RCB: `மீண்டும் கேப்டன் ஆகிறாரா கோலி?' - நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஐ.பி.எல் இல் பெங்களூரு அணியின் புதிய கேப்டன் யார் என்பதை அந்த அணியின் நிர்வாகம் நாளை அறிவிக்கவிருக்கிறது.
![](https://gumlet.vikatan.com/vikatan/2024-05/78dc2c9b-3204-4666-8165-c3000487962d/82b8ee15_1a6c_4314_bc9d_3ff144cf2e33.webp)
பெங்களூரு அணியை பல ஆண்டுகளாக கோலிதான் கேப்டனாக வழிநடத்தி வந்தார். 2021 டி20 உலகக்கோப்பை முடிந்தவுடன் இந்திய அணிக்கான டி20 கேப்டன் பதவியிலிருந்து கோலி விலகினார். அப்போதே பெங்களூரு அணிக்கான கேப்டன் பதவியையும் துறந்தார். கடந்த சில சீசன்களாக பாப் டூ ப்ளெஸ்சிஸ்தான் அந்த அணியை வழிநடத்தி வந்தார். இந்நிலையில், நடந்து முடிந்த ஐ.பி.எல் மெகா ஏலத்தில் டூப்ளெஸ்சிஸை டெல்லி அணி 2 கோடி ரூபாய்க்கு வாங்கியது. பெங்களூரு அணியும் புதிய கேப்டனாக பார்க்கும் வகையில் யாரையும் ஏலத்தில் எடுக்கவில்லை. ஏலத்திற்கு முன்பாகவே கோலி, ரஜத் பட்டிதர், யாஷ் தயாள் ஆகியோரை பெங்களூரு அணி தக்கவைத்திருந்தது.
ஏலத்தில் அணியை வழிநடத்தும் வகையில் எந்த வீரரையும் பெங்களூரு நிர்வாகம் எடுக்கவில்லை.
ஆக, கோலி மற்றும் ரஜத் பட்டிதர் இருவரில் ஒருவரைத்தான் பெங்களூரு அணி கேப்டனாக தேர்ந்தெடுக்கும் நிலையில் இருக்கிறது. ரஜத் பட்டிதர் உள்ளூர் அளவில் சிறப்பாக ஆடியிருக்கிறார். மத்திய பிரதேச அணியை வழிநடத்தி சையத் முஷ்தாக் அலி தொடரின் இறுதிப்போட்டி வரை அழைத்து வந்திருக்கிறார். பெங்களுரு அணியின் கேப்டன் பதவி கிடைத்தால் மகிழ்ச்சிதான் என வெளிப்படையாகவும் பேசியிருக்கிறார். அதேநேரத்தில், ரஜத் பட்டிதர் ஸ்டார் வீரர் இல்லை. அந்தவிதத்தில் பார்த்தால் கோலி பெங்களூரு அணியின் சாய்ஸாக இருக்கக்கூடும். ஆனால், கோலி இதற்கு ஒத்துக்கொள்ள வேண்டும். அதுமட்டும்தான் பிரச்சனை.
![](https://gumlet.vikatan.com/vikatan/2024-05/70bc7324-81ab-4f96-96a4-a748f7065dd6/f9898623_4a71_4879_ada4_aae9bc404a17.webp)
நாளை காலை 11:30 மணிக்கு பெங்களுரு அணி தங்களின் புதிய கேப்டனை அறிமுகம் செய்யவிருக்கிறது.
பெங்களுரு அணியின் கேப்டனாக யார் நியமிக்கப்பட வேண்டும் என்பதை பற்றிய உங்களின் கருத்துகளை கமென்ட் செய்யுங்கள்