செய்திகள் :

'வாய்ப்பு கிடைக்கும்போது தானே போட்டி சமமாகும்?' - ஒரு பெண்ணின் கேள்விகள் | மகளிர்தின சிறப்பு பகிர்வு

post image

அன்னையர் தினம், மகளிர் தினம், பெண் குழந்தைகள் தினம், சகோதரிகள் தினம் என... பெண்களை கொண்டாட ’ஒதுக்கப்பட்டுள்ள’ தினங்கள் பல. ஆம்... அந்த தினங்களில் மட்டுமே, அதுவும் சில பெண்கள் மட்டுமே கொண்டாடப்படுகிறார்கள். மற்ற தினங்களில், மற்ற பெண்கள் எல்லாம்? வீடுகள், வீதிகள், அலுவலக மீட்டிங்குகள் என்று ஒருமுறை பார்வையைச் சுழற்றித் திரும்புங்களேன்... பதில் உங்களுக்கே தெரியும்.

women's day!

இதோ... இந்த மார்ச் - 8 சர்வதேச மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதன் நோக்கம் உழைக்கும் மகளிரின் உரிமைக்காக கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தை முன்வைத்து... உங்களிடம் பேச என்னிடம் கொஞ்சம் வார்த்தைகள் உள்ளன. ஏனெனில்... ’ஒதுக்கப்பட்ட’ இதுபோன்ற நாள்களில்தானே நம்மில் பலரின் செவிகள் பெண்களுக்காகக் கொஞ்சம் திறக்கும்!

ஆணின் வெற்றியும் பெண்ணின் வெற்றியும் ஏன் சமமானது இல்லை?

பெண்கள் எங்கிருந்து இன்று இங்கு வந்திருக்கிறோம் என்று அறிவீர்கள்தானே ஆண்களே? ஆண் இனம் கட்டற்ற சுதந்திரத்தை எடுத்துக்கொண்டு காலத்துடன் ஓடியபோது, நாங்கள் குடும்ப வன்முறைக்குள் அடங்கிக் கிடந்தோம். பல நூற்றாண்டு போராட்டங்களின் பலனாக சூழல் மாறியது; மாற்றினார்கள் செயற்பாட்டாளர்களும் எங்கள் முன்னோடி பெண்களும். என்றாலும்கூட, எங்களுடைய கட்டுப்பாடுகள் முழுமையாகக் களையப்படவில்லை. அந்நிலையிலும் எழுந்து, தத்தி, தாவி, நடந்தவர்கள் இன்று உங்களுக்குச் சமமாக சமூகத்தில் ஓடத் தொடங்கியிருக்கிறோம்.

ஆனால், இந்த மாற்றம் கடிகார முள் சுழல்வது போல அவ்வளவு எளிதாக நடந்துவிடவில்லையே? பேருந்து சக்கரத்தில் சிக்கி இறந்த குருவியின் தடயங்கள் போல நசுக்கப்பட்ட வலிகள் எங்களுடையவை. ஒவ்வொரு பெண்ணும் கடந்துவந்திருக்கிற தடங்களிலும் வலியின் தழும்புகள் நிறைந்து கிடக்கின்றன. அதனால்தான், ஒரு பெண்ணின் வெற்றியை ஓர் ஆணின் வெற்றியுடன் ஒப்பிடுவது என்பது, நேர்பாதையில் ஓடி வென்ற ஒருவரையும், கால்களே இல்லாமல் ஓடி ஜெயித்த ஒருவரையும் ஒப்பிடுவது போன்றதாகிறது.

’உனக்கு என்ன தெரியும்?’... உங்கள் வீட்டில் ஒலிக்கிறதா?

மாற்றங்கள் சில நிகழ்ந்தாலும், அடிப்படை மனநிலை மாறவில்லை பெரும்பான்மையினருக்கு. 'பெண்களை மதிக்கிறோம்’ என்றெல்லாம் பேசி சமூகத்தில் கைதட்டுகள் வாங்கும் ஆண்கள் உட்பட, ஆணாதிக்க மனநிலையுடன்தான் இருக்கிறார்கள். அதை வெளிப்படுத்தும் இடம், வேகம், வார்த்தைகள், வன்முறை உள்ளிட்டவை... பெண்கள் விழிப்புணர்வும் தைரியமும் பெற்ற சில வீடுகளில் சற்று மட்டுப்பட்டிருக்கின்றன. மற்றபடி, 'உனக்கு என்ன தெரியும்?’ என்ற வார்த்தைகள் ஒலிக்காத வீடுகள் உங்கள் தெருக்களில் இருக்கின்றனவா என்ன?

