதல் தளம் வரை கேட்கும்.
அதனால் குழந்தைகளின் படிப்பு, பெரியவர்களின் நிம்மதியான உறக்கம் போன்றவை பாதிக்கக்கூடும். வீடு என்பது நாம் சந்தோசமாகவும், ஆரோக்கியமாகவும் வாழ்வதற்காகக் கட்டப்படுவதே. அதனால் பிரமாண்டம் ஆடம்பரம் முதலியவற்றைவிட வீட்டில் இருப்பவர்களின் வசதியைக் கருத்தில் கொள்வது நல்லது.
வரவேற்பறையைப் பொறுத்தவரை கொஞ்சம் விசாலமாகவும், வெளிச்சம், காற்றோட்டத்துடன் இருப்பது போன்றும் கட்டினால் நன்றாக இருக்கும்.
வரவேற்பறையில் குறைந்தது ஒரு ஜன்னலாவது இருப்பது போல் பார்த்துக் கொள்ளுங்கள்.
ஹாலிற்கு வெளிர்நிற வண்ணங்களை தேர்வு செய்வது நல்லது.
நீங்கள் அலமாரிகள், ஹோம் தியேட்டர் போன்றவற்றை ஹாலில் வைக்க திட்டமிடுகிறீர்கள் என்றால் அதற்கெற்ற வகையில் ஹாலில் இடம்விட்டு கட்டவது நல்லது.
கிச்சன்:
விரைவில் ஈரப்பதம் அடையும் என்பதால் சமையலறையை காற்றோட்டமாகவும், சூரிய வெளிச்சமும்படும் இடமாகப் பார்த்து அமைக்க வேண்டும்.
சமையலறையை ஹால் அருகில் இல்லாமல் சற்று தள்ளி அமைத்துக்கொள்வது சிறந்தது.

தற்போது நடைமுறையில் மேற்கத்திய பாணியில் திறந்தவெளி சமையலறையாக அமைக்கிறார்கள். ஆனால், சமையலறை எப்போதும் மூடப்பட்ட அறையாக இருப்பதன் மூலம் சமையலறையில் இருந்து வரும் பாத்திர சத்தங்கள் மிக்சி கிரைண்டர் போன்ற மின்சார சாதனங்களின் சத்தங்கள் வரவேற்பறையை பாதிக்காமல் இருக்கும்.
சமையலறை அமைக்கும் போது கிச்சன் மேடை, பாத்திரம் கழுவும் இடம் போன்றவற்றை தோராயமான உயரத்தில் அமைக்காமல், சமையல் செய்பவர்களின் உயரத்துக்கேற்ப அமைக்க வேண்டும். சமையலறையும், உணவருந்தும் இடமும் அருகருகே இருப்பது போல் திட்டமிடுவது நல்லது.
படுக்கை அறை:
வீட்டின் படுக்கை அறை. ஒருவரின் பிரைவசியை பாதிக்காத வண்ணம் படுக்கை அறை அமைக்க வேண்டும்.
வீட்டின் வரவேற்பறையில் இருந்து பார்க்கும்போது பார்வையில் படுமாறு படுக்கை அறை இருக்கக்கூடாது. அது பிரைவசியை பாதிக்கும்.
படுக்கை அறையில் இருந்து ஒரு சிறிய ஒப்பனை அறைக்கு சென்று பின்னர் கழிவறைக்குச் செல்வதுபோல் அமைத்தல் வேண்டும். இதனால் கழிவறையில் இருக்கும் பாக்டீரியாக்கள் படுக்கை அறையை எளிதில் பாதிக்காது.
வீட்டின் முகப்பில் படுக்கையறை சிலர் திட்டமிடுவார்கள். இவ்வாறு திட்டமிடுவதன் மூலம் இரவில் போக்குவரத்தின் ஒளி, ஒலி தூக்கத்தை பாதிக்கும். எனவே, அதில் கவனமாக இருக்க வேண்டும்.

வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்கு என்றால் வீட்டின் கீழ்பகுதியிலும், நடுத்தர வயதினருக்கு முதல் தளத்திலும் திட்டமிடலாம். குழந்தைகளுக்கென்று தனியாக படுக்கை அறை அமைக்கிறீர்கள் எனில், பெற்றோர்கள் கண்காணிப்பில் இருப்பது போன்று பெற்றோர் அறைக்கு அருகிலேயே அமைத்துக்கொள்வது நல்லது.
படுக்கையறையின் அளவை அவரவர் வசதி வாய்ப்புப் பொறுத்து அமைத்துக் கொள்ளலாம். குறைந்தபட்சம் 80 சதுர அடிக்கு குறையாமல் அமைக்க வேண்டும்.
படுக்கை அறையை ஒட்டியே கழிவறை அமைப்பது கூடுதல் வசதியாக இருக்கும்.
கழிவறை என்பது 30 சதுர அடிக்கு குறை இல்லாமல் இருக்க வேண்டும். படுக்கை அறைக்குள் அமைந்திருக்கும் கழிவறை எனில், அறையின் உள்ளே ஒரு பக்க அளவு 5 அடிக்குக் குறைவில்லாமல் அமைக்க வேண்டும். இதுவே பொதுவான அறை என்றால் எட்டடிக்குக் குறையாமல் அமைத்துக்கொள்ள வேண்டும்.

பயன்பாட்டு அறை:
ஒவ்வொரு வீட்டிலும் பயன்பாட்டு அறை (Utility Room) என்ற ஓர் அறையைத் திட்டமிடலாம்.
கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் செல்பவராக இருந்தால் மிகுந்த பயன் அளிக்கும். நாம் பயன்படுத்திய சமையல் பாத்திரங்களையும், துணிகளையும் இந்த அறையில் ஒதுக்கி வைத்தால் வீட்டின் மற்ற அறைகள் சுத்தமாக இருக்கும்.
பயன்பாட்டு அறையை வீட்டின் ஒதுக்குப் புறத்தில் அமைத்து தனியாக கதவு ஒன்று அமைப்பதன் மூலம் வீட்டில் வேலை செய்யும் பணியாளர் வந்து துணியைத் துவைப்பதற்கும் பாத்திரங்களைக் கழுவிவைத்துவிட்டு செல்வதற்கும் ஏதுவாக இருக்கும்.
பணியாளருக்கு தனியாக ஒரு சாவி மட்டும் கொடுத்துவிட்டால் போதும், பயன்பாட்டு அறையை மட்டும் அவர் பயன்படுத்தி பணிகளை முடிக்க ஏதுவாக இருக்கும்.
அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களை பயன்பாட்டு அறையில் வைத்துவிட்டால் எது எங்கு இருக்கிறது என் தேடி அலைய வேண்டியதில்லை.
ஸ்டோர் ரூம்
வீட்டில் கண்டிப்பாக ஸ்டோர் ரூம் எனப்படும் பொருள்களைச் சேமிக்கும் அறை அமைத்துக்கொள்வது வீட்டில் திடீரென்று பழுதாகும் பொருள்களையோ அல்லது வீட்டில் வைத்து பாதுகாக்க முடியாத சில பொருள்களையோ அல்லது எப்போதாவது தேவைப்படும் ஏணி, ஸ்டூல் போன்ற பொருள்களையோ வைத்துக்கொள்ள இது உதவும்.
ஸ்டோர் ரூம் அமைக்கும் போது தேவையான பரண்கள், அலமாரிகள் அமைத்து பயன்படுத்திவிட்டால் வீட்டின் மற்ற அறைகளை நீட்டாக பராமரிக்க முடியும்.
ஸ்டோர் ரூம் என்றவுடன் குடோன் போன்று இருக்க வேண்டும் என்று எண்ணாமல் சற்று பெரிதாக வடிவமைத்துகொள்வது நல்லது. எதிர்காலத்தில் நீங்கள் அந்த வீட்டை வாடகைக்கு விடுகிறீர்கள் என்றால் உங்கள் வீட்டில் உள்ள பொருள்களை ஸ்டோர் ரூமில் வைத்து லாக் செய்து மற்ற அறைகளை வாடகைக்கு விட்டுக்கொள்ளலாம்.

