உங்கள் காதல் கைகூடுமா? -12 ராசிக்காரர்களுக்கும் ஒரு ஜோதிட வழிகாட்டல்
இந்த வேலன்டைன்ஸ் டே அன்று பிரபோஸ் பண்ணும் ஐடியாவில் இருக்கிறீர்களா... உங்களுக்குக் கட்டம் என்ன சொல்லுது? பிரபோஸ் பண்ணலாமா வேண்டாமா... இந்த ஆண்டு காதல் கைகூடுமா? கல்யாணத்தைத் திட்டமிடலாமா என்று பலரும் யோசித்துக்கொண்டிருக்கிரீர்களா... இதோ உங்களுக்கான ஜோதிட வழிகாட்டல்.
பொதுவாக ஒருவருக்குக் காதல் கைகூட வேண்டும் என்றால் அவரின் ஜாதகத்தில் குருவும் சுக்கிரனும் நல்ல நிலையில் அமைந்திருக்க வேண்டும். தற்போது கோசாரப்படி சுக்கிரன் மீன ராசியில் உச்சம் பெற்று ராகுவோடு சேர்ந்து சஞ்சரிக்கிறார். குருபகவான் ரிஷபராசியில் சஞ்சரிக்கிறார். மேலும் இந்த ஆண்டில் சனிப்பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி ஆகியனவும் நடைபெற உள்ளன. இந்த கிரக மாற்றங்கள் உங்கள் காதல் வாழ்க்கைக்கு சாதகமா என்பதை ஜோதிடர் பாரதி ஶ்ரீதரிடம் கேட்டோம்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-11/hv5thd01/1549612135-8127.avif)
மேஷம் : மேஷராசிக்கு சுக்கிரன் குடும்ப ஸ்தானத்துக்கும் களத்திர ஸ்தானத்துக்கும் உரியவர். எனவே இயல்பாகவே காதல் திருமணம் நிகழ வாய்ப்பிருக்கும் ராசிக்காரர்கள் இவர்கள். இவர்களுக்குத் தற்போது சுக்கிரன் 12 - ல் ராகுவுடன் சேர்ந்து சஞ்சாரம் செய்கிறார். இந்த வேலன்டைன்ஸ் டேக்கு காதலிக்கு விலை அதிகம் உள்ள கிப்ட் வாங்கிக்கொடுக்கத் திட்டமிட்டிருப்பீர்கள். அந்த வகையில் செலவு அதிகரிக்கதான் செய்யும். மற்றபடி இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ஏழரை சனி தொடங்க இருக்கிறது. அதற்குப் பின் காதல் விஷயங்களில் நிறைய கவனம் தேவை. எனவே இந்த பிப்ரவரி 14 -ல் காதலைச் சொல்லத் திட்டமிட்டிருந்தால் தயங்காமல் சொல்லிவிடுங்கள். வெற்றியடைய வாய்ப்பு உண்டு.
ரிஷபம் : ரிஷப ராசிக்கு ராசி அதிபதியே சுக்கிரன்தான். மேலும் ஆறாம் வீட்டு அதிபதியும் அவரே. அவர் ராசிக்கு 11- ம் வீட்டில் சஞ்சரிப்பது மிகுந்த சாதகமான காலமாகும். மேலும் இந்த ஆண்டு நிகழும் அனைத்துப் பெயர்ச்சிகளும் சாதகமாக இருக்கக் கூடியது ரிஷப ராசிக்குதான். இப்படிப்பட்ட ரிஷப ராசிக்கு வரும் பிப்ரவரி 14 -ம் தேதி சந்திரன் 4 -்ல் சஞ்சரிக்கிறார். எனவே துணிந்து காதலைச் சொல்லலாம் நிச்சயம் கைகூடும். திருமணத்திலும் முடியும்.
மிதுனம் : மிதுனத்துக்கு 5 - ம் வீட்டுக்கும் 12- ம் வீட்டுக்கும் உரியவர் சுக்கிரன். அவர் ராகுவோடு சேர்ந்து 10- ல் இருப்பது காதலுக்கு உகந்த கிரக நிலவரம் அல்ல என்றே சொல்லலாம். அதற்காகக் காதல் கைகூடாதா என்றால் கூடும். கொஞ்சம் பொறுமை அவசியம். இந்த வேலன்டைன்ஸ் டேயில் காதலைச் சொல்வதைச் சிறிது தள்ளிப்போடுவதும் நல்லது. ஆகஸ்ட் மாதத்துப்பின் கிரக நிலவரங்கள் சாதகமாகின்றன. ராசியில் அப்போது குருவும் சஞ்சரிப்பார். அந்தக் காலகட்டம், காதலைச் சொல்லவோ ஏற்கவோ காதல் திருமணம் செய்யவோ மிகவும் உகந்தது.
