`இல்லாத பிரச்னை' பெரும்பாலான இந்திய மனைவிகளுக்கு இது தெரிவதில்லை..! | காமத்துக்க...
யாசகம் பெறும் பெண்ணுடன் திருமணம் மீறிய உறவு... கொலையில் முடிந்த சோகம்; இளைஞர் கைது..!
திருச்சி மாவட்டம், சமயபுரத்தில் கடந்த மாதம் 3 -ம் தேதி திருச்சி டு சென்னை பைபாஸ் சாலையோர முள் புதரில் அடையாளம் தெரியாத 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சடலம் கிடப்பதாக சமயபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலை அடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற சமயபுரம் காவல் நிலைய போலீஸார் அடையாளம் தெரியாத அந்த பெண் சடலத்தை கைப்பற்றினர். அதோடு, அந்த உடலை உடற்கூறாய்வு மேற்கொள்வதற்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதோடு, இந்த சம்பவம் குறித்து சமயபுரம் காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து கொலைசெய்யப்பட்ட பெண் யார், அந்தப் பெண்ணை கொலை செய்து யார் என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-11/90s72kzs/trichy-2.jpg)
இந்நிலையில், லால்குடி டி.எஸ்.பி தினேஷ்குமார் உத்தரவின்படி, சமயபுரம் காவல் நிலைய ஆய்வாளர் கதிரேசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, கொலை நடைபெற்ற இடம் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராக்களை ஆய்வு செய்தனர். இதில், கடந்த ஜனவரி 2-ம் தேதி இரவு அந்த பெண்ணுடன் ஒரு நபர் நடந்து செல்லும் காட்சி சி.சி.டி.வி-யில் பதிவாகியிருந்ததை பார்த்தனர். இதையடுத்து, 3 - ம் தேதி அன்று அதே நபர் சமயபுரம் நால் ரோடு பகுதியில் தனியாக நடந்து செல்லும் காட்சியும் மற்றொரு சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியிருந்ததை பார்த்தனர்.
இதனைக் கொண்டு அவரது புகைப்படத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இந்நிலையில், சமயபுரம் தனிப்படை போலீஸார் சி.சி.டி.வி கேமராக்களை நோட்டமிட்டு திருப்பூர் பேருந்து நிலையத்தில் இருப்பதை உறுதி செய்து அங்கு வைத்து அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். இது தொடர்பான அவர்களின விசாரணையில், அந்த பெண்ணை கொலை செய்தது, சேலம் மாவட்டம், தலைவாசல் தாலுகாவில் உள்ள வீரகனூர் கிராமத்தைச் சேர்ந்த சிவா என்கின்ற விக்னேஷ் (வயது: 32) என்பது தெரியவந்தது.
![](https://gumlet.vikatan.com/vikatan/2019-10/459566ee-c270-462d-b94f-61b7cad6d209/murder.jpeg)
திருமணமாகாத இவர், தனது அண்ணனுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக சொந்த வீட்டிற்கு செல்வது இல்லை என்று சொல்லப்படுகிறது. இதனால், வீட்டைவிட்டு வெளியேறிய விக்னேஷ் ஒவ்வொரு ஊரிலும் தங்கி தினந்தோறும் கிடைத்த கூலி வேலையை செய்து கொண்டு அங்குள்ள கோயில், பேருந்து நிலையம் போன்ற இடங்களில் தங்கி வந்துள்ளார். அப்படி, ஒருநாள் ஶ்ரீரங்கத்தில் கொத்தனாராக வேலை செய்து விட்டு, இரவு நேரத்தில் கோயிலில் தங்கிய விக்னேஷூக்கு, அங்கிருந்த 40 வயதுடைய யாசகம் செய்யும் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது.
அப்போது விக்னேஷிடம் அந்த பெண், ‘எனக்கு திருமணமாகி விட்டது. எனது கணவருக்கும் எனக்கும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வந்து விட்டேன்’ என தெரிவித்துள்ளார். இதையடுத்து விக்னேஷ் தினந்தோறும் அந்த பெண்ணை சந்தித்து பேசி பழகி வந்துள்ளார். இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் திருமணம் மீறிய உறவாக மாறியிருக்கிறது. இதனால், இருவரும் அடிக்கடி தனிமையில் இருந்துள்ளனர். இதில், அந்த பெண் விக்னேஷிடம் தான் கர்ப்பமாக இருப்பதாகவும், அதைக் கலைக்க ரூ.13,000 வேண்டும் என்று கேட்டு வாங்கி உள்ளார். இதன்பின், இரண்டு நாள்கள் பின் அந்த பெண்ணை சமயபுரம் பகுதியில் விக்னேஷ் சந்தித்துள்ளார்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2022-10/d55f2ff8-285a-4fca-9c3c-4743b6972816/vikatan_2022_06_1443b4ff_f3ae_4165_a62f_9b7da7d84ef8_suicide_1.avif)
அன்று இரவு இருவரும் தனிமையில் இருந்திருக்கிறார்கள். அப்போது அந்த பெண்ணிடம் பணம் என்ன ஆச்சு என்று விக்னேஷ் கேட்க, அதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால், கோபமான விக்னேஷ், அந்த சேலையால் பெண்ணின் கழுத்தில் சுற்றி நெரித்து கொலை செய்ததாக போலீஸாரிடம் ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து, சமயபுரம் காவல் நிலைய போலீஸார் விக்னேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர். யாசகம் பெற்று வந்த பெண் ஒருவரை இளைஞர் ஒருவர் கொலை செய்துள்ள சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.