சரியும் பங்குச்சந்தை Bank & Metal Sector முதலீட்டாளர்கள் கவனிங்க | IPS Finance -...
மீண்டும் பெண் குழந்தை வேண்டாம்: சிரஞ்சீவி சர்ச்சை பேச்சு!
பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி பெண் குழந்தை பெற்றெடுப்பது குறித்துப் பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் சிரஞ்சீவி தெலுங்கின் முன்னணி நடிகராக அறியப்படுபவர். 69 வயதான சிரஞ்சீவி இன்றும் படங்களில் நடித்து வருகிறார். திரைத் துறையில் இவரது சாதனைகளைப் பாராட்டி மத்திய அரசு இவருக்கு ‘பத்ம விபூஷன்’ விருது வழங்கி கௌரவித்துள்ளது.
இவரது மகன் ராம் சரணும் தெலுங்கின் முன்னணி நடிகராக உள்ளார்.
இந்த நிலையில், நடிகர் பிரம்மானந்தம் நடித்துள்ள ’பிரம்மா ஆனந்தம்’ படத்தின் முன்னோட்ட நிகழ்வில் சிரஞ்சீவி கலந்து கொண்டு பேசியது சர்ச்சையாகியுள்ளது.
இதையும் படிக்க | விஜய் தேவரகொண்டாவின் புதிய படம்: டீசர் வெளியீடு!
அந்த நிகழ்வில் பேசிய சிரஞ்சீவி, “நான் வீட்டில் இருக்கும்போது பேத்திகளுடன் இருப்பதுபோல இருக்காது. பெண்கள் விடுதியில் இருக்கும் விடுதி காப்பாளரைப்போல உணர்வேன். என்னைச் சுற்றி பெண்கள் மட்டும்தான் இருப்பார்கள்.
அதனால் ராம் சரணிடம் இந்த முறையாவது ஒரு ஆண் குழந்தையைப் பெற்று தரும்படி கேட்டுள்ளேன். நமது பரம்பரையைத் தொடர வழிசெய்யுமாறு அவரை வாழ்த்தியுள்ளேன். ஆனால் அவருக்கோ அவருடைய மகள்தான் எல்லாமே. அதனால் மீண்டும் பெண் குழந்தையைப் பெற்றெடுப்பாரோ என்று பயமாக இருக்கிறது” என்று தெரிவித்தார்.
சிரஞ்சீவி பேசியது சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகின்றது. 2025 ஆம் ஆண்டிலும் பிரபல நடிகராக இருக்கும் சிரஞ்சீவி பாலின வேறுபாட்டினை முன்னெடுக்கும் விதமாக பெண் குழந்தைகள் பெற்றெடுப்பதைத் தவிர்க்கும்படி பேசியிருப்பது கண்டிக்கதக்கது என பல்வேறு தரப்பினரும் அவரை விமர்சித்து வருகின்றனர்.