`நெருக்கமாகப் பழகுவதுபோல் தோன்றினாலும்...' - துலாம் ராசிக்காரர்களுக்கு ஒரு ஜோதிட...
வக்ஃப் மசோதா அறிக்கை தாக்கல்: நாடாளுமன்றத்தில் அமளி!
வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் தொடா்பான கூட்டுக்குழு அறிக்கை நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வக்ஃப் சட்டத் திருத்த மசோதா குறித்து ஆராய பாஜக எம்.பி. ஜகதாம்பிகா பால் தலைமையில் நாடாளுமன்றக் கூட்டுக் குழு அமைக்கப்பட்டது. பல கட்ட ஆலோசனைகளுக்கு பிறகு கடந்த மாதம் கூட்டுக்குழு உறுப்பினர்களின் பரிந்துரைகள் இறுதி செய்யப்பட்டன.
மசோதாவில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் குறித்த 655 பக்ககங்கள் கொண்ட அறிக்கைக்கு கூட்டுக்குழுவில் ஒப்புதல் அளிக்கப்பட்டு, அவைத் தலைவர் ஓம் பிர்லாவிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
இதையும் படிக்க : தில்லியில் ரூ. 150 கோடியில் கட்டப்பட்டுள்ள ஆர்எஸ்எஸ் அலுவலகம்!
இந்த நிலையில், நாடாளுமன்ற அவைகளில் கூட்டுக்குழுவின் அறிக்கை இன்று காலை தாக்கல் செய்யப்பட்டன, இதனை எதிர்த்து மக்களவையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால் பகல் 2 மணிவரை அவை ஒத்திவைக்கப்பட்டது.
மாநிலங்களவையிலும் வக்ஃப் மசோதா கூட்டுக்குழு அறிக்கைக்கு எதிராக எதிர்க்கட்சி எம்பிக்கள் முழக்கமிட்டு வருகின்றனர்.
நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் இடம்பெற்றுள்ள ஆளுங்கட்சி எம்.பி.க்கள் தரப்பில் முன்மொழியப்பட்ட 32 திருத்த பரிந்துரைகளை கூட்டுக் குழு முழுமையாக ஏற்றுக்கொண்டதாகவும், எதிா்க்கட்சி உறுப்பினா்கள் தரப்பில் முன்மொழியப்பட்ட 500-க்கும் மேற்பட்ட பரிந்துரைகளை முழுமையாக நிராகரிக்கப்பட்டதாகவும் எதிா்க்கட்சிகள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.