அம்மா

அப்படியென்ன உயர்வை நீங்கள் பெற்றுவீட்டீர்கள்?


ஓர் ஆணை அவமானப்படுத்த நினைத்தால் இங்கு புழங்கும் பழக்கம், அவர்களை பெண்களுடன் ஒப்பிடுவது. பள்ளியில் மாணவர்கள் தவறு செய்தால் அவர்களைப் பெண்கள் வரிசையில் அமர வைத்து ‘தண்டிக்கும்’ பல ஆசிரியர்கள் வளர்த்தெடுத்த சமூகம்தானே இது? ‘ஆம்பிள்ளையாடா நீ', 'சேலையை எடுத்துக் கட்டிக்கோ’ என்று வீதிச் சண்டைகளில் பேசுவதிலிருந்து, காத்திரமான அரசியல் பிரச்னைகளில் சம்பந்தப்பட்ட அரசியல்வாதி/கட்சிக்கு வளையல், புடவை அனுப்பும் ‘போராட்டம்’ வரை... இதுதானே சமூக மனநிலை? ஆண் என்பது ஒரு பாலினம், பெண் என்பது ஒரு பாலினம். இதில் எங்களை கீழானவர்களாக நிறுவ நீங்கள் யார்? அப்படியென்ன உயர்வை பாலின அடிப்படையில் நீங்கள் பெற்றுவீட்டீர்கள்?  

உலகின் எல்லா மொழிகளிலும் பெண்களின் உடல் உறுப்புகளைக் கொண்டே, அவர்களின் நடத்தையை முன்னிறுத்தியே வசைச் சொற்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. ஆணைத் திட்டுவதற்கும், அவர் வீட்டு பெண்களின் நடத்தையைச் சிறுமையாக்கும் வார்த்தைகள்தானே உங்களுக்குத் தெரியும்? படிப்பறிவில்லாதவர்கள், படித்தவர்கள்,  உயர் அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள்... யாருமே இதற்கு விதிவிலக்கல்ல.

பிறக்கும்போதே பதியவைக்கிறீர்கள்தானே ’ஆம்பள’ பெருமையை?

பெண் இழிவானவள் என்ற இந்த எண்ணம் ஆண்களுக்கு 30 வயதில் தொடங்குவதில்லை. பிறக்கும்போதே அது விதைக்கப்படுகிறது. ஆண் குழந்தைகளை ’சிங்கங்குட்டி' என்று கொஞ்சுவதும், ’அவன் ஆம்பளப்புள்ள, அப்படித்தான் இருப்பான், இப்போ என்ன?’ என்று அவன் உடலை சமூகத்தின் மீது அதிகாரம் செலுத்த வைப்பதும், 5 வயது தம்பியை 15 வயது அக்காவுக்குத் துணையாக கடைக்கு அனுப்புவதும், பெண்களிடம் தோழமையுடன் இருந்தால், பேசினால், சிரித்தால் அது ’ஆம்பளத்தனத்தின்’ கௌரவத்துக்கு குறைவானது என்று அவர்களைப் பிடித்திழுப்பதும், ’அப்பாவுக்கு அப்புறம் அவன்தான் வீட்டுல...’ என்று பதின் வயதிலேயே அவனுக்கான அதிகார நாற்காலியைத் தயார்படுத்துவதும் என... ஆண் பிள்ளைகளின் மனதில் அவர்கள்தான் உயர்ந்தவர்கள் என்றும், பெண்கள் அவர்களுக்குக் கீழ் என்றும் பதியவைக்கப்படுகிறது. இதைச் செய்வதில் பெரும் பங்கு, வீட்டுப் பெண்களுக்கே. ஆம்... ஆணாதிக்கத்தை அவர்கள் மனங்களிலும் ஆழ விதைத்து, அவர்களையே அதற்குப் பிரதிநிதியாக்கியிருக்கிறார்கள்.

