கழுகார்: 'கோட்டை' சீனியருக்கு 'கீ' கொடுத்தாரா தங்கமான மாஜி? டு சிக்கலில் மாட்டிய 'சக்கர'ப் புள்ளி!
'ஜில்' மாவட்டத்தில், மாநில அரசுத் திட்டம் முதல் மத்திய அரசுத் திட்டம் வரை எல்லாவற்றுக்கும் கப்பம் வசூலித்துவந்தார் அந்த மாவட்ட ஆளுங்கட்சியின் முக்கியப் பிரமுகர். இந்த நிலையில், உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிவடைந்திருப்பதால், உடனே அதிகாரிகள் பக்கம் கப்பம் வசூலிக்கத் தொடங்கிவிட்டாராம் அவர். அதோடு, 'இனி லோக்கல் ஆளுங்கட்சி நிர்வாகிகளுக்கு எந்தப் பங்கும் கொடுக்க வேண்டாம். என்னிடமோ அல்லது என்னுடைய வாரிசிடமோ நேரடியாகக் கப்பம் கட்டிவிடுங்கள்' என்றும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவு போட்டிருப்பதால், லோக்கல் ஆளுங்கட்சிப் புள்ளிகள் கடுப்பாகியிருக்கிறார்கள். அவர்கள், அந்த முக்கியப் பிரமுகர் குறித்து மேலிடத்துக்குப் புகார்களையும் தட்டிவிட்டிருக்கிறார்களாம். ஆனாலும், அவர்மீது இதுவரை எந்த நடவடிக்கையும் பாயவில்லை. மேலிடமே கண்டுகொள்ளவில்லை என்றதும் குஷியான அந்த முக்கியப் பிரமுகர், கப்பத்துக்கான ரேட்டை மேலும் உயர்த்தியிருக்கிறாராம். இதனால் அதிகாரிகளும், லோக்கல் ஆளுங்கட்சி நிர்வாகிகளும் செம கடுப்பில் இருக்கிறார்கள்!
2021 சட்டமன்றத் தேர்தலில், தென்கோடி மாவட்டத்திலுள்ள ஒரு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார் தி.மு.க-வின் அமைப்புப் புள்ளி ஒருவர். அதையடுத்து, சொந்த மாவட்டத்துக்கு வருவதை அறவே குறைத்துக்கொண்டார் அவர். 'இனி மாவட்ட அரசியலுக்குள் அவர் வர மாட்டார்' எனக் கருதிய லோக்கல் புள்ளிகள், அவரது தொகுதியில் தங்களுக்காகத் தீவிரமாகக் கட்சி வேலை பார்த்துவருகின்றனர். சீட்டுக்காகவும் அந்த லோக்கல் புள்ளிகள் காய்நகர்த்திவருகிறார்கள். இதை அறிந்த அந்த அமைப்புப் புள்ளி, 2026 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் களமிறங்க ஆயத்தமாகிறாராம். 'என் தொகுதியில் நன்றாக வேலை பார்த்து வைத்திருக்கிறேன். நீங்க சீட் கொடுத்தால், நிச்சயம் வெற்றிபெறுவேன்' என்று தலைமையிடமும் கேட்டிருக்கிறாராம். விஷயத்தைக் கேள்விப்பட்டவுடன் கடுப்பான லோக்கல் புள்ளிகள், 'தோற்றவுடன் சென்னைக்கு ஓடிட்டாரு. நாங்கதான் கஷ்டப்பட்டு லோக்கல்ல சிறப்பா கட்சியை வெச்சுருக்கோம். இப்ப நோகாம வந்து மறுபடியும் சீட் கேட்கறாரா..?' என்று தலைமைக்கு நெருக்கமானவர்களிடம் கொதித்திருக்கிறார்கள்!
