செய்திகள் :

கர்ப்பிணிகளிடையே அதிகரிக்கும் தைராய்டு! காரணங்கள், சிகிச்சைகள் என்னென்ன?

post image

தில்லியைச் சேர்ந்த பெண் ஒருவர், 33 வயதில் முதல்முறையாக கர்ப்பமாகியுள்ளார். அவருக்கு மன அழுத்தத்துடன் ஹைப்போ தைராய்டிசம் இருப்பது கண்டறியப்பட்டது. ஹைப்போ தைராய்டிசம் என்பது தைராய்டு சுரப்பி போதுமான ஹார்மோன்களை உற்பத்தி செய்யாமல் இருப்பது. இதனால் சோர்வு அல்லது எதிர்பாராத எடை அதிகரிப்பு நிகழலாம்.

சத்தான உணவு சாப்பிடவும், நடைபயிற்சி செய்யவும், தியானம், சுவாசப் பயிற்சி போன்ற மன அழுத்தத்தைக் குறைக்கும் பயிற்சிகளில் ஈடுபடவும் அவருக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

அயோடின் குறைபாடு, தைராய்டு சுரப்பு அதிகமாவதற்கும் குறைவதற்கும் ஒரு பொதுவான காரணமாக இருப்பதால், அயோடின் கலந்த உப்பை உட்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது. இதனை பின்பற்றியதால் எந்த பிரச்னையும் இல்லாமல் அவர் குழந்தை பெற்றெடுத்தார்.

அவருக்கு சிகிச்சை அளித்த நொய்டா மதர்ஹூட் மருத்துவமனையின் மூத்த ஆலோசகரும் மகப்பேறு மருத்துவருமான டாக்டர் மஞ்சு குப்தா, கர்ப்ப காலத்தில் ஹைப்போ தைராய்டிசம் தற்காலிகமானது என்றும் பெரும்பாலும் பிரசவத்திற்குப் பிறகு சரியாகிவிடும் என்றும் கூறுகிறார்.

கர்ப்பிணிகளிடையே அதிகரிக்கும் தைராய்டு

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், தைராய்டு பிரச்னைகள் ஏற்படுவது பொதுவானது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். கருத்தரித்தல் முதல் குழந்தை பிறக்கும் வரையிலான காலகட்டத்தில் இந்த பிரச்னைகள் இருக்கின்றன. நாடு முழுவதும் நடத்தப்பட்ட ஆய்வுகளின்படி, கர்ப்ப காலத்தில் தைராய்டு கோளாறுகள் 8-15% அதிகமாக உள்ளது என்கின்றனர்.

இருப்பினும், கடந்த ஐந்து ஆண்டுகளில் நாட்டில் தைராய்டு பாதிப்புகள் கணிசமாக அதிகரித்துள்ளது. 33-45 வயதுடைய 10 முதல் 15 பெண்களுக்கு மாதந்தோறும் தைராய்டு பிரச்னைகள், முக்கியமாக ஹைப்போ தைராய்டிசம் இருப்பதைக் கண்டறிவதாக டாக்டர் மஞ்சு குப்தா கூறுகிறார். கர்ப்பிணிகள் மற்றும் 25 முதல் 45 வயது வரையிலான பெண்களிடையே தைராய்டு பிரச்னைகள் அதிகரித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

'தைராய்டு' என்ற சொல் ஒரு நோய் அல்ல, இது கழுத்துப் பகுதியில் ஒரு சிறிய பட்டாம்பூச்சி வடிவிலான சுரப்பியின் பெயர். இது நாளமில்லா அமைப்பின் ஒரு பகுதி. இந்த சுரப்பி, தைராக்ஸின் (T4) மற்றும் ட்ரையோடோதைரோனைன் (T3) போன்ற தைராய்டு ஹார்மோன்களை உற்பத்தி செய்து வெளியிடுகிறது. இந்த ஹார்மோன்கள் உடலின் பல அத்தியாவசியச் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துகிறது. மேலும் வளர்சிதை மாற்றம், ஆற்றல், இனப்பெருக்கம், உடல் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துகின்றன.

தைராய்டு சுரப்பி, இந்த ஹார்மோன்களை குறைவாக உற்பத்தி செய்யும்போது அது ஹைப்போ தைராய்டிசம் (செயல்குறைந்த தைராய்டு) என்றும், அதிகமாக உற்பத்தி செய்தால் அது ஹைப்பர் தைராய்டிசம் (அதிகப்படியான தைராய்டு) என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த பொதுவான கோளாறுகளைத் தவிர, தைராய்டு முடிச்சுகள் அல்லது கட்டி, தைராய்டு புற்றுநோய்கள் போன்ற அசாதாரண பிரச்னைகளும் இருக்கின்றன.

சென்னை மதர்ஹூட் மருத்துவமனையின் ஆலோசகரும் மகப்பேறு மருத்துவருமான டாக்டர் காவ்யா கிருஷ்ணகுமாரும் சமீபகாலமாக தைராய்டு தொடர்பான பிரச்னைகள் அதிகரித்துள்ளதாகக் கூறினார்.