பூஜை அறை
பூஜை அறையையை பொறுத்தவரை தனியாக அமைக்கப்போகிறீர்களா, அல்லது வரவேற்பரையில் ஒரு ஓரத்தில் அமைக்கப்போகிறீர்களா, அலமாரிகள் போல் அமைக்கப்போகிறீர்களா என்பதை திட்டமிட வேண்டும்.
சிறிய இடம் இருப்பவர்கள் பூஜை அலமாரிகளை வாங்கி பயன்படுத்தலாம்.
பூஜை அறை தனியாக அமைக்கிறீர்கள் எனில், தேவையெனில் வீட்டின் மத்தியில் அமையுமாறு பார்த்துக்கொள்ளலாம். அதன் மூலம் பூஜை அறையில் நாம் பயன்படுத்தும் ஊதுபத்தி மற்றும் வாசனை பொருள்கள் எப்போதும் வீட்டை மணமாக வைத்துக்கொள்ளும். மேலும் பூஜை அறையில் ஒலிக்கும் தெய்வீக ஒலிகள் வீட்டில் ஒரு நல்ல நேர்மறை எண்ணங்களை ஊக்குவிக்கும்.
போர்டிகோ:
போர்டிகோ என்பது வீட்டின் முகப்பில் இருப்பதாக அமைத்துக் கொள்ளுதல் ஆகும். சாலையை அணுகும் இடமாக அமைத்துக் கொள்ளுதல் வேண்டும். கார் வைத்திருந்தால் கார் நிறுத்தம் கண்டிப்பாக அமைக்க வேண்டும்

மாடி:
வீட்டின் உள்புறத்தில் மாடிப்படிகள் அமைப்பது ஒரு நல்ல அழகான முறையில் காட்சி அளிக்கும். அதே படியை நாம் வளைவான படிகளாக அமைக்கும்போது ஒவ்வொரு படியின் அகலமும் கால் வைக்கும் இடம் 10 இன்ச் என்ற அளவுக்குக் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மேலும் ஒவ்வொரு படியின் உயரம் 6 இன்ச் விட குறைவாக இருக்க வேண்டும். அவ்வாறு அமைப்பதன் மூலம் வயதானவர்கள்கூட மாடிப்படி ஏறி இறங்க வசதியாக இருக்கும். இப்படி குடும்ப உறுப்பினர்களிடம் வசதி கருதி உங்கள் கனவு வீட்டுக்கு பிளான் போடும் போது, உங்கள் வீடு சொர்க்கமாக உருவாகும்.
வாய்ப்பு இருப்பவர்கள் மொட்டை மாடி திறந்தவெளி அறைகளை அமைக்கலாம். இசைக் கருவிகளை இசைக்க, யோகா, தியாகம் செய்ய இந்தத் திறந்தவெளி அறைகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம். விருந்தினர்கள் வரும்போது அமர்ந்து கலந்துரையாட, இயற்கையை ரசிக்க என்று பலவித பயன்பாட்டுக்கும் பயன்படுத்தலாம். இந்த அறை திறந்தவெளி அறையாக இருப்பதால் நல்ல புத்துணர்வு கிடைக்கும். குழந்தைகள் இயற்கையான சூழ்நிலையில் படிக்கும்போது அவர்களுக்கு சோர்வு வராமல் இருக்கும். பரபரப்பான இந்தக் காலகட்டத்தில் மன அழுத்தம் என்பது அனைவருக்கும் தவிர்க்க முடியாததாக உள்ளது. அதைக் குறைக்க இதுபோன்று ரிலாக்ஸ் செய்யும் பகுதிகளை வீட்டில் அமைத்துக்கொள்வது சிறப்பு.
ஆல் தி பெஸ்ட்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
