தமிழ்நாடு முழுவதும் திமுகவிற்கு ஆதரவான சூழலே நிலவுகிறது: அமைச்சர் வி.செந்தில்பால...
Doctor Vikatan: கருத்தடை மாத்திரைகளை எடுத்துக்கொண்டால், சரும அழகு மேம்படும் என்பது உண்மையா?
Doctor Vikatan: என்னுடைய தோழி வெளிநாட்டில் இருக்கிறாள். சமீபத்தில் இந்தியா வந்திருந்தபோது அவள் கருத்தடை மாத்திரைகளைப் பயன்படுத்துவதைப் பார்த்தேன். அது குறித்து விசாரித்தபோது, சரும அழகுக்காக அந்த மாத்திரைகளை எடுத்துக்கொள்வதாகச் சொன்னாள். அது புதிய தகவலாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. கருத்தடை மாத்திரைகள், கரு உருவாகாமல் தடுப்பவைதானே... அவற்றுக்கும் சரும ஆரோக்கியத்துக்கும் தொடர்பு உண்டா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா
![](https://gumlet.vikatan.com/vikatan/2024-09-11/c6zq72ud/WhatsApp_Image_2024_09_10_at_11_53_19_AM.jpeg)
நீங்கள் கேள்விப்பட்டது உண்மைதான். சருமநல மருத்துவர்களும் ஓரல் கான்ட்ராசெப்ட்டிவ் பில்ஸ் எனப்படும் கருத்தடை மாத்திரைகளைப் பரிந்துரைப்பதுண்டு. அதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. எல்லோருக்கும் பொத்தாம்பொதுவாகப் பரிந்துரைக்க மாட்டார்கள்.
பருக்கள் போன்ற பிரச்னை உள்ளவர்களுக்கு ரெட்டினால் போன்ற சில மருந்துகளை வாய்வழியே எடுத்துக்கொள்ளப் பரிந்துரைப்போம். அப்போது கூடவே கருத்தடை மாத்திரைகளையும் பரிந்துரைப்போம். ரெட்டினால் போன்ற சில மருந்துகள் டெரட்டோஜேனிக் எஃபெக்ட் (Teratogenic effect) கொண்டவை. அதாவது, கர்ப்பகாலத்தில் இந்த மருந்தை எடுத்துக்கொண்டால், கருவிலுள்ள குழந்தையின் வளர்ச்சி பாதிக்கப்படலாம். அதனால் வாய் வழி எடுத்துக்கொள்ளும் ரெட்டினால் மருந்துகளைப் பரிந்துரைக்கும்போது, கர்ப்பம் தரித்துவிடாமலிருக்க, கர்ப்பத்தடை மாத்திரைகளையும் சேர்த்துக் கொடுப்போம்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-11/e5rlh2a6/pimples-acne-woman-face-before-after91497-294.avif)
சில பெண்களுக்கு 'ஹைப்பர் ஆண்ட்ரோஜெனிசம்' (Androgenism ) என்ற பிரச்னை இருக்கலாம். அதாவது ஆண் ஹார்மோன் அதிகம உள்ளதால், மீசை, தாடி முளைப்பது, முகம் முழுவதும் பருக்கள் ஏற்படுவது போன்ற பிரச்னைகளால் அவதிப்படுவார்கள். இந்தப் பிரச்னைகளுக்கான சிகிச்சைகளிலும் கருத்தடை மாத்திரைகளைப் பரிந்துரைப்பது உண்டு. இப்படி சருமநல பிரச்னைகளுக்கு மாத்திரைகளைப் பரிந்துரைக்கும்போது, வேறு சில பக்க விளைவுகளைத் தடுப்பதற்காக கருத்தடை மாத்திரைகளைப் பரிந்துரைப்போம். அதாவது புரொஜெஸ்ட்ரான் ஹார்மோன், சருமத்துக்கு சில நன்மைகளைச் செய்யும் என்பதுதான் காரணம். மற்றபடி, வெறுமனே கருத்தடை மாத்திரைகளை எடுத்துக்கொள்வதால் சரும நலம் மேம்படும் என்பது தவறான நம்பிக்கை.
கருத்தடை மாத்திரைகள் எல்லாம் ஹார்மோன்களை உள்ளடக்கியவை என்பதால் மருத்துவரின் பரிந்துரையில்லாமல் அவற்றை எடுத்துக்கொள்வது மிகமிக ஆபத்தானது. மற்றவர் உபயோகிப்பதைப் பார்த்தோ, அவர்கள் சொல்வதைக் கேட்டோ, நீங்களும் அவற்றை உபயோகிக்க வேண்டாம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.