மேலும் அவர், "பெண்கள் வயது அதிகமாகி, தாமதமாக குழந்தை பெறும்போது, ​​கர்ப்ப காலத்தில் தைராய்டு பிரச்னைகள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. வயிற்றில் குழந்தை வளரும்போது ஏற்படும் உடல் மாற்றங்களினால் இயற்கையாகவே தைராய்டு ஹார்மோன் அளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. சில சூழ்நிலைகளில் தைராய்டு சுரப்பி இந்த மாற்றங்களுக்கு ஈடு கொடுக்க முடியாததால் ஹைப்போ தைராய்டிசம் அல்லது ஹைப்பர் தைராய்டிசம் ஏற்படுகிறது.

தைராய்டில் இந்த இரண்டு நிலைகளும் தாய் மற்றும் கருவில் உள்ள குழந்தையின் ஆரோக்கியத்தில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும், குறைப் பிரசவம், குழந்தையின் எடை குறைவாக இருத்தல், குழந்தையின் வளர்ச்சியில் பிரச்னைகள் ஏற்படலாம். தைராய்டு இருந்தால் கருச்சிதைவுக்கான வாய்ப்பும் அதிகரிக்கும்.

கர்ப்பிணிகளில் பிரீக்லாம்ப்சியா (உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பிற அறிகுறிகளை உள்ளடக்கியது), பிரசவத்திற்குப் பிந்தைய ரத்தப்போக்கு, தாயின் இதயத்துடிப்புகளில் மாற்றம், சில நேரங்களில் இதய செயலிழப்புகூட ஏற்படலாம்.

இதனால் கர்ப்பிணிகள் தங்கள் தைராய்டு நிலையைக் கண்காணித்து சரியான நேரத்தில் சிகிச்சை பெறுவது மிகவும் முக்கியம் என்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஹார்மோன் சமநிலையைக் குலைக்கிறது என்பதால் அவற்றைத் தவிர்க்க வேண்டும் என்றும் டாக்டர் காவ்யா கிருஷ்ணகுமார் கூறினார். மேலும், கர்ப்பத்தைத் திட்டமிடுவதற்கு முன் பரிசோதனை செய்வதும் அவசியம் என்கிறார்.

தைராய்டு பாதிப்பு அதிகரிப்பு

நாடு முழுவதுமே தைராய்டு பாதிப்புகள் அதிகரித்து வருவதாகவும் இதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் கொச்சியில் உள்ள அமிர்தா மருத்துவமனையின் நாளமில்லா சுரப்பியியல் மற்றும் நீரிழிவு நோய் நிபுணர் பேராசிரியர் டாக்டர் உஷா மேனன் கூறுகிறார்.

"இந்தியாவில் தைராய்டு பாதிப்பு ஒருவரின் வயது, பாலினம், மாநிலத்தைப் பொருத்து மாறுபடுகிறது. அயோடின் குறைபாடு இதற்கு ஒரு முக்கியக் காரணமாகும். 'கோயிட்ரே'(goitre) எனும் தைராய்டு சுரப்பி வீக்கம் 4-7% பேருக்கு உள்ளது.

அயோடின் குறைபாடு மட்டுமின்றி தற்போதைய வாழ்க்கை முறை, மோசமான உணவுப் பழக்கவழக்கங்கள், அதிகரித்து வரும் மன அழுத்தம், காற்று மாசு உள்ளிட்ட சுற்றுச்சூழலும் காரணங்களாக அமைகின்றன" " என்றார்.

தைராய்டு கோளாறுகள் சுமார் 10-12% பேரை பாதிக்கிறது, ஹைப்போ தைராய்டிசம் சுமார் 3%, ஹைப்பர் தைராய்டிசம் 2%- க்கும் குறைவாகவும் உள்ளதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

thyroid

பெண்களுக்கு அதிக பாதிப்பு

'ஒய் குரோமோசோம்' காரணமாக தைராய்டு பிரச்சனைகளிலிருந்து ஆண்கள் பெரும்பாலும் தப்பித்துவிடுகிறார்கள். அந்தவகையில் பெண்களே அதிகம் தைராய்டு கோளாறுகளுக்கு ஆளாகிறார்கள். ஆண்களைவிட பெண்களுக்கு தைராய்டு பாதிப்பு 5 முதல் 8 மடங்கு அதிகம் என்கின்றன ஆய்வுகள்.

பருவமடைதல், கர்ப்பம், மாதவிடாய் காலத்தில் ஏற்படும் ஹார்மோன் ஏற்ற, இயக்கத்தினால் பெண்களுக்கு தைராய்டு பிரச்னைகள் ஏற்படுகின்றன. ஹைப்பர் தைராய்டிசம், ஹைப்போ தைராய்டிசம் இரண்டின் அறிகுறிகளும் வேறுபட்டவை. ஹைப்போ தைராய்டிசத்தில், ஒரு நபர் சோர்வு, எதிர்பாராத எடை அதிகரிப்பு, மனச்சோர்வு, இதயத்துடிப்பு குறைதல் ஆகியவற்றை உணரலாம். அதே நேரத்தில் ஹைப்பர் தைராய்டிசத்தில், அதிக எடை இழப்பு, வேகமான இதயத் துடிப்பு ஏற்படலாம்.