விளைவாக, காதல், திருமண வயதுகளை வந்தடையும்போது பெரும்பாலான ஆண்கள், தங்களால்தான் குடும்பம் இயங்குகிறது, தங்களுக்குக் கீழ்தான் காதலி/மனைவி என்ற எண்ணத்திற்கு வந்துவிடுகிறார்கள். பெண்கள் தங்கள் சொல்லைக் கேட்டு நடந்தால்தான் தங்கள் ஆணாதிக்க ஈகோ திருப்திப்படும் அவர்களுக்கு.

பெண் - ஆண்

ஆணைப்போல வீட்டை உதறி... வேலைக்குச் செல்ல முடிகிறதா பெண்களால்?


ஓர் ஆண் வேலைக்குச் செல்லும்போது குடும்பமே சேர்ந்து அவனுக்காகச் சுழலும். ஆனால், ஒரு பெண் வேலைக்குச் செல்கிறாள் என்றால் குடும்பத்தையே தயார்படுத்தி அதன் பின்தான் அவள் கிளம்ப வேண்டும். அப்படியான வீடுகளில் இருந்துதான் இங்குள்ள வேலை, தொழில் சூழல்களுக்கு வந்துகொண்டிருக்கிறார்கள் பெண்கள்.
ஒன்றை நின்று, நிதானித்து உணருங்கள். ஆண்கள் போட்டியிடுவது பெண்களின் முழுமையான திறமையுடன் அல்ல. சமூகம் அவர்கள் வெளிப்படுத்த அனுமதித்திருக்கும் கொஞ்சமே கொஞ்சமான திறனுடன்தான். ’நீ வீட்டை பத்தி கவலைப்படாம இரு, குழந்தையை பத்தி கவலைப்படாத, எந்த நேரமும் வீட்டை விட்டு ஆஃபீஸுக்கு கிளம்பலாம், வீடு திரும்பலாம், எந்த ஊருக்கும், நாட்டுக்கும் வேலைக்காக போகலாம், வரலாம்...’ என இப்போது ஆண்கள் அனுபவித்திருக்கொண்டிருக்கும் கட்டுப்பாடற்ற வெளி அவர்களுக்கும் கிடைத்தால்... அவர்கள் ஆண்களுக்கு இணையாக அல்ல, மேலாக மிளிர்வார்கள் என்பது, சமூக அறிந்துகொள்ள வேண்டிய, சமூகத்துக்குக் கசக்கும் உண்மை.  

வீட்டில் இருப்பதாலேயே திறமை இல்லையா?


ஆண் குழந்தைகளுக்கும், ஆண்களுக்கும் மட்டுமே சாமரம் வீசும் பாரபட்சமான, நயவஞ்சகமான சமூகத்தில் குடும்பத்திற்காக, குழந்தைகளுக்காக தங்கள் கரியரை இழந்த பெண்கள், வீட்டில் இருக்கிறார்கள் என்பதாலேயே அவர்களுக்குத் திறமையில்லை, துணிச்சல் இல்லை என்று எப்படிச் சொல்லலாம்? அம்மா, அக்கா, தங்கை, மனைவி என வீட்டில் யாரோ ஒரு பெண் விட்டுக்கொடுப்பதாலும், அவர்களின் உழைப்பாலும்தான் ஆண்கள் சமூக வாழ்க்கையில் காலூன்றுகிறார்கள் என்பதை உணர மறுக்கும் சமூகத்தின் பிடிவாதத்துடன் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் போராடுவது?

குழந்தைப் பருவத்தில் தனக்கான வாய்ப்புகளை சக சிறுவர்களுக்கு விட்டுக்கொடுத்து, வளரும்போது வாய்ப்புகள் மறுக்கப்பட்டு, அவற்றுக்காகப் போராடி,  கிடைக்கும் சூழலை பயன்படுத்தி, பெண்களுக்கான கரியரை ஆப்ஷனாக பார்க்கும் சமூகத்திலும் ஓர் அடையாளத்தை தேடும், அடையும் பெண்களை... வீக்கர் செக்ஸ் என்பது எப்படி சரியாகும்? குடும்பத்தின் பொருளாதாரத்துக்கும் நாட்டின் பொருளாதாரத்துக்கும் பங்களிக்கும் பெண்களை அங்கீகரிக்காமல் இன்னும் ‘பொண்ணுதானே...?’ என்றே நினைத்தால்... உங்கள் ஆணாதிக்க எண்ணத்தால் நீங்கள் காலத்தில் பின்னோக்கிப் பயணிக்கிறீர்கள் என்றே அர்த்தம். முன்னேறும் பெண்களுடன் சக உறவாக, சக மனிதனாக,  சக பயணியாக, சக பாலினமாக உங்களால் கைகோத்து நடக்க முடியாது. நடக்கவே முடியாது.

