அவன்... அவள்... அது! - இறுதி நிமிடங்களின் வலி | My Vikatan
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
சென்னையின் பரபரப்பான காலை பொழுது.. தலைக்கு மேலே சூரிய தகிப்பு . பாதங்களின் அடியில் அவனது வெப்ப பரவல். வேகம்..வேகம்.. வேகம் மட்டுமே பிரதானமாய் அமைந்திருந்த காலை பொழுது அது.
பெட்ரோல் வாசம், யாரோ யாரையோ கூவி அழைக்கும் ஓசை, தள்ளுவண்டியில் கடலை வறுபடும் வாசம் என கலவையான ஒலி, வாசனைகளின் சங்கமம். வண்டிக்காரன் தள்ளுவண்டியின் வாணலியில் சீரான தாள நயத்தில் கரண்டியை தட்டும் தாளத்தை அந்த நிலையிலும் அவளால் ரசிக்க முடிந்தது.
பெட்டிக்கடையின் வாசலில் இருவர் தேநீருடன் சமகால அரசியலை விவாதித்துக் கொண்டிருந்தனர். தேநீரை விட இதில் தான் சூடு பறந்தது.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-03/24zxsq0j/f439190a-4174-42a2-b796-c714890815c1.jpg)
மௌனமாய் அவர்களை கடக்கையில், அவளது இதழோரம் புன்னகை மலர்ந்தது. இதுபோல எத்தனை விவாதங்கள்.. எத்தனை.. எத்தனை.. அவனது ஆழமான புரிதலை எண்ணி எத்தனையோ முறை வியந்திருக்கிறாள். மறுமுறை அதே விஷயத்தைப் பற்றி அடுத்தவரிடம் விவாதிக்கும்போது அவனது குரலை எதிரொலித்திருக்கிறாள். அவன்.. அவன்.. அவளது எல்லாமாய் இருந்தவன்.. இருப்பவன்.. அவனைப் பற்றி நினைக்கையில் மெலிதாய் ஒரு தென்றலின் வருடலை இன்றும் கூட அவளால் உணர முடிந்தது. கண்களில் ஒரு மெல்லிய வெளிச்சம் தோன்ற உதடுகள் கூட புன்னகைக்க முயன்றன.
"காப்பியா டீயா மா ??" தேநீர் கடைக்காரரின் குரலில் கலைந்தாள்.
" ஒரு காபி !! சர்க்கரை அதிகமா!! அதுக்கு முன்னாடி கொஞ்சம் சுடுதண்ணீர் வேணும்.."
அவரது கையில் இருந்த குவளையை கைநீட்டி வாங்கியவள், மெதுவாய் ஒரு வாய் குடித்தாள். கடைக்காரர் காபி தயாரிப்பில் முனைப்பாய் இருந்தார். அங்கிருந்து மர பெஞ்சில் அமர்ந்தவள் அருகில் இருந்த பெண்ணிடம் மெதுவாய் விசாரித்தாள்.
புகழ்பெற்ற அந்த மருத்துவமனையின் பெயரைச் சொல்லி, "இன்னும் எவ்வளவு தூரம்?", என்று கேட்டாள் . "இன்னும் இரண்டு சிக்னல் தூரம் தாம்மா.. நேரா போய் அந்த ஆர்ச் கிட்ட திரும்புங்க.. ஆஸ்பத்திரி தெரியும்", சொன்னவள் அருந்தி கொண்டிருந்த டீக்கான காசை எண்ணி எடுத்தாள்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-03/f6vs7jo4/sunset-68780211280.jpg)
கையில் காப்பியுடன் வந்த கடைக்காரர் அவளது கையில் கொடுத்து விட்டு நகர்ந்தார். கண்ணுக்கெட்டிய தொலைவில் தெரிந்த சிக்னலை பார்த்தவள், மெதுவாய் காபியை அருந்தியபடி நினைவுகளுக்குள் நழுவினாள் .
