சாம்பியன்ஸ் டிராபி: பயிற்சி ஆட்டங்களில் இந்திய அணி பங்கேற்காது! ஏன்?
Freebies: ``இலவசங்களால் மக்கள் வேலை செய்யத் தயாராக இல்லை" - சுட்டிக்காட்டிய உச்ச நீதிமன்றம்
தேர்தல்களின்போது இலவசங்களை அறிவிக்கும் வழக்கத்தை உச்ச நீதிமன்றம் இன்று விமர்சித்திருக்கிறது.
இந்தியாவில், தேர்தல் சமயங்களில் அரசியல் கட்சிகள் வாக்காளர்களிடம் ஓட்டுக்குப் பணம் கொடுப்பதும், மக்கள் வாங்குவதும் தவறு என்றாலும் இன்று எப்படி அது தவிர்க்க முடியாத அளவுக்குச் சர்வசாதாரணமாகிவிட்டதோ, அதுபோல இலவசங்களை அறிவிப்பதும் அரசியல் கட்சிகளால் தவிர்க்க முடியாததாகிவிட்டது. இன்னும், சொல்லப்போனால் தங்களின் மற்ற வாக்குறுதிகளை விட இலவசங்கள் குறித்த வாக்குறுதிகளையே அரசியல் கட்சிகள் மக்களிடத்தில் முன்வைக்கின்றன.
![](https://gumlet.vikatan.com/vikatan/2019-05/ab2d7ea6-475d-4618-b040-633f31018f07/61724_thumb.jpg)
இந்த இலவசங்கள் உண்மையில் மக்கள் நலனுக்கு என்ற நோக்கில் மட்டும் இருக்கும்போது ஓகேதான். ஆனால், மக்களின் தேவைகள் என்னவென்பதை உணராமல், அரசின் நிதிநிலைமை என்னெவென்பதை அறியாமல் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காக மட்டும் போட்டிபோட்டுக்கொண்டு இஷ்டத்துக்கு இலவசங்களை அறிவிப்பது எந்த வகையில் மக்களின் நலனுக்கானதாக இருக்கும்.
இந்த நிலையில்தான், நகர்ப்புறங்களில் வீடற்றவர்களின் தங்குமிட உரிமை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.ஆர்.கவாய், அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி பி.ஆர்.கவாய், ``துரதிர்ஷ்டவசமாக, இலவசங்களால் மக்கள் வேலை செய்யத் தயாராக இல்லை. ரேஷன் பொருள்கள் இலவசமாகப் பெறுகிறார்கள். எந்த வேலைக்கும் செல்லாமல் பணம் பெறுகிறார்கள். அவர்கள் மீதான அக்கறையை நாங்கள் பாராட்டுகிறோம். அதேசமயம், மக்களை சமுதாயத்தின் மைய நீரோட்டத்தின் ஒருபகுதியாக, நாட்டின் வளர்ச்சிக்குப் பங்காற்ற அனுமதித்தால் நன்றாக இருக்கும்." என்று கூறினார்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2024-08/bee1a9aa-d444-4f9c-8ccf-b22ada96496c/Screenshot_2024_08_01_160141.png)
பின்னர், அரசு தரப்பில் வாதிட்ட அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கடரமணி, ``நகர்ப்புற வறுமை ஒழிப்பு பணியை இறுதி செய்யும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. இது நகர்ப்புற வீடற்றவர்களுக்குத் தங்குமிடம் அளிப்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளைத் தீர்க்கும்." என்று தெரிவித்தார். அதையடுத்து, நகர்ப்புற வறுமை ஒழிப்பு திட்டத்தை மத்திய அரசு எவ்வளவு காலத்துக்குள் இறுதிசெய்யும் என்பதைச் சரிபார்க்குமாறு ஆர்.வெங்கடரமணியிடம் தெரிவித்த நீதிமன்ற அமர்வு, இந்த வழக்கை 6 வாரங்களுக்கு ஒத்திவைத்தது.