பெண் - சித்திரிப்புப் படம்

உங்களுக்குக் கிடைக்கும் அனைத்து வாய்ப்புகள், சுதந்திரங்களையும் பெண்களுக்கும் கொடுத்து, போட்டியை சரிசமமாக்கி, வெற்றிபெறுங்கள். அதுவரை, ’பெண்களுக்குத் திறமையில்லை’ என்று பசப்பாதீர்கள். இதுவரை, தான் கூட்டில் அடைபட்டு, தன் வீட்டு ஆண்களை சமூகத்தில் நபராக்கிய பெண்கள்... இப்போது தங்கள் கனவுகளுடன் களத்துக்கு வர ஆரம்பித்திருக்கிறார்கள் அதிகமாக.

அண்ணாந்து பாருங்கள்... பெண்களின் உலகம் பெரிதாகிவிட்டது!

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Sleep Tourism: ஓய்வெடுப்பதற்காகப் பயணம் செய்கிறார்களா? 'ஸ்லீப் டூரிஸம்' கான்செப்ட் நல்லதா?

அன்றாட வாழ்க்கையின் சலசலப்பிலிருந்து ஒரு பிரேக் எடுக்கப் பயணம் மேற்கொள்கிறார்கள். இந்த பயணத்தின் போது செல்லும் இடங்களில் உள்ள அழகையும், இயற்கையையும் ரசிக்காமல் அல்லது சாகசங்களில் ஈடுபடாமல், தூங்கி எழு... மேலும் பார்க்க

Chennai Pen Show : `இந்த பேனா 27 லட்சம் ரூபாயா?’ - இறகு, மரத்தாலான விதவிதமான பேனாக்கள்!

Chennai Pen ShowChennai Pen ShowChennai Pen ShowChennai Pen ShowChennai Pen ShowChennai Pen ShowChennai Pen ShowChennai Pen Show27 லட்ச ரூபாய் பேனா Chennai Pen ShowChennai Pen ShowChennai Pen ShowChen... மேலும் பார்க்க

'ஐ அம் சாரி' செய்யும் மேஜிக் பற்றித் தெரியுமா?

அது ஒரு ரயில் பயணம். இரண்டு மூன்று ,பெட்டிகளுடன் வந்தாள் அந்தப் பெண். அடுத்த சில நிமிடத்தில் பைகளை அடுக்குவது, ஒரு டப்பாவில் மடக்கி வைத்திருந்த சார்ஜர் வயரை எடுப்பது, சீட்டை சரிசெய்வது என மும்மரமானாள்... மேலும் பார்க்க

Valentine's Day: 'கண்ணாடி வளையல்' டு 'காஸ்ட்லியான ஐபோன்' வரை - காதலும் காதலர் தின கிஃப்ட்களும்!

ரோஸ் டே, புரோபோஸ் டே, ஹக் டே, கிஸ் டே என ஏழு நாட்களுக்கு முன்பிருந்தே காதலர் தினம் களைகட்ட தொடங்கிவிடுகிறது.வெறும் தினம் மட்டுமல்ல, காதலர் தின கிஃப்டுகள் கூட இப்போது தனி ஸ்பெஷல். இதே நாட்கள் 80, 90 கா... மேலும் பார்க்க

இந்தக் கனவு அடிக்கடி உங்களுக்கு வருகிறதா? அறிவியல் சொல்லும் அர்த்தம் இதுதான்

எல்லோருக்கும் தூக்கத்தின்போது கனவு வருவது இயல்பான ஒன்றுதான். ஆழ்ந்த உறக்கத்தின் போது ஏற்படும் சில கனவுகள் நம் நினைவுகளை பிரதிபலிக்கின்றன.நாம் யார், நமக்கு என்ன தேவை, நாம் எதை நம்புகிறோம், எதைப் பற்றி ... மேலும் பார்க்க