இந்தக் கனவு அடிக்கடி உங்களுக்கு வருகிறதா? அறிவியல் சொல்லும் அர்த்தம் இதுதான்
எல்லோருக்கும் தூக்கத்தின்போது கனவு வருவது இயல்பான ஒன்றுதான். ஆழ்ந்த உறக்கத்தின் போது ஏற்படும் சில கனவுகள் நம் நினைவுகளை பிரதிபலிக்கின்றன.
நாம் யார், நமக்கு என்ன தேவை, நாம் எதை நம்புகிறோம், எதைப் பற்றி யோசிக்கிறோம் என நம் எண்ணங்களை, நினைவுகளை இந்தக் கனவுகள் வெளிக்காட்டுகின்றன. இப்படி வரும் கனவுகள் 15 முதல் 40 நிமிடங்கள் வரை நீடிக்கும் என்று கூறப்படுகிறது.
பொதுவாகக் கனவுகளில் வரும் காட்சிகளுக்கு அறிவியல் ரீதியிலான காரணங்கள் குறித்து இந்தப் பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-12/sao76yn1/hero-image-23.jpg)
நீங்கள் கனவில் துரத்தப்பட்டால் என்ன அர்த்தம்?
யாராவது உங்களைத் துரத்துவது போன்று கனவு வந்தால் வாழ்க்கையில் உங்களுக்கு பயம் அல்லது கவலையை ஏற்படுத்தும் ஏதோவொன்றிலிருந்து நீங்கள் ஓடிவிடுகிறீர்கள் என்று அர்த்தம். பிரச்னைகளைச் சமாளிப்பதற்குப் பதிலாக, அதிலிருந்து தப்பிக்க நினைக்கிறீர்கள் என்பதை அந்த கனவு குறிக்கிறது.
பறப்பது போன்ற கனவு
நீங்கள் பறப்பது போல் கனவு வந்தால் வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்குச் செல்ல ஏதோ ஒரு தடை இருப்பத்தை அது குறிக்கிறது.
அந்த கனவில் உங்களால் பறக்க முடியாவிட்டால், உங்களுக்காக நீங்கள் நிர்ணயித்த உயர்ந்த இலக்குகளை அடைய நீங்கள் சிரமப்படுவீர்கள் என்றும் கூறப்படுகிறது.
விழுவது போன்ற கனவு எதை குறிக்கிறது ?
உங்களுக்கு அடிக்கடி நீங்கள் ஏதோ ஒரு பகுதியிலிருந்து விழுவது போன்று கனவு வந்தால் அது நீங்கள் செய்யும் வேலையின் பாதுகாப்பின்மையினை குறிக்கும். மேலும் நீங்கள் செய்ய தவறிய விஷயங்களை ஞாபகப்படுத்தும் நினைவுகளாகவும் கூட இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-12/9dwc6vkx/hero-image-22.jpg)
தேர்வு தொடர்பான கனவு வருகின்றதா ?
நீங்கள் தேர்வுக்குத் தயாராக இல்லை என்பது போல் கனவு வந்தால் நீங்கள் அதிக மன அழுத்ததுடன் இருக்கிறீர்கள் என்று அர்த்தமாம்.
இன்றைய இளைஞர்களில் குறைந்தது 5 பேரில் 1 நபராவது தங்கள் வாழ்க்கையில் தேர்வுக் கனவை காண்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
கனவில் கழிப்பறை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால்?
கழிப்பறையைக் கண்டுபிடிக்க முடியாதது போல் கனவைக் கண்டால், உங்கள் வாழ்க்கையில் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் உங்களின் தேவைகளை வெளிப்படுத்த முடியாமல் சிரமப்படுவதை இது குறிப்பதாக கூறப்படுகிறது.
கனவில் வாகனம் மோதினால் என்ன அர்த்தம்
நீங்கள் பயணிக்கும் வாகனம் கட்டுப்பாட்டை இழந்துவிட்டதைப் போல் கனவு கண்டால் உங்கள் வாழ்க்கை பாதை சரியாகச் செல்லவில்லை என்பதை குறிக்கின்றது . ஆகவே உங்கள் முடிவுகளை யோசித்துப் பொறுமையாக எடுங்கள்!
அன்புக்குரியவரின் மரணம்
உங்களுக்கு நெருக்கமானவர்கள் யாரோ இறப்பதைப் போல் கனவு வந்தால் உங்கள் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் இது குறிக்கிறதே தவிர மரணம் குறித்த பயம் உங்களுக்கு தேவையில்லை.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-12/opskr620/hero-image-20.jpg)
பாம்பு கனவு வந்தால் காரணம்
இது நீண்டகாலமாக பொதுமக்களால் விவாதிக்கப்படும் கனவுகளில் ஒன்று இந்த பாம்பு கனவு, மனோதத்துவ ஆய்வாளர்கள் கருத்தின் படி மனதிற்குள் எழும் அடக்குமுறை , நாம் சந்திக்கும் ஒடுக்குமுறையே இதற்கு காரணம். பல காலமாக நம்மை பயமுறுத்தி வருகிறது இந்த பாம்பு கனவு... இப்படி நீங்கள் அடிக்கடி காணும் கனவு பற்றி கீழே கூறுங்கள்!