"உன்னோட டைமிங் சூப்பர் குட்டிமா!!! நேத்தும் இதே இடத்துல நிக்கும்போது தான் கூப்பிட்ட ..இன்னைக்கும் கரெக்டா கூப்பிடுற!", என்றோ ஒருநாள், எத்தனையோ வருடங்களுக்கு முன் அவன் சிரிப்புடன் சொன்னது நினைவில் ஆடியது .
இன்னமும் அவன் அங்கேயேதான் பணிபுரிவானா ..ஏதோ நம்பிக்கையில் வந்தாயிற்று!! அவன் அங்கு இல்லை??? என்றால் நினைக்கும் போதே கண்கள் இருட்டியது அவளுக்கு. 'இத்தனை தூரம் கொண்டு சேர்த்து இறைவா.. கைவிட்டு விடாதே!!' , மனதுக்குள் அவசரமாய் வேண்டுதல் முளைத்தது. நடு நெஞ்சில் சுரீரென ஓர் ஊசி குத்தலை உணர்ந்தாள். அவனிடம் என்றோ சொன்ன அந்த "காலம்" நெருங்குவதை உணர்ந்தாள் .
காபிக்கான பணத்தை நீட்டியவள் "காபி ரொம்ப நல்லா இருந்ததுங்க" என்ற வாக்கியத்தையும் சேர்த்து உதிர்த்தாள். அவரது நன்றிகலந்த புன்னகையை பெற்றுக்கொண்டு நடக்க ஆரம்பித்தாள். இந்நேரம் அவளை தேட ஆரம்பித்து இருப்பார்கள். சின்னவள் மிகவும் அழுவாள். எத்தனை வயதானாலும் அவள் இன்னும் குழந்தைதான்.
மகளை நினைக்கையில் அவள் மனதிற்குள் ஏதோ ஒன்று மெதுவாக அசைந்தது. தலையை உலுக்கி நினைவை விரட்டினாள். நேரம் அதிகமில்லை... மனதுக்குள் மணியடித்தது. கால்களை எட்டி போட்டு விரைவாய் நடந்தாள். இதோ, இந்த கட்டடம் தான். நன்றி முருகா... ஒருவாறு கொணர்ந்து சேர்த்து விட்டாய். கண்கள் கசிய அந்த மருத்துவமனையின் பெயரை படித்தவள், தான் செல்ல வேண்டிய துறையின் பெயர்பலகையைத் தேடினாள். அதோ... அதுதானே... தேடியது கிடைத்த மகிழ்ச்சியில், விரைவாய் நடந்தாள்.
"மீட்டிங்க்கு வந்தீங்களாம்மா... சீக்கிரமா போங்க... இப்போதான் ஆரம்பிச்சது.. இடையில குறுக்க போனா டாக்டர்க்கு பிடிக்காது" யாரோ ஒருவர் வழிகாட்டி விட்டு நகர்ந்தார். அவரது உடுப்பு மருத்துவமனை பணியாள் என்று சொன்னது. இவளை ஏதோ பத்திரிகை நிருபர் என்று நினைத்து விட்டது புரிந்தது. நல்லதுதான்!! இல்லை என்றால் இந்த கூட்டத்தை எப்படி கடப்பது ?
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-03/8hns32nd/9ef5253e-d259-47ca-a998-b4aea77fdcf3.jpg)
அவனை எங்கே தேடுவது .. இங்கே தான் இருப்பானா..ஏதோ உள்ளுணர்வில் வந்தாயிற்று. தவறாக இருந்தால்??கடவுளே... மறுபடி ஓர் ஊசி குத்தலை நடு நெஞ்சில் உணர்ந்தாள்.. இல்லை... குழம்பக் கூடாது. தனக்குள்ளே உருப்போட்டவள், மேலே நகர்ந்தாள்.
"இங்கே உக்காருங்கம்மா", யாரோ இடம் பார்த்து அமர வைத்தார்கள் ஐயோ.. இவளது அவசரம் புரியாமல் இது வேறு தொல்லை. நேரம் மிகவுமே குறைந்து கொண்டே போவதை இவர்களுக்கு எப்படி புரிய வைப்பது ? கடவுளே கை விட்டு விடாதே. நடந்த களைப்பில் சில நிமிடம் கண்களை மூடி ஆசுவாசித்தாள்.