பூட்டு மாவட்ட டி.ஐ.ஜி-யாக இருந்த பெண் ஐ.பி.எஸ் அதிகாரி, மத்திய அரசுப் பணிக்குச் சென்றுவிட்டதால் அவரது பணியிடம் காலியாகிவிட்டது. ஏற்கெனவே தூங்கா நகர, பட்டு நகர டி.ஐ.ஜி பொறுப்புகள் காலியாக இருப்பதால், அந்தப் பணியிடங்களைக் கூடுதல் பொறுப்பாக அண்டை மாவட்ட அதிகாரிகள்தான் கவனித்துவருகிறார்கள். ‘கூடுதல் பணிச்சுமை காரணமாக, அவர்களுடைய மாவட்டங்களில் சரியான கண்காணிப்பு இல்லை’ என்று புகார் எழுந்திருக்கும் நிலையில், தற்போது பூட்டு மாவட்டப் பொறுப்புக்கும் புதிய அதிகாரிகளை நியமிக்காமல், அண்டை மாவட்ட அதிகாரிக்குக் கூடுதல் பொறுப்பு வழங்கியிருக்கிறது காக்கி மேலிடம். இந்த நிலையில், பூட்டு மாவட்ட அதிகாரியைத் தொடர்ந்து, அவருடைய உறவினர் ஒருவரும் மத்திய அரசின் பணிக்குத் தாவ இருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. இப்படி, அடுத்தடுத்து காலியாகும் பணியிடங்களுக்குப் புதியவர்களை நியமிக்காமல், கூடுதல் பொறுப்பாகவே வழங்கப்படுவதால், பணிச்சுமை காரணமாக ரொம்பவே டயர்டாகியிருக்கிறார்களாம் சீனியர் காக்கிகள்!
சூரியக் கட்சி சார்பாக சென்னை புறநகரில் நடந்த கூட்டம் ஒன்றில் பங்கேற்ற கையோடு, அந்தப் பகுதியிலுள்ள 'முருகக் கடவுள்' பெயர்கொண்ட நிர்வாகியின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார் துணையானவர். இந்த விவகாரம்தான் தற்போது பெரும் சர்ச்சையாகியிருக்கிறது. 'அந்த நிர்வாகிமீது நீதிமன்ற வழிகாட்டுதலில் வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. அவர்மீது போலீஸ் நடவடிக்கை எடுத்துவிடாமல் இருப்பதற்காக, துணையானவரை அங்கு அழைத்துச் சென்றிருக்கிறார் மாவட்டத்தின் 'சக்கர'ப் புள்ளி. இந்த விவகாரம் துணையானவரின் காதுக்கு எட்டவே, 'உங்களை நம்பி தொகுதிக்கு வந்தா... இப்படிப் பஞ்சாயத்து இருக்குறவரு வீட்டுக்குத்தான் அழைச்சுட்டுப் போவீங்களா... இனி இந்தப் பக்கம் வராதீங்க' என்று 'சக்கர'ப் புள்ளியிடம் கடுமை காட்டியிருக்கிறார் துணையானவர். ‘முருகப் புள்ளியைக் காப்பாற்றப்போய்... வீண் வம்பில் மாட்டிக்கொண்டார் ‘சக்கர’ப் புள்ளி' என்று சிரிக்கிறார்கள் விவரமறிந்தவர்கள்!
இலைக் கட்சிக்குள் பெரும் புயலைக் கிளப்பியிருக்கும் 'கோட்டை' சீனியரின் கொந்தளிப்புக்குப் பின்னால், தங்கமான மாஜி இருப்பதாகச் சொல்கிறார்கள் உள்விவகாரங்களை அறிந்தவர்கள். 'டெல்லியைப் பகைத்துக்கொள்வது கட்சி நலனுக்கு நல்லதல்ல என்பதைப் பலமுறை சொல்லிவிட்டோம். ஆனால், தலைமை கேட்பதாகவே இல்லை. தலைமையின் போக்கும் சரியில்லை. நீங்கள்தான் மோஸ்ட் சீனியர்... நீங்கள் வாய் திறந்தால்தான் பல பிரச்னைகளுக்கு விடிவு பிறக்கும்' என கோட்டை சீனியருக்கு, தங்கமான மாஜிதான் 'கீ' கொடுத்ததாகச் சொல்கிறார்கள்.
அதன் பின்புதான் 'கோட்டை' சீனியரும் பொங்கினாராம். இந்தப் பின்னணி விவகாரமெல்லாம் தன் காதுக்கு எட்ட, தங்கமானவரிடம் பேசியிருக்கிறது தலைமை. 'அவர் பேசுனதுக்கும், எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. 'என் பேரே அழைப்பிதழ்ல இல்லை. நானே போறேன்... நீங்களும் வாங்கண்ணே' என்றுதான் கோட்டை சீனியரிடம் சொன்னேன். ஆனால், அவர் வரவில்லை...' என்று விளக்கமளித்திருக்கிறார் தங்கமான மாஜி. ஆனாலும் தலைமைக்கு, தங்கமானவர் மீதான சந்தேகம் தீரவில்லையாம்!
Vikatan Play
இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!
https://tinyurl.com/Velpari-Vikatan-Play