மாநிலங்களவை உறுப்பினராகும் கமல்ஹாசன்?
திமுக சார்பில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மக்களவைத் தேர்தலின் போது இந்தியா கூட்டணிக்கு கமல்ஹாசன் ஆதரவு அளித்து பிரசாரம் செய்தார். மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட கோவை தொகுதி கேட்கப்பட்டதாகவும், இறுதியில் மாநிலங்களவை பதவி கொடுக்க திமுக சம்மதம் தெரிவித்ததாக அப்போது தகவல்கள் வெளியாகின.
இதையும் படிக்க : தேமுதிகவுக்கு மாநிலங்களவை பதவி உறுதி: விரைவில் பெயர் அறிவிப்பு!
இந்த நிலையில், வருகின்ற ஜூன் மாதத்துடன் தமிழகத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர்களாக உள்ள மதிமுக வைகோ, திமுக திருச்சி சிவா, அதிமுக தம்பி துரை, பாமக அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் பதவிக் காலம் நிறைவடைகின்றன.
இதில், திமுக சார்பில் கமல்ஹாசனை மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுப்பதற்கு அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே, சென்னையில் உள்ள மநீம அலுவலகத்தில் கமல்ஹாசனை நேரில் சந்தித்து அமைச்சர் சேகர் பாபு புதன்கிழமை பேசியுள்ளார்.
இவர்களின் திடீர் சந்திப்பு தமிழக அரசியல் பேசுபொருளாகியுள்ள நிலையில், மரியாதை நிமித்தமாக சந்தித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த சந்திப்பின்போது 2026 சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணி குறித்தும் இருவரும் பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.