கார் ஓட்டிக்கொண்டே மடிக்கணினியில் வேலை பார்த்த பெண்: காவல்துறை அபராதம்!
``அறிவாலயத்தை தொட்டுக் கூடப் பார்க்க முடியாது..."- அண்ணாமலையின் பேச்சுக்கு அமைச்சர் சேகர் பாபு பதில்
சென்னை திருவான்மியூரில் பா.ஜ.க-வின் பட்ஜெட் விளக்க பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய அண்ணாமலை, ``தமிழ்நாட்டு பா.ஜ.க-வின் தலைவர் பதவியில் நான் தொடர முடியாது என்பது எனக்கு நன்றாகவே தெரியும். ஆனால் இந்த பதவியில் இருந்து செல்லும் போது தி.மு.க-வின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் உள்ள ஒவ்வொரு செங்கல்லையும் எடுக்காமல் விடமாட்டேன். பா.ஜ.க தலைவராக அண்ணாமலையே இருக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-01-31/x9b49nyx/IMG20250131124628.jpg)
ஒரு மனிதனுக்கு வாய்க்கொழுப்பு அதிகமாகிவிட்டால் அழிவு ஆரம்பம் என அர்த்தம். ஆணவத்தின் உச்சத்தில்தான் முதல்வர் பேசுகிறார். இன்னொரு கட்சித் தலைவர் யார் என்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்வாராம். உங்களுக்கு பின் உதயநிதி, இன்பநிதி என நீங்கள்தான் துண்டை போட்டு வைத்திருக்கிறீர்கள். ஊழல் பெருச்சாளிகள் 35 அமைச்சர்கள் அடுத்த ஆண்டு சிறைக்குச் செல்வதை பார்ப்பதற்கு நான் இருப்பேன். இதில் எந்த சந்தேகமும் இல்லை." எனப் பேசினார்
இதற்குப் பதிலளித்துப் பேசிய இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, ``தி.மு.க-வை அழிக்க வேண்டும் என நினைத்தவர்கள் எல்லாம் மண்ணோடு மண்ணாகிப் போனதுதான் வரலாறு. தி.மு.க தொண்டர்கள் இந்த மண்ணிலே பிறந்து, வளர்ந்து, அரசியலைக் கரைத்துக் குடித்தவர்கள். அவர்களைப் போல இறக்குமதி செய்யப்பட்டவர்கள் அல்ல.
தி.மு.க-வின் ஆலயமாக கருதும் அறிவாலயத்தை தொட்டுக் கூடப் பார்க்க முடியாது. அவர் எப்படி செங்கல்லை பறிக்க முடியும். ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க-வை அசைத்துப் பார்க்க இன்னொருவர் பிறந்து வரவேண்டும். இவர்களின் ஆணவப் பேச்சுக்கு தமிழ்நாட்டின் மக்கள் 2026-ல் பதிலளிப்பார்கள். முதலில் ஒரு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று, சட்டமன்ற உறுப்பினராக அவர் முயற்சி செய்யட்டும். அவரை எதிர்த்து நிற்க தி.மு.க-வின் கடைக்கோடி தொண்டர் போதும்." என்றார்.