உடலுறவு குறித்து சர்ச்சை கருத்து: மக்களை சிரிக்க வைப்பதே குறிக்கோள்! யூடியூபர் வ...
சென்னை: தண்டவாளத்தில் தோழியோடு பேசிக்கொண்டு வந்த இளைஞர்... ரயில் மோதி உயிரிழந்த சோகம்!
சென்னை தாம்பரம் அடுத்த பெருங்களத்தூரில் இருந்து வண்டலூர் செல்லும் ரயில்வே தண்டவாளத்தில் இளைஞர் ஒருவரும், இளம்பெண் ஒருவர் சடலமாக கிடப்பதாக தாம்பரம் ரயில்வே போலீஸாருக்குகு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ரயில்வே போலீஸார், சம்பவ இடத்துக்கு வந்து இருவரின் சடலங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர்கள் யாரென்று போலீஸார் விசாரித்தனர். விசாரணையில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த விக்ரம் ( 25), சிதம்பரத்தைச் சேர்ந்த ஆதிலட்சுமி ( 23) எனத் தெரியவந்தது. இதையடுத்து அவர்களின் உறவினர்களுக்கு போலீஸார் தகவல் தெரிவித்தனர். அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த இருவரின் உறவினர்களும் சென்னைக்கு வந்தனர். பிரேத பரிசோதனைக்குப்பிறகு இருவரின் சடலங்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது உறவினர்கள் கதறி அழுதனர்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2023-05/434faf46-3a07-4f3e-a691-ac3258654015/vikatan_2021_06_9145d911_8a9f_4246_a79e_7014031a95e9_vikatan_2020_09_9a3c89da_4f84_41af_9138_17ca7b2.avif)
இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிந்த ரயில்வே போலீஸார், இருவரும் எப்படி உயிரிழந்தார்கள் என விசாரித்து வருகிறார்கள்.
இதுகுறித்து ரயில்வே போலீஸார் கூறுகையில், ``தண்டவாளத்தில் சடலமாக கிடந்த விக்ரம், ஆதிலட்சுமி ஆகியோரின் உடமைகள் அந்தப்பகுதியில் கிடந்தன. இதில் ஆதிலட்சுமி தொடர்புடைய சான்றிதழ்கள், செல்போன், விக்ரமின் செல்போன், லேப்டாப் இருந்தன. இவர்களின் செல்போனை ஆய்வு செய்த போது விக்ரமுக்கும் ஆதிலட்சுமிக்கும் ஏற்கெனவே பழக்கம் இருப்பது தெரியவந்தது. அதுதொடர்பாக இரண்டு பேரின் குடும்பத்தினரிடம் விசாரித்து வருகிறோம். விக்ரம், படித்த கல்லூரியில் ஆதிலட்சுமி படித்திருக்கிறார். அப்போது இருவரும் பழகி வந்திருக்கிறார்கள். விக்ரம் படிப்பை முடித்துவிட்டு வேலைத் தேடி சென்னை வந்தார். பெருங்களத்தூர் பகுதியில் உள்ள விடுதியில் தங்கி விக்ரம் வேலை செய்து வந்தார். அதைத் தொடர்ந்து ஆதிலட்சுமியும் படிப்பை முடித்து விட்டு வேலைத் தேடி சென்னைக்கு வந்தார். அப்போது ஆதிலட்சுமிக்கு விக்ரம் உதவி செய்தார். இருவரும் தனித்தனியாக விடுதிகளில் தங்கியிருந்தனர். இந்தச் சமயத்தில்தான் பெருங்களத்தூர் வரை ரயிலில் வந்த இருவரும் தண்டவாளத்தில் பேசியபடி தங்களின் விடுதிக்கு வந்திருக்கிறார்கள். அப்போது அவ்வழியாக வந்த ரயில் மோதி இருவரும் உயிரிழந்திருக்கிறார்கள். கல்லூரியில் தொடங்கிய நட்பு வேலைத் தேடி சென்னை வந்த பிறகும் தொடர்ந்திருக்கிறது. இந்தச் சமயத்தில்தான் இருவரும் ஒரே நேரத்தில் உயிரிழந்திருக்கிறார்கள்" என்றனர்.