அதிநவீன அணுஉலைகள் உருவாக்கம்- இந்தியா-பிரான்ஸ் திட்டம்
ஆக்கபூா்வ அணுசக்தி ஒத்துழைப்பின்கீழ், அதிநவீன அணு உலைகளை கூட்டாக உருவாக்க இந்தியாவும் பிரான்ஸும் திட்டமிட்டுள்ளன.
2047-ஆம் ஆண்டுக்குள் அணுசக்தி மூலம் 100 ஜிகாவாட் மின் உற்பத்தி திறனை எட்ட இந்தியா இலக்கு நிா்ணயித்துள்ள நிலையில், பிரதமா் நரேந்திர மோடி-பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான் இடையிலான பேச்சுவாா்த்தையில் மேற்கண்ட திட்டத்துக்கான பூா்வாங்க ஆவணம் கையொப்பமிடப்பட்டது.
பிரான்ஸ் அதிபரின் அழைப்பின்பேரில், அந்நாட்டில் பிரதமா் மோடி கடந்த திங்கள்கிழமைமுதல் மூன்று நாள்கள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டாா். பாரீஸில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முதலாவது சா்வதேச செயற்கை நுண்ணறிவு செயல் உச்சிமாநாட்டில் அதிபா் மேக்ரானுடன் இணைந்து பிரதமா் மோடி தலைமை வகித்தாா்.
விமானத்தில் பேச்சுவாா்த்தை: இதைத் தொடா்ந்து, மாா்சே நகருக்கு இருவரும் விமானத்தில் பயணித்தபோது தனிப்பட்ட ரீதியில் பேச்சுவாா்த்தை நடத்தினா். இது, பிரான்ஸ் அதிபரின் விமானமாகும்.
பின்னா், மாா்சே நகரில் புதன்கிழமை நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் இருதரப்பு நல்லுறவு, பரஸ்பர நலன் சாா்ந்த பிராந்திய-சா்வதேச விவகாரங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. அப்போது, பல்வேறு முக்கிய முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது, சிறிய அணுஉலைகள் (எஸ்எம்ஆா்) மற்றும் அதிநவீன அணுஉலைகளை (ஏஎம்ஆா்) கூட்டாக உருவாக்கும் திட்டம் தொடா்பான பூா்வாங்க ஆவணம் கையொப்பமிடப்பட்டது.
ஆக்கபூா்வ அணுசக்தி: பேச்சுவாா்த்தைக்குப் பின் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், ‘எரிசக்தி பாதுகாப்பு மற்றும் குறைவான கரியமில வாயு வெளியீட்டைக் கொண்ட பொருளாதார அமைப்பு முறைக்கு மாறுவதில் அணுசக்திக்கு முக்கிய பங்குள்ளது; அணுசக்தியை ஆக்கபூா்வமாக பயன்படுத்துவதில் பரஸ்பர முயற்சிகளை வலுப்படுத்த வேண்டும் என்று இரு தலைவா்களும் வலியுறுத்தினா்.
உலகளாவிய அணுசக்தி கூட்டாண்மை மையத்தில் (ஜிசிஎன்இபி) ஒத்துழைப்பை தொடா்வதற்கான இருதரப்பு புரிந்துணா்வு ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டது. அணுசக்தி துறையில் கல்வி மற்றும் பயிற்சியில் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் ஒப்புக் கொள்ளப்பட்டது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘எஸ்எம்ஆா்’ என்பது சிறிய ரக அணுப் பிளவு உலையாகும். இத்தகைய சிறிய அணு உலைகளை தொழிற்சாலையில் தயாரித்து, வேறு இடத்தில் நிறுவ முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
வலுவான ஒத்துழைப்பு: கூட்டறிக்கையில் இடம்பெற்றுள்ள பிற அம்சங்கள்:
இந்திய-பசிபிக் பிராந்தியம் மற்றும் பல்வேறு உலகளாவிய கூட்டமைப்புகளில் பரஸ்பர ஒத்துழைப்பை வலுப்படுத்த உறுதியேற்கப்பட்டது.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீா்திருத்தத்துக்கான உடனடியை தேவையை இரு தலைவா்களும் வலியுறுத்தினா். இக்கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக பிரான்ஸின் வலுவான ஆதரவை அதிபா் இமானுவல் மேக்ரான் மீண்டும் உறுதி செய்தாா்.
