வங்கதேச வன்முறை சம்பவங்களில் 1,400 பேர் உயிரிழப்பு!
ஜெனீவா : வங்கதேசத்தில் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக கடந்தாண்டு மாணவர்கள் பெருமளவில் திரண்டு நடத்திய போராட்டங்களின்போது நிகழ்ந்த வெவ்வேறு வன்முறை சம்பவங்களில், அதிலும் குறிப்பாக ஜூலை 15 முதல் ஆக. 5 வரையிலான மூன்றே வாரங்களில் மட்டும், கொல்லப்பட்டதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை சுமார் 1,400-ஐ தாண்டும் என்று ஐ. நா. மனித உரிமைகள் அலுவலகம் புதன்கிழமை(பிப். 12) தெரிவித்துள்ளது.
அந்நாட்டின் பாதுகாப்புப் படைகள் மனித உரிமைகள் மீறலில் ஈடுபட்டதாகவும், போராட்டக்காரர்களை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றிருப்பதும் ஐ. நா. தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள நிலையில், இதன் காரணமாக போராட்டங்களின்போது மனித உரிமை மீறல் குற்றங்கள் அதிகளவில் நடந்ததாகவும், இது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டுமென்றும் ஐ. நா. தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கதேசத்தில் முன்னாள் பிரதமருக்கு எதிரான போராட்டம் மற்றும் வன்முறை சம்பவங்களில் 11,700-க்கும் மேற்பட்டோர் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர்.
நிராயுதபாணியாக இருந்த போராட்டக்காரர்களை பெருமளவில் பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது. வன்முறை சம்பவங்களில் கொல்லப்பட்டோரில் 12 முதல் 13 சதவிகிதத்தினர், அதாவது 180 பேர் குழந்தைகளாவர் என்பது அதிர்ச்சியளிக்கிறது.
போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த அதிகாரத்திலிருப்போரின் இசைவுடன் காட்டுமிராண்டித்தனமாக பாதுகாப்புப் படையினர் நடந்து கொண்டதாகவும் ஐ. நா. மனித உரிமைகள் தலைவர் வோல்கர் டர்க் தெரிவித்துள்ளார்.
வங்கதேசத்தில் ஆட்சி மாறியிருந்தாலும் நிர்வாக அமைப்பில் மாற்றங்கள் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.