காட்சிப்படுத்தப்பட்ட ஏசி புறநகர் ரயில்! பயன்பாட்டுக்கு வருவது எப்போது?
சென்னை: சென்னை ஐசிஎஃப் ரயில்வே தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட ஏசி புறநகர் ரயில் இன்று மக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐசிஎஃப்) அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஏசி புறநகர் ரயிலில், 1,116 பேர் அமர்ந்தும் 3,796 பேர் நின்றும் செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
புறநகர் ரயில் சேவையில் முதல் முறையாக ஏசி ரயில்கள் இயக்கப்படவிருப்பதாக அறிவிப்பு வெளியாகி, ரயில் பெட்டிகள் தயாரிப்புப் பணியும் தொடங்கி தற்போது முதல் ரயில் தயாராக உள்ளது. இந்த நிலையில், தெற்கு ரெயில்வேயின் முதல் ஏசி புறநகர் ரயில் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட தேதி இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.
சென்னையின் முதல் புறநகா் ஏசி மின்சார ரயில் தயாரிப்புப் பணி நிறைவடைந்து சோதனை ஓட்டம் அண்மையில் நடத்தப்பட்டது.
ஐசிஎஃப் தொழிற்சாலையில் எல்எச்பி ரயில் பெட்டிகள், வந்தே பாரத் மற்றும் மின் ரயில்களின் பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன. இந்த நிலையில், மும்பை புறநகா் பகுதிகளுக்கு இயக்கப்படும் மின்சார ரயில்களில் ஏசி வசதியுடன் இயக்கும் வகையிலான பெட்டிகள் ஐசிஎஃப்-இல் தயாரிக்கப்படுகின்றன.
இதேபோல், தெற்கு ரயில்வேக்குட்பட்ட சென்னை ரயில்வே கோட்டத்துக்கும் நடப்பு நிதியாண்டில் ஒரு ஏசி மின்சார ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான தயாரிப்புப் பணி ஐசிஎஃப் தொழிற்சாலையில் நடந்து வந்த நிலையில், தற்போது முழுவதுமாக பணி நிறைவடைந்து, மக்கள் பார்வைக்காகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்த பின் எந்த வழித்தடத்தில் இயக்குவது என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்கின்றனர் அதிகாரிகள்.