Champions Trophy: விலகிய டாப் 4 ஆஸி., வீரர்கள்; 8 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் கேப்டனாக ஸ்மித்!
ஒருநாள் போட்டி தரவரிசைப் பட்டியலில் டாப் 8 அணிகள் மட்டும் பங்கேற்கும், மினி உலகக் கோப்பை என்றழைக்கப்படும் ஐ.சி.சி சாம்பியன்ஸ் டிராபி பிப்ரவரி 19-ம் தேதி தொடங்குகிறது. 2017-க்குப் பிறகு 8 ஆண்டுகளாக சாம்பியன்ஸ் டிராபி நடத்தப்படாமல் இருந்த நிலையில், நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் நாட்டில் அடுத்த வாரம் நடக்கவிருக்கிறது. இந்தியா ஆடும் போட்டிகள் மட்டும், துபாயில் நடைபெறும்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-01-30/6chr59tl/1730891605737Champions-Trophy-2025.jpeg)
ஒருநாள் போட்டி வடிவில் நடத்தப்படும் இந்த சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்னோட்டமாக வங்கதேசத்தைத் தவிர இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இலங்கை ஆகிய மற்ற ஏழு அணிகள் ஒருநாள் தொடரில் ஆடிவருகிறது. கிட்டத்தட்ட அனைத்து அணிகளும் தங்களின் வீரர்கள் பட்டியலை வெளியிட்டுவிட்டது. இந்த நிலையில், ஆஸ்திரேலிய அணி தங்களின் வீரர்களின் பட்டியலை இன்று வெளியிட்டிருக்கிறது.
ஏற்கெனவே கம்மின்ஸ், ஹேசில்வுட், மிட்செல் மார்ஷ் ஆகிய சீனியர் வீரர்கள் காயம் காரணமாக சாம்பியன்ஸ் டிராபியிலிருந்து விலகிய நிலையில், மற்றொரு சீனியர் வீரர் மிட்செல் ஸ்டார்க் தனிப்பட்ட காரணங்களுக்காக சாம்பியன்ஸ் டிராபியிலிருந்து விலகியிருக்கிறார்.
ஆஸ்திரேலிய அணிப் பட்டியல், `ஸ்டீவ் ஸ்மித், சீன் அபோட், அலெக்ஸ் கேரி, பென் ட்வார்ஷூயிஸ், நாதன் எல்லிஸ், ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க், ஆரோன் ஹார்டி, டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், ஸ்பென்சர் ஜான்சன், மார்னஸ் லாபுசாக்னே, க்ளென் மேக்ஸ்வெல், தன்வீர் சங்கா, மத்தம்பா ஷார்ட், கூப்பர் கோனாலி (ரிசர்வ் வீரர்).'
கடைசியாக 2017-ல் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியில் ஆஸ்திரேலிய அணியை வழிநடத்திய ஸ்டீவ் ஸ்மித் தற்போதைய அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார். 2018-ல் பந்தை சேதப்படுத்திய விகாரத்தில் ஓராண்டு தடைக்குப் பிறகு அணிக்குத் திரும்பி வீரராக மட்டும் செயல்பட்டு வரும் ஸ்டீவ் ஸ்மித், ஐ.சி.சி தொடரில் 8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கேப்டனாகக் களமிறங்கவிருக்கிறார்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2019-05/b25659e9-19f6-4acc-90de-740dc295a47b/Australia__6_.jpg)
இருப்பினும், 2023 ஒருநாள் உலகக் கோப்பை வென்ற ஆஸ்திரேலிய அணியில் பவுலிங் யூனிட்டில் பலமாக இருந்த ஹேசில்வுட், ஸ்டார்க், கம்மின்ஸ் ஆகியோர் இல்லாமல், இளம் படையுடன் செல்வது ஸ்டீவ் ஸ்மித்துக்கு நிச்சயம் சவாலானதாக இருக்கும்.
ஐ.சி.சி தொடரில் ஸ்டீவ் ஸ்மித் மீண்டும் கேப்டனாகக் களமிறங்குவது குறித்து உங்களின் கருத்துகளை கமெண்ட்டில் பதிவிடுங்கள்!