மீண்டும் தர்மமே வெல்லும்: ஓபிஎஸ் பேட்டி
உள்கட்சி விவகாரங்களை தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என்ற உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது என முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
தேனியில் செய்தியாளர்களுடன் பேசிய ஓபிஎஸ், "உள்கட்சி விவகாரங்களை தேர்தல் ஆணையத்திற்கு விசாரிக்கின்ற உரிமை இருக்கிறது என தேர்தல் ஆணையம் மூலமாகவே மதுரை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நீதிமன்றத்திற்கு என்ன அதிகாரங்கள் இருக்கிறதோ அந்த அதிகாரங்கள் தேர்தல் ஆணையத்திற்கும் இருக்கிறது என அந்த மனுவில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் உள்கட்சி விவகாரங்களை தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என்ற உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது.
'தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், மீண்டும் தர்மமே வெல்லும்' என்று நிரூபணம் ஆகியிருக்கிறது" என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க | அதிமுக உள்கட்சி விவகாரம்: தேர்தல் ஆணையம் விசாரிக்க அனுமதி!
உயர்நீதிமன்றம் தீர்ப்பு
அதிமுக விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் இன்று (பிப். 12) உத்தரவிட்டுள்ளது.
அதிமுக விவகாரத்தை தேர்தல் ஆணையம் விசாரிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி, ஓ.பி. ரவீந்திரநாத், புகழேந்தி, கே.சி. பழனிசாமி உள்ளிட்டோர் தாக்கல் செய்திருந்த மனுவின் மீதான விசாரணையின் முடிவில், நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
அதிமுக உள்கட்சி விவகாரம், இரட்டை இலை சின்னம், புதிய தலைமை ஆகியவை குறித்து தேர்தல் ஆணையம் விசாரிக்க எந்தவித நிபந்தனையும் இல்லை என நீதிமன்றம் கூறியுள்ளது ஓபிஎஸ் தரப்புக்கு ஆதரவாகப் பார்க்கப்படுகிறது.