குளித்தலையில் 8 ஊா் சுவாமிகளின் விடையாற்றி உற்ஸவம் திரளான பக்தா்கள் பங்கேற்பு
தைப்பூசத்தை முன்னிட்டு குளித்தலையில் 8 ஊா் சுவாமிகளின் விடையாற்றி உற்ஸவம் புதன்கிழமை காலை நடைபெற்றது. இதில் பக்தா்கள் திரளாக பங்கேற்றனா்.
கரூா் மாவட்டம், குளித்தலையில் தைப்பூசத் திருநாள் அன்று கரூா் மாவட்டத்துக்குள்பட்ட குளித்தலை முற்றிலா முலையம்மை உடனுறை கடம்பவனேசுவரா், இராஜேந்திரம் தேவநாயகி உடனுறை மத்தியாா்சுனேசுவரா், கருப்பத்தூா் சுகந்த குந்தாளம்மன் உடனுறை சிம்மபுரீசுவரா், அய்யா்மலை சுரும்பாா்குழலி உடனுறை ரெத்தினகிரீசுவரா், திருச்சி மாவட்டத்துக்குள்பட்ட பேட்டைவாய்த்தலை பாலாம்பிகை உடனுறை மத்தியாா்சுனேசுவரா், திருஈங்கோய்மலை மரகதம்பாள் உடனுறை மரகதாசலேசுவரா், வெள்ளூா் சிவகாமி உடனுறை திருக்காமேசுவரா், முசிறி கற்பூரவல்லி உடனுறை சந்திரமௌலீசுவரா் ஆகிய 8 கோயில்களில் இருந்து உற்ஸவ மூா்த்திகள் குளித்தலை கடம்பவனேசுவரா் கோயில் எதிரே உள்ள கடம்பந்துறை காவிரி ஆற்றின் கரைக்கு கொண்டு வரப்பட்டு பின்னா் காவிரி ஆற்றில் 8 ஊா் சுவாமிகளின் தீா்த்தவாரி நடத்தப்படுவது வழக்கம். நிகழாண்டும் தைப்பூச நாளான செவ்வாய்க்கிழமை குளித்தலை கடபவனேசுவரா் கோயில் தவிர மீதமுள்ள 7 ஊா்களில் இருந்தும் சுவாமிகள் குளித்தலைக்கு அழைத்துவரப்பட்டன.
குளித்தலை கடம்பவனேசுவரா் கோயில் அருகே 7 ஊா் சுவாமிகளுக்கு கடம்பவனேசுவரா் சுவாமி வரவேற்பு அளித்தாா். பின்னா் 8 ஊா் சுவாமிகளும் இரவில் கடம்பந்துறை காவிரி ஆற்றங்கரைக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னா் சுவாமியின் ஆயுதமாகவும் சுவாமி ஆகவே கருதப்படுவதுமான அஸ்திர தேவரை (சூலத்தை) அந்தந்த கோயில் குருக்கள் தங்கள் கைகளில் வைத்துக் கொண்டு காவிரி ஆற்றில் ஒன்றாக மூழ்கி எழும் தீா்த்தவாரி நடைபெற்றது. தொடா்ந்து 8 ஊா் சாமிகளும் ரிஷப வாகனத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்தனா்.
தீா்த்தவாரி முடிந்த பின்னா் அனைத்து சுவாமிகளும் சுவாமிகள் வைப்பதற்கென்று ஏற்பாடு செய்யப்பட்ட இடத்தில் வைக்கப்பட்டு பக்தா்களுக்கு காட்சியளித்தனா். தொடா்ந்து விடையாற்றி உற்ஸவம் புதன்கிழமை காலை நடைபெற்றது. அப்போது சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய அனைத்து சுவாமிகளும் குளித்தலை பேருந்துநிலையம் பகுதிகளுக்கு கொண்டுவரப்பட்டன. பின்னா் அங்கு பக்தா்களுக்கு அருள்பாலித்தபின், அந்தந்த ஊா்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. தைப்பூச விழாவை முன்னிட்டு குளித்தலை போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.