உடலுறவு குறித்து சர்ச்சை கருத்து: மக்களை சிரிக்க வைப்பதே குறிக்கோள்! யூடியூபர் விளக்கம்
நகைச்சுவை நடிகர் சமய் ரெய்னாவின் இந்தியாஸ் காட் லேடண்ட் என்ற நிகழ்ச்சியில் பார்வையாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த ரன்வீர் அல்லபாடியா, 'பெற்றோர் உடலுறவு’ கொள்வது குறித்து அவர் பேசியிருப்பது பெரும் சர்ச்சையானது. இந்த விடியோ சமூக வலைதளங்களில் பலரால் பகிரப்பட்டது.
கேலி என நினைத்து இந்திய கலாசாரத்தை அவமதிக்கும் விதத்திலும் மற்றவர்களைப் புண்படுத்தும் விதத்திலும் பேசியுள்ளதாக பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே குடும்ப அமைப்புகளை அவமதிக்கும் வகையில் பேசியுள்ளதாக ரன்வீர், அபூர்வா உள்ளிட்ட யூடியூபர்கள் மீது உச்சநீதிமன்ற வழக்குரைஞர் புகார் அளித்துள்ளார். இவ்விவகாரம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி உள்ளது.
இந்த நிலையில், சமய் ரெய்னா இன்று(பிப். 12) வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “எனக்கு இப்போது ஏற்பட்டுள்ளவற்றை என்னால் தாங்கிக்கொள்ள இயலவில்லை. இந்தியாவின் காட் லேடண்ட் காணொலிகள் அனைத்தையும் எனது யூடியூப் சேனலிலிருந்து நீக்கிவிட்டேன்.
இவ்விவகாரத்தில் விசாரணை நியாயமாக நடைபெறுவதை உறுதி செய்யும் விதமாக விசாரணை முகமைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவேன். நன்றி” என்று பதிவிட்டு விளக்கமளித்துள்ளார்.