சிகிச்சைகள் என்னென்ன?

தைராய்டு கோளாறுகளை ரத்தப் பரிசோதனைகள் மூலம் கண்டறியலாம். தைராய்டு பிரச்னைகளை சரிசெய்ய வேண்டுமெனில் சரியான நேரத்தில் கண்டறிய வேண்டும். தைராய்டில் எந்த வகை பாதிப்பு, அறிகுறிகள் ஆகியவற்றின் அடிப்படையில் மருந்துகள் வழங்கப்படுகின்றன. இந்த மருந்துகள் உடலில் தைராய்டு ஹார்மோன்களின் சமநிலையை மீட்டெடுக்க உதவுகின்றன. மேலும் ஹைப்போ தைராய்டிசத்திற்கு ஹார்மோன் மாற்று சிகிச்சை செய்யப்படும். அதேநேரத்தில், ஹைப்பர்தைராய்டிசத்திற்கு மருந்துகள், கதிரியக்க அயோடின் அல்லது அறுவை சிகிச்சை தேவைப்படலாம்.

அடுத்து தொடர்ந்து தைராய்டு ஹார்மோன் அளவைக் கண்காணிப்பது முக்கியமானதாகும். அவ்வப்போது ரத்தப் பரிசோதனைகள் மூலம் ஹார்மோன் அளவைக் கண்காணித்து மருத்துவர்களின் ஆலோசனைக்கு ஏற்ப மருந்துகள், சிகிச்சைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். தொடர்ச்சியான பரிசோதனை சிக்கல்களின் அபாயத்தைக் குறைக்கிறது.

குழந்தைகளுக்கு பரிசோதனை

பிறக்கும்போதே குழந்தைகளுக்கு தைராய்டு இருப்பதைக் கண்டறிய பரிசோதனைகள் உள்ளன. ஏனெனில் தைராய்டுக்கு உடனடி சிகிச்சை அளிக்கவில்லை எனில் குழந்தைகளின் இதயம், நரம்புகளில் பிரச்னை, செரிமானம், மலட்டுத்தன்மை போன்றவை ஏற்பட்டு குழந்தையின் வளர்ச்சியில் பாதிப்பு அல்லது தாமதத்தை ஏற்படுத்தலாம். மைக்ஸெடிமா கோமா(myxedema coma) போன்ற உயிருக்கு ஆபத்தான நிலைகூட ஏற்படலாம். எனவே, குழந்தைகளின் உடல், மன வளர்ச்சியில் குறைபாடுகளைத் தடுக்க ஹைப்போ தைராய்டிசத்தை முன்கூட்டியே கண்டறிவது முக்கியம்.

சிகிச்சையைவிட ஒரு குறைபாடு ஏற்படாமல் தடுப்பது சிறந்தது. எனவே, வாழ்க்கை முறையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று டாக்டர் காவ்யா கூறுகிறார்.

மீன், தயிர், பன்னீர் போன்ற பால் பொருட்கள் என அயோடின் நிறைந்த உணவுகள் மற்றும் கீரை, வெல்லம், பருப்பு போன்ற இரும்புச் சத்து நிறைந்த உணவுகளை உணவில் சேர்க்க வேண்டும் என்கிறார்.

நட்ஸ் மற்றும் விதைகளில் உள்ள செலினியம், பூசணி மற்றும் முந்திரியில் உள்ள துத்தநாகம் ஆகியவை தைராய்டு செயல்பாட்டுக்கு உதவுகின்றன. பதப்படுத்தப்பட்ட உணவுகள், சோயா மற்றும் சமைக்காத பச்சை காய்கறிகளைத் தவிர்க்க வேண்டும். உணவு மாற்றத்திற்கு முன்னர் மருத்துவரை கலந்தாலோசிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறார்.

பிசிஓஎஸ் பிரச்னை இருந்தால் கருத்தரிக்க முடியாதா? - நம்பிக்கையும் உண்மையும்!

பெண்களுக்கு பிசிஓஎஸ் எனும் பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம்பிரச்னை இருந்தால் கருத்தரிக்க முடியாதா? ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி இருந்தால் பிசிஓஎஸ் என்று அர்த்தமா?இதுபோன்று பிசிஓஎஸ் குறித்த தவறான நம்பிக்கைக... மேலும் பார்க்க

காலையில் எழுந்தவுடன் சாப்பிட வேண்டிய 10 புரத உணவுகள்!

உடலுக்குத் தேவையான சத்துக்களில் மிகவும் அத்தியாவசியமானது புரதச்சத்து. புரதங்கள், அமினோ அமிலங்களால் ஆனவை. சுமார் 20 வெவ்வேறு அமினோ அமிலங்கள் இருப்பதாகவும் இவை தசை, எலும்புகள் உருவாக்கம் மற்றும் ஆரோக்கி... மேலும் பார்க்க