கடகம் : கடக ராசிக்குக் காதல் கைகூடவோ காதல் திருமணம் நடைபெறவோ ஏற்றகாலம் அல்ல. காதலர் தினத்தன்று சனிபகவான் சூரியனோடு சேர்ந்து அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். எனவே காதலால் அவமானம் ஏற்படவும் வாய்ப்புண்டு. எனவே சனிப்பெயர்ச்சிக்கு முன்பு காதல் விஷயங்களில் எச்சரிக்கை தேவை. அதன்பின் உங்கள் காதலைச் சொல்லலாம். இருந்தாலும் ஒரு வருட காலத்துக்குக் காதல் விஷயத்திலும் திருமண விஷயத்திலும் நிதானமாக நடந்துகொள்வது நல்லது. அதன்பின் உங்களுக்குப் பொன்னான காலம் காத்திருக்கிறது.
சிம்மம் : சிம்ம ராசிக்காரர்களும் இந்தக் காதலர் தினம் காதலைச் சொல்ல உகந்த காலம் என்று சொல்லமுடியாது. நிதானம் தேவை. ராசிநாதன் சூரியன் சனியோடு இணைந்து காணப்படுகிறார். சுக்கிரனும் 8- ல் மறைந்து காணப்படுகிறார். மார்ச் மாதத்தில் சனிப்பெயர்ச்சியும் சாதகமற்ற தன்மையிலேயே திகழ்கிறது. ஏற்கெனவே காதல் வாழ்க்கையில் இருப்பவர்கள்கூட அளவோடு பேசுவது நல்லது. காதலர்களிடையே விட்டுக்கொடுத்துப் போகும் மனப்பான்மை அவசியம். தேவையற்ற ஈகோ, போட்டிகளைத் தவிர்ப்பது நல்லது. இந்த நிலையில் புதிய காதல் விஷயத்தில் மிகுந்த எச்சரிக்கை தேவை. ஒருமுறைக்கு நூறுமுறை யோசித்துப் பின் பிரபோஸ் செய்யுங்கள்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-05/yn0lt2tp/hero-image-27.jpg)
கன்னி : கன்னி ராசிக்காரர்களுக்கு சாதகமான காலமாகத் திகழ்கிறது. ஏழில் அமர்ந்து சுக்கிரன் ராசியைப் பார்க்கிரார் குரு பாக்கியஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். ராகு-கேதுவும் மே மாதத்தில் பெயர்ச்சியாகிறார்கள். எனவே காதலைச் சொல்ல இந்த ஆண்டு மிகவும் ஏற்ற ஆண்டு. உச்சம் அடைந்த சுக்கிரன் உங்களுக்கு இன்பமான விருப்பமான வாழ்வைத் தருவார். துணிந்து காதலைச் சொல்லலாம். ஆனால் முடிவு செய்த காதலை சந்தேகப்பட்டுக்கொண்டு இருக்காதீர்கள். அளவுக்கு மீறிய சிந்தனை உங்களைப் பாடாய்ப் படுத்தும் என்பதால் டேக் இட் ஈஸி பாலிஸியைக் கையாளுங்கள். திருமணத்துக்கும் இது ஏற்றகாலம்.
துலாம் : ராசிநாதன் சுக்கிரன் 6 -ல் ராகுவோடு அமர்ந்திருக்கிறார். இந்த ஆண்டு கிரக நிலவரங்களின் படி உங்கள் காதல் வலுவானதுதானா என்பதை உங்களுக்குள்ளேயே ஒருமுறை கேட்டுக்கொள்ளுங்கள். நெருக்கமாகப் பழகுவதுபோல் தோன்றினாலும் அது பொழுதுபோக்காகப் போகுமே தவிர திருமணத்தில் முடியும் என்று சொல்வதற்கு இல்லை. எனவே உங்க்ளுக்குள் உறுதி செய்துகொண்டு பிரபோஸ் செய்யுங்கள். இல்லை என்றால் தேவையற்ற ஏமாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. காதலால் செலவுகளும் அதிகரிக்கும். சனிப்பெயர்ச்சிக்குப் பின் நல்ல மாற்றங்கள் நிகழும். அதற்குப் பின் காதலைச் சொல்லவோ ஏற்கவோ செய்வது மிகவும் நல்லது.
விருச்சிகம் : 5 -ம் இடத்தில் சுக்கிரன் உச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். குருவும் 7 -ல் சஞ்சாரம் செய்கிறார். இது மிகவும் சிறந்த அமைப்பு. சனிப்பெயர்ச்சியோடு அர்த்திராஷ்டம சனியும் முடிகிறது. எனவே நல்ல காலம் பிறக்க இருக்கிறது. எனவே துணிந்து காதலைச் சொல்லலாம். தகுதியுடைய நபரைச் சந்திக்கும் வாய்ப்புகள் ஏற்படும். திருமணம் கைகூடும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.
