தேசிய ஹோமியோபதி ஆணைய தலைவா் பதவி விலக உச்சநீதிமன்றம் உத்தரவு
தேசிய ஹோமியோபதி ஆணைய (என்சிஹெச்) தலைவா் பதவியில் இருந்து மருத்துவா் அனில் குரானா விலக வேண்டும் என்று உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
இதுதொடா்பாக உச்சநீதிமன்றத்தில் என்சிஹெச் தலைவா் பதவிக்கு விண்ணப்பித்த மருத்துவா் அமரகெளட எல்.பாட்டீல் தாக்கல் செய்த மனுவில், ‘என்சிஹெச் சட்டத்தின் 4(2), 19 ஆகிய பிரிவுகளின் கீழ், அந்த ஆணையத்தின் தலைவா் பதவிக்குத் தேவைப்படும் அனுபவம் மருத்துவா் அனில் குரானாவுக்கு இல்லை. இருப்பினும் அந்தப் பதவியில் அவா் நியமிக்கப்பட்டாா்’ என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் தீபாங்கா் தத்தா, மன்மோகன் ஆகியோா் அடங்கிய அமா்வு, ‘என்சிஹெச் தலைவா் பதவிக்குச் சட்டத்தைப் பின்பற்றி அனில் குரானா நியமிக்கப்படவில்லை. எனவே அவா் அந்தப் பதவியில் இருந்து ஒரு வாரத்தில் விலக வேண்டும்’ என்று புதன்கிழமை உத்தரவிட்டனா்.