`236 தொழிற்சாலைகள் அமைத்து இளைஞர்களுக்கு வேலை வழங்கியிருக்கிறோம்’ - புதுச்சேரி ஆளுநரின் பட்ஜெட் உரை
புதுச்சேரி 15-வது சட்டசபையின் 6-வது பட்ஜெட் கூட்டத்தொடர் கவர்னர் கைலாஷ்நாதன் உரையுடன் இன்று துவங்கியது. திருக்குறளுடன் துவங்கிய அவர், ஆளுநர் உரை முழுவதையும் தமிழில் வாசித்தார். அப்போது, ``அரசின் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்துவது குறித்து ஆய்வு மேற்கொண்டதுடன் காரைக்கால், மாஹே, ஏனாம் பகுதிகளையும் பார்வையிட்டேன்.
அப்போது, முதல்வர், அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள் சிறப்பான பணிகளை செய்திருந்தனர். அதற்காக பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மட்டும்தான் மாணவர்கள், முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள், நலிவுற்றவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் மிகச்சிறப்பான சமூக நலத்திட்டங்கள் மூலம் பயன்பெறுகிறார்கள்.

கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத மழைப்பொழிவை ஏற்படுத்திய ஃபெங்கல் புயல், மிக மோசமான பேரழிவுகளையும் ஏற்படுத்தியது. சாதாரண மக்களின் வாழ்க்கையை சீர்குலைத்தது. புதுச்சேரி மக்களின் சிரமங்களை போக்கும் விதமாக ரேஷன் கார்டுகள் வைத்திருந்த அனைவருக்கும் ரூ.5,000/- வீதம் ரூ.177.22/- கோடி நிவாரணத்தை அரசு சரியான நேரத்தில் வழங்கியது.
அதேபோல பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.30,000/- வீதம், 8,678 ஹெக்டேர்களுக்கு ரூ. 24.11 கோடி வழங்கப்பட்டது. இது நம் நாட்டிலேயே விரைவாக வழங்கப்பட்ட நிவாரணம். 2024-25 ஆண்டுக்கான வரவு செலவு திட்ட மதிப்பீடான ரூ.12,700 கோடியை விட, ரூ.535/- கோடி கூடுதல் தொகையுடன் திருத்திய மதிப்பீடு ரூ.13,235/- என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
இந்தக் கூடுதல் தொகை மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் பிற செலவினங்களுக்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது. மேலும் 236 சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் நிறுவப்பட்டு 10,888 இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இது தவிர 8,460 இளைஞர்கள் தனியார் நிறுவனங்களில் சேர்ந்திருப்பதன் மூலம் 21,792 இளைஞர்கள் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியமர்த்தப்பட்டிருக்கின்றனர்.
அதனால் 2020-21-ல் 6.7% சதவிகிதமாக இருந்த வேலை வாய்ப்பின்மை 2024-25-ல் 4.3 சதவிகிதமாக குறைந்திருக்கிறது. மேலும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் இந்திய அரசானது `பிரதமர் ஏக்தா மால்’ ஏற்படுத்த ரூ.104 கோடி ஒதுக்கியுள்ளது.

பொருளாதார மற்றும் பண்பாட்டுப் பயன்கள் தரக்கூடிய இந்த முக்கியமான செயல்திட்டத்தின் DPR இந்திய அரசின் தொழில் மற்றும் வணிக அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் நிறைவடையும் பொழுது 'பிரதமர் ஏக்தா மால்' சந்தை மூலம் இந்தியா முழுமைக்கும் கைவினை பொருட்களைக் காட்சிப்படுத்தல், சந்தைப்படுத்தல் சாத்தியமாகும்.
முக்கியமாக நம் உள்ளூர் கைவினை பொருட்களும் தர நிர்ணயம் செய்யப்பெற்ற பொருட்கள் யாவும் இவற்றுள் அடங்கும். அரசு முன்னெடுத்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கையால் 2020-21ம் ஆண்டில் ரூ.8,418.96 கோடியாக இருந்த மாநில வரி வருவாய், 2023-24-ம் ஆண்டில் ₹11,311.92 கோடியாக உயர்ந்து 34.36% சதவிகித வளர்ச்சியை எட்டியுள்ளது.
நமது மாநிலத்தின் பொருளாதார அளவு கடந்த 5 ஆண்டுகளில் 44.6 சதவீதம் அதிகரித்து மொத்த உள்நாட்டு உற்பத்தியானது ஆண்டு சராசரி வளர்ச்சி விகிதமான 9.56 சதவீதத்தை எட்டியுள்ளது. இதில் 2020-21ம் ஆண்டில் மைனஸ் 2.21 சதவீதம் இருந்த பொருளாதார வளர்ச்சி விகிதம் 2024-25ம் ஆண்டில் 8.81 சதவீதம் வளர்ச்சியை எட்டியுள்ளது. அதேபோல 2023-24-ல் ரூ.2,87,354 ஆக இருந்த தனிநபர் வருமானம், 2024-25-ல் ரூ.3,02,680/- லட்சமாக உயர்ந்துள்ளது.
இதன் மூலம் ஒவ்வொரு தனி நபரிடமும் கூடுதலாக ரூ.15,000/- இருப்பதாக தரவுகள் கூறுகின்றன. மாநிலத்தின் அனைத்து ரேஷன் கடைகளும் செயல்படத் துவங்கியிருக்கின்றன. மேலும் பொது விநியோக முறையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
புதுச்சேரி நகர்ப்புற வாழ்வாதார திட்டம் ரூ.4,750 கோடியில் செயல்படுத்த ஒன்றிய அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கடல் நீரை குடிநீராக்கும் ஆலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாண்புமிகு பிரதமர் மோடி வழங்கிய தாரக மந்திரமான பெஸ்ட் புதுச்சேரி என்பதற்கேற்ப எனது அரசு புதுச்சேரியை வணிகம், கல்வி, ஆன்மிக சுற்றுலாத் துறைகளில் மிக சிறந்த மாநிலமாக உருவாக்க உறுதி கொண்டிருக்கிறது.
இப்போது அரசின் கவனம் புதிய கல்விக் கொள்கையை வலுவாகவும், திறம்படவும் செயல்படுத்துவதில் முனைப்பாக இருக்கிறது. அதேபோல தற்போது தோராயமாக ஆண்டுக்கு 19 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். 2047-க்குள் 30 லட்சம் சுற்றுலா பயணிகளை வரவழைத்து, அவர்களின் தங்கும் சராசரி நாளான ½ நாளில் இருந்து 7 நாட்களாக அதிகரிக்க திட்டமிடப்பட்டிருக்கிறது” என்றார்.