"இவர் பொறுப்பெடுத்து கொண்டதில் இருந்து இது போல நிறைய விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்துகிறார். இந்த முறை முதல் பக்கத்தில் இந்த செய்தி வரவேண்டும் என்று எடிட்டர் சொன்னார்" என அருகிலிருந்த இரு நிருபர்கள் பேசியதில் கண் விழித்து பார்த்தவளுக்கு காலடியில் பூமி நழுவியது .
இது அவன் அல்லவா ..யாரை பார்க்க பல ஆயிரம் மைல்களைத் தாண்டி வந்தாளோ, யார் அருகில் அவளது இறுதி நிமிடங்களை கழிக்க வந்தாளோ, யார் முகம் பார்த்து விழி மூட நினைத்தாளோ அவனே அவள் எதிரில் மேடையில் இருந்தான் .
அருகில் இருந்தவரிடம் ஏதோ பேசி புன்னகைத்தான். அவனது கல்வி தகுதி மற்றும் ஆளுமை திறன் பற்றி எல்லாம் ஏதேதோ பேசி சிறப்புரை வழங்க அவனை அழைத்தார்கள் . அவனுக்கே உரிய மெல்லிய புன்னகையுடன் பேச 'ஆரம்பித்தான் .
"டீச்சர் வீடு இது தானா?" தயக்கத்துடன் கேட்டபடி வாசலில் நின்ற பதின்ம வயதின் 'அவன்' ஒரு நொடி அவளது விழிகளில் வந்து மறைந்தான். வாசலில் விளையாடிக் கொண்டிருந்தவள் , தன் கருமணிக் கண்களை விரித்து பார்த்தாள். அது தான் அவர்களது முதல் அறிமுகம் .
"டீச்சர் பொண்ணா நீ?", கதவைத் திறந்தவளிடம் வாஞ்சையாய்க் கேட்டு புன்னகைத்தவனை ஏனோ அவளுக்கு மிகவும் பிடித்து போனது.
"சாப்பிட்டியாடா ??" , அவனது பசி உணர்ந்து , அவள் அம்மா சுட்டுவைத்த தோசைகளை அவனுக்கு ஓடி ஓடி பரிமாறியவளிடம் , "போதும் பாப்பா " , என்று புன்னகைத்த நொடியில், அவனுக்கும் அவளுக்குமான நட்பு பிறந்தது.
"டீச்சர், மெடிக்கல் காலேஜ்-ல சீட் கிடைச்சிருக்கு" சந்தோஷமாய் சொல்லியபடி ஒருநாள் வந்தான் . படிப்பில் முதலாவது வந்ததற்காக அவளுக்கு பரிசாகக் கிடைத்த ஸ்கெட்ச் பேனா செட்டை அவனிடம் கொடுத்து " இது வச்சு எழுதிக்கோ" என்றவளிடம் "வேண்டாம் மா" , என்று புன்னகை செய்த அவன் , அவளுக்கு மிகவும் பிடித்த நண்பனாக மாறிப் போனான் .
அவள் வளர வளர அவர்களின் நட்பும் வளர்ந்தது. பள்ளியில் தோழிகளுடன் சண்டை போட்டது, வீட்டில் அம்மா திட்டியது , தம்பி அவளது பேனாவை உடைத்து அப்பாவிடம் அடி வாங்க வைத்தது, அவள் பார்க்க பார்க்கவே அணில் குஞ்சை பூனை தூக்கி சென்றது .. இப்படி சகலத்தையும் அவனிடம் பகிர்ந்து கொண்ட பின்பே அவளது மனது அமைதி அடையும்.