தனுசு : 7 - ல் செவ்வாய், 4 -ல் சுக்கிரன், 6 -ல் குரு சஞ்சாரம் செய்யும் இந்தக் காலகட்டம் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டியது. ஏற்கெனவே காதல் வாழ்வில் இருப்பவர்களாக இருந்தால் மிகவும் நிதானம் தேவை. அவசரப்பட்டு முடிவுகள் எடுக்க வேண்டாம். ஏழாம் வீட்டுக்கு குருபகவான் மே மாதம் பெயர்ச்சி ஆவார். அதன் பின் காதல் குறித்த முடிவுகளையோ திருமணம் குறித்த முடிவுகளையோ எடுக்கலாம். அதற்கு முன் உணர்ச்சி வசப்பட்டு முடிவுகள் எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது.
மகரம் : இந்த ஆண்டு காதலர் தினம் மகர ராசிக்கு சந்திராஷ்டம தினமாக அமைகிறது. எனவே குறிப்பாக அந்த நாளில் பிரபோஸ் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. அடுத்த மாதம் சனிப்பெயர்ச்சி முடிந்ததும் காலம் சாதகமாக மாறுகிறது. அப்போது முடிவுகளை எடுக்கலாம். எனவே உங்கள் காதலை வெளிப்படுத்திக் கொள்ளாமல் ஓரிரு மாதங்கள் காத்திருந்து செயல்படுவது மகர ராசிக்காரர்களுக்கு மிகவும் நல்லது. 6 -ம் வீட்டுக்கு குரு மே மாதம் பெயர்ச்சி ஆனாலும் குடும்ப ஸ்தானத்துக்கு அவர் பார்வை கிடைப்பது மிகவும் நல்ல விஷயம். எனவே இந்தக் காதலர் தினத்தில் மட்டும் நிதானத்தைக் கடைப்பிடித்து அமைதியாக இருங்கள்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2019-05/81f619f9-71fd-459a-8c4c-0f061e5a80cf/130654_thumb.jpg)
கும்பம் : கும்பராசிக்காரர்கள் அடுத்த ஓர் ஆண்டுக்குப் புதிய காதல் முயற்சிகளில் இறங்காமல் இருப்பது நல்லது. இரண்டாம் வீட்டுக்கு உரிய குருபகவான் 4 -ம் வீட்டில் இருக்கிறார். அதேவேளையில் 4 க்கு உரிய சுக்கிரன் 2 -ம் வீட்டில் சஞ்சரிக்கிறார். எனவே இந்தப் பரிவர்த்தனை யோகம் காதல் போன்ற உணர்வுகளைக் கொடுத்தாலும் அது நிலைத்திருக்குமா என்பது சந்தேகமே. எனவே காதல் முயற்சிகளைக் கைவிட்டு அன்றாடப் பணிகளில் கவனம் செலுத்துங்கள். ராசி நாதன் சனிபகவான் சனிப்பெயர்ச்சிக்குப் பின் இரண்டாம் இடம் சென்ற பின்னும் மேமாதம் குருபகவான் 5 -ம் இடம் சென்ற பின்னும் காதல் குறித்து சிந்திக்கலாம். அதன் பின் பிரபோஸ் செய்வது சாதக பலன்களைக் கொடுக்கும்.
மீனம் : ராசியிலேயே சுக்கிரனும் ராகுவும் சஞ்சரிப்பதால் காதல் குறித்த குழப்பத்தில் இருப்பார்கள் மீன ராசி அன்பர்கள். ஏற்கெனவே இருக்கும் காதலையும் தொடரலாமா என்கிற சந்தேகமும் முளைக்கும். இப்படிப்பட்ட குழப்பமான சூழல் நிலையைல் புதிய காதல் முடிவுகளை எடுக்க வேண்டாம். ஒருவேளை இந்தக் காலகட்டத்தில் காதல் கைவிட்டுப்போனாலும் அதுவும் நல்லதுக்கே என சிந்தியுங்கள். சனி மார்ச் மாத இறுதியில் ராசிக்குள் வருகிறார். சுறுசுறுப்பாக இருக்க வேண்டிய காலம் இது என்பதால் காதல் முடிவுகளில் மட்டும் அவசரம் காட்டாமல் வாழ்க்கையை வளமாக்கும் சிந்தனைக்கு முக்கியத்துவம் கொடுங்கள். அடுத்த ஆண்டு (2026) 5 - ல் குரு உச்சமடைவார். அப்போது துணிந்து காதல் வாழ்க்கையில் இறங்கலாம். திருமண வாழ்க்கையும் சாதகமாக இருக்கும்.