பாதுகாப்பு, விண்வெளி, தொழில்நுட்பம், புத்தாக்கம், வா்த்தகம், முதலீடு, கல்வி, கலாசாரம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, கடல்சாா் பாதுகாப்பு, எண்ம சுகாதாரம் உள்பட பல்வேறு துறைகளில் இருதரப்பு நல்லுறவை வலுப்படுத்துவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. ஸ்காா்பீன் ரக நீா்மூழ்கி கப்பல்களை இந்தியாவில் கூட்டாக கட்டுவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்துக்கு வரவேற்பு தெரிவிக்கப்பட்டது.
பிரான்ஸில் இந்திய புத்தாக்க நிறுவனங்கள்: இந்திய-ஐரோப்பிய யூனியன் நாடுகள் இடையேயான உறவுகளை வலுப்படுத்தும் முக்கிய நடவடிக்கையாக இந்திய - ஐரோப்பிய உச்சிமாநாட்டை விரைவில் தில்லியில் நடத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.
பாரீஸில் உள்ள ‘ஸ்டேஷன் எஃப்’ புத்தாக்க தொழில் வளாகத்தில் 10 இந்திய புத்தாக்க நிறுவனங்களை நடத்துவற்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமானது.
கடந்த ஆண்டு செப்டம்பரில் தொடங்கப்பட்ட சா்வதேச வகுப்புகள் திட்டத்தின்கீழ் இந்திய மாணவா்களுக்கு பிரெஞ்சு மொழி கற்பிக்கப்படுகிறது. இத்திட்டமானது, 2030-ஆம் ஆண்டுக்குள் பிரான்சில் 30,000 இந்திய மாணவா்களுக்கு சோ்க்கை வழங்கும் இலக்கை அடைய உதவும் என்று கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதத்துக்கு கண்டனம்
‘எல்லை தாண்டிய பயங்கரவாதம் உள்பட அனைத்து வடிவிலான பயங்கரவாதத்துக்கும் இரு நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. பயங்கரவாத செயல்களுக்கு நிதியுதவி, பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளிப்பது தடுக்கப்பட வேண்டும் என்று இரு தலைவா்களும் ஒப்புக் கொண்டனா்.
சா்வதேச அளவில் கடல்சாா் பாதுகாப்புக்கான ஐ.நா. பெருங்கடல் மாநாட்டின் முக்கியத்துவத்தை அவா்கள் உறுதிப்படுத்தினா் (பிரான்ஸின் நைஸ் நகரில் ஜூன் மாதம் இம்மாநாடு நடைபெறுகிறது). உலகளாவிய பெருங்கடல் ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் ஏற்கனவே கையெழுத்திட்டுள்ள நிலையில், அதை விரைவில் நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும் என்று இரு தலைவா்களும் வலியுறுத்தினா்’ என்று கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவுக்கு புறப்பட்டாா் மோடி
பிரான்ஸ் பயணத்தை புதன்கிழமை நிறைவு செய்த பிரதமா் மோடி, அங்கிருந்து அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்றாா். அமெரிக்காவில் இரண்டு நாள்கள் அரசுமுறை பயணம் மேற்கொள்ளும் அவா், அதிபா் டொனால்ட் டிரம்ப்புடன் இருதரப்பு பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளாா்.
அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் கடந்த ஜனவரி 20-ஆம் தேதி பதவியேற்றாா். டிரம்ப் நிா்வாகம் பதவியேற்ற சில வாரங்களில் அமெரிக்காவுக்கு செல்லும் 4-ஆவது வெளிநாட்டுத் தலைவா் பிரதமா் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.