அவளது பள்ளி இறுதி ஆண்டும், அவனது மருத்துவ படிப்பின் இறுதி ஆண்டும் ஒன்றாக அமைந்தது. நண்பனாக இருந்தவன், அவளுக்குப் பாடம் கற்று கொடுத்த குருவும் ஆகி போனான். அவள் நூலிழையில் மருத்துவ படிப்பை தவற விட்டு பின் பொறியியல் படித்தாள். அவன் இந்திய விமானப்படையில் பணியில் சேர்ந்தான் .
விடுமுறை நாட்களில் ஊருக்கு வருபவன் , அவளை பார்க்காமல் பணிக்குத் திரும்ப மாட்டான் . அவளும் படிப்பை முடித்து பணியில் அமர்ந்தாள். காலம் அவளது வாழ்கையில் ஒரு ஊழித் தாண்டவம் ஆடியது. அவளது மனம் கொண்ட ஊமைக் காயம் அவளை குற்றுயிராய் மாற்றியது. இது எதையும் உணராமல் அவன் வாழ்க்கையில் காலூன்ற போராடிக் கொண்டிருந்தான். ஒரு கட்டத்தில் அவனொன்று கேட்க இவள் புரியாமல் மறுக்க, சுழல் காற்றாய் வாழ்கை இருவரையும் சுழற்றிப் பிரித்தது .
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-03/12zqc5fm/bb2ee4a9-e6d4-41dd-bc25-86e03fbca2d8.jpg)
வருடங்கள் உருண்டோடின. மனதளவில் உடைந்து உதிர்ந்து போனவள் பிள்ளைகளின் முகம் கண்டு வாழ பழகினாள். இதோ அவர்களையும் மருத்துவர்களாக்கிப் பார்த்து விட்டாள். இது தான் நமக்கு விதிக்கப்பட்டது என ஒருவாறு வாழப் பழகியவளை, மறுபடி காலம் தன் கொலை கரங்களைக் கொண்டு வருடிப் பார்த்தது. தனக்கு நான்காம் நிலை கல்லீரல் புற்றுநோய் என்று அறிந்தவள், தான் இறுதி நொடிகளை எங்கு கழிக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டாள் .
மனதின் ஆழத்தில் மறைத்துப் புதைந்திருந்த அவனது நினைவுகள், தன் ஆக்டோபஸ் கரங்கள் அவளை வளைத்தன. இது யாரிடமும் சொல்லாமல் பல ஆயிரம் மைல்களைக் கடந்து வந்து விட்டாள். அவனை பார்த்தும் விட்டாள்.
அவனுக்கே உரிய நிதான நடையில் பேசியவன், அவளுக்கு பாடம் கற்று கொடுத்த நாட்களை நினைவு படுத்தினான். கண்களில் கண்ணீர் வழிய , உதடுகளில் புன்னகை உறைய அத்தனை வருட பிரிவை ஈடு செய்பவள் போல இமைக்காமல் பார்த்தபடி இருந்தவள், ஆழமான ஊசி குத்தல்களை மறுபடி உணர்ந்தாள்.
இது அவளது நேரம். யாரும் அவளது பார்வையில் இருந்து அவனை அகற்ற முடியாது. அவன் குரலை அவள் செவிகள் கேட்காமல் பிரிக்க முடியாது. விழிகளில் அவன் உருவம், செவிகளில் அவன் குரல். மனதெங்கும் அவனோடு பேசிச் சிரித்த நினைவுச் சுவடுகள். அவளது உயிர் உடல் நீங்கியது.
"நல்லா தான் இருந்தாங்க. திடீர்னு சரிஞ்சிட்டாங்க. டாக்டரை கூப்பிடுங்க. உடனே பார்த்தா காப்பாத்திரலாம்" யாரோ மருத்துவரை அழைக்க விரைய,
"அது" வாகிப் போனது "அவள் " என்பதை அறியாமல் , அவன் மேடை விட்டிறங்கி விரைந்து வந்தான்.
- செல்வ கிருத்தியா கௌரிநாதன்
கலிபோர்னியா
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!
![](https://gumlet.vikatan.com/vikatan/2024-01/f15e0a9f-a100-48d1-abc8-2fd0e06ecd17/IMG_1910.png)
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...