Doctor Vikatan: மைதாவுக்கு பதில் கோதுமையில் செய்த பிஸ்கட், பிரெட், பரோட்டா சாப்பிடலாமா?
Doctor Vikatan: பிஸ்கட், பிரெட் போன்றவை மைதாவால் தயாரிக்கப்படுவதால் அவற்றைத் தவிர்க்கச் சொல்கிறீர்கள். இன்று பிஸ்கட், பிரெட், பரோட்டா என எல்லாமே கோதுமையில் தயாரிக்கப்பட்டு கிடைக்கின்றன. அப்படியானால் இவையெல்லாம் ஆரோக்கியமானவை என்று எடுத்துக்கொள்ளலாமா?
பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ் நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன்
![](https://gumlet.vikatan.com/vikatan/2022-03/a8e5128f-a425-4f32-9284-babec1417914/WhatsApp_Image_2022_03_07_at_2_42_30_PM.jpeg)
மைதா என்பதே கோதுமையில் இருந்து தயாரிக்கப்படுவதுதான். அப்படியிருந்தும் மைதாவை ஆரோக்கியமற்றது என்று சொல்கிறோம் என்றால் அதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன.
கோதுமையிலிருந்து நார்ச்சத்து, வைட்டமின்கள் உள்ளிட்ட சத்துகள் அனைத்தும் நீக்கப்பட்டு, கெமிக்கல் சேர்த்து பாலிஷ் செய்யப்படுவதால் மைதாவுக்கு வெள்ளை நிறம் கிடைக்கிறது. அதில் மாவுச்சத்தைத் தவிர வேறு எதுவும் கிடையாது. அந்த மாவுச்சத்து நல்ல மாவுச்சத்தும் கிடையாது. அது எளிதில் செரிமானமும் ஆகாது. வயிற்றில் அப்படியே தங்கியது போன்ற உணர்வை ஏற்படுத்தும். அது ஆரோக்கியத்துக்கு ஏற்றதல்ல. இதனால் மைதாவைத் தவிர்க்கச் சொல்லி அறிவுறுத்தப்படுகிறது.
அதே சமயம், மைதா ஆரோக்கியமற்றது என்பதற்காக பலரும் கோதுமை உணவுகளுக்கு மாறுகிறார்கள். கோதுமை உணவுகள் எல்லோருக்கும் ஏற்றுக்கொள்ளும் என்று சொல்ல முடியாது.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-12/85olet0s/handful-wheat-grains-baked-fresh-bread23-2147883468.avif)
கோதுமை உணவுகளில் க்ளூட்டன் அதிகமிருக்கும். க்ளூட்டன் என்பது கோதுமை, பார்லி மற்றும் பிற தானியங்களில் காணப்படும் ஒருவகை புரதமாகும். இது மாவுப்பொருளுக்கு நெகிழ்வுத்தன்மையை அளிக்கிறது. க்ளூட்டன் அதிகமுள்ள உணவுகளைச் சாப்பிடும்போது நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். அப்படிக் குடிக்காத பட்சத்தில் மலச்சிக்கல் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.
கோதுமை நல்லது என்ற எண்ணத்தில் கோதுமை பிஸ்கட், கோதுமை பிரெட், கோதுமை பரோட்டா போன்றவற்றை தொடர்ச்சியாகவும் அதிகமாகவும் எடுத்துக்கொள்வதும் ஆரோக்கியக் கேட்டை ஏற்படுத்தும். இவற்றில் இனிப்பு, கொழுப்பு உள்ளிட்ட சேர்க்கைகள் இருக்கும். செரிமான பிரச்னை இருப்பவர்கள் கோதுமை உணவுகளை எடுப்பதில் கவனமாக இருக்க வேண்டும். அரிசி உணவுகள் உடலுக்கு நல்லதல்ல, கோதுமைதான் அதற்கு மாற்று என்ற எண்ணம் பலருக்கும் இருக்கிறது. அது தவறு. பேலன்ஸ்டு டயட் எனப்படும் சரிவிகித உணவுமுறைதான் சிறந்தது. அரிசி உணவுகள் அளவோடு எடுத்துக்கொள்ளப்படும்போது ஆரோக்கியமானவையே.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.