இலவசங்களால் மக்கள் உழைப்பதற்குத் தயாராக இல்லை: உச்ச நீதிமன்றம்!
தேர்தலுக்கு முன்பு கட்சிகள் இலவசங்களை வழங்குவதாக வாக்குறுதி அளிப்பது குறித்து உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
நகர்ப்புறங்களில் வீடற்றவர்கள் தங்குவதற்கான உரிமை தொடர்பான வழக்கு விசாரணை நீதிபதிகள் பி ஆர் கவாய், அகஸ்டின் ஜார்ஜ் மாஷி ஆகியோர் அடங்கிய அமர்வின் கீழ் இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது.
இதில், ”தேர்தலுக்கு முன்னர் கட்சிகள் இலவசங்கள் வழங்குவதாக வாக்குறுதி அளிக்கின்றனர். துரதிர்ஷ்டவசமாக, இலவசங்கள் வழங்குவதால் மக்கள் உழைப்பதற்குத் தயாராக இல்லை. அவர்களுக்கு இலவச ரேஷன் கிடைக்கிறது. எந்த வேலையும் செய்யாமல் பணம் கிடைக்கின்றது.
மக்கள் மீதான உங்கள் அக்கறையை நாங்கள் மிகவும் பாராட்டுகிறோம். ஆனால் இந்த மக்களை பிரதான சமூகத்தின் ஒரு பகுதியாக மாற்றாமல், நாம் ஒரு வகையான ஒட்டுண்ணிகளை உருவாக்கவில்லையா?" என்று கேள்வி எழுப்பினர்.
இதையும் படிக்க | ஆம் ஆத்மியிடமிருந்து விடுதலை பெற விரும்பும் பஞ்சாப்: பாஜக
நகர்ப்புறங்களில் வீடற்றவர்களுக்கு தங்குமிடம் வழங்குவது போன்ற பிரச்சினைகளைத் தீர்க்க நகர்ப்புற வறுமை ஒழிப்புத் திட்டப் பணியை இறுதி செய்யும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாக சட்ட ஆலோசகர் ஆர். வெங்கடரமணி நீதிபதிகள் அமர்வின் முன் தெரிவித்தார்.
இந்த நிலையில், நகர்ப்புற வறுமை ஒழிப்புத் திட்டம் எப்போது தொடங்கும் என்பது குறித்து அரசாங்கத்திடம் ஆலோசிக்குமாறு நீதிபதிகள் சட்ட ஆலோசகரிடம் கேட்டுக் கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கு விசாரணையை ஆறு வாரங்களுக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.
தில்லியில் சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்த சில நாள்களுக்குப் பின்னர் உச்ச நீதிமன்றம் இவ்வாறு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தத் தேர்தலில் பாஜகவும் ஆம் ஆத்மியும் ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றுவதாக பல்வேறு வாக்குறுதிகளை அறிவித்தனர்.
பெண்களுக்கு மாதாந்திர உதவித் தொகை ரூ.2,100, தண்ணீர் கட்டணங்கள் தள்ளுபடி, மாணவர்களுக்கு இலவச பேருந்து பயணம், மாணவர்களுக்கு மெட்ரோ கட்டணத்தில் 50% சலுகை போன்ற வாக்குறுதிகளை ஆம் ஆத்மி கட்சி அறிவித்தது.
பெண்களுக்கு மாதாந்திர உதவித் தொகை ரூ.2,500, ஹோலி மற்றும் தீபாவளிக்கு இலவச சிலிண்டர் போன்ற வாக்குறுதிகளை பாஜக வழங்கியது.
மத்தியப் பிரதேசம், ஹரியானா, மகாராஷ்டிரா போன்ற மாநில தேர்தல்களிலும் இதுபோன்ற வாக்குறுதிகள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.