Valentine's Day: 'கண்மணி அன்போடு' முதல் 'அன்பே டயானா' வரை... காதல் கடந்து வந்த பாதை தெரியுமா?
காதல்... காலத்தால் மூத்தது எது எனக் கேட்டால் தயங்காமல் சொல்லலாம் காதல் என்று. படங்களில் வருவதைப் போல, ஒருவரைப் பார்த்ததும் (அவர்/அவள்) எனக்கானவர் என்றெல்லாம் தோன்றுமா என எனக்குத் தெரியவில்லை. அப்படித் தோன்றுவதைக் காதல் என்ற வரையறைக்குள் கொண்டுவர முடியாது என்பதே யதார்த்தம். ஆனால், ஒருவரைச் சந்தித்து, கண்களைப் பார்த்துப் பேசிப் பழகி, ஒரு கட்டத்தில் அவர்களின் கண்களைச் சந்திக்க முடியாத சூழல் ஏற்படும்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2024-06/faf0056f-6a8c-44a2-96c0-4610fad08e8d/love.png)
அப்போது, உள்ளுக்குள் ஓர் இனம்புரியாத பதற்றம், வயிற்றில் ஒரு பிசைவு, உள்ளங்கை வியர்வை, உதட்டோரம் வழியும் சிவந்த வெட்கமும், கூச்சமும் எனக் காதலுக்கான அறிகுறிகள் ஆங்காங்கே தென்படத் தொடங்கும். அந்த சூழலில் நமக்காக நம் மனது மட்டும் அவர்களிடம் சென்று பேசினால் எப்படி இருக்கும்... ஆம் அந்த சூழலை உருவாக்க உருவானதுதான் காதல் கடிதங்கள்.
'கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதம்' எனக் குணாவைப் போலத் தொடங்கி, ஜானுவிடம் கடைசிவரை கொடுக்காமல் மடித்து வைத்த ராமின் கடிதம் வரை, அந்தக் கடிதங்களின் பிரசவங்கள் ஒரே காகிதத்தில் முடிந்திருக்காது.
காதல் கடிதத்துக்குக் கொடுக்கப்படும் முத்தமும், அதில் பொதிந்து அனுப்பப்படும் சில மலர் இதழ்களின் மனமும்தான் அந்தக் காதலை வாசத்துடனும், நெருக்கத்துடனும் வாழ வைத்தது என்பதை மறுக்க முடியாது. வென்ற காதலின் வாழும் சாட்சியாகவும், தோற்றக் காதலின் நினைவுச் சின்னமாகவும் எப்போதும் காதலர்கள் வாழும் ரகசியக் கூடமாகவும் அது மாறிவிடுகிறது.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-11/4j4gkdlh/EQs7wn0VUAE3gYS.jpg)
காதல் பரிமாறுதலின் அடுத்த கட்டப் பாய்ச்சலில் இடைமறித்தது இண்டர்நெட். 'அன்புள்ள டயானாவுக்கு...' எனக் காதலர் தினத்தில் கவுண்டமணி எழுதிய அந்த ஈமெயிலில், ஏதோ ஒரு பரிதவிப்பு தொற்றிக்கொண்டிருந்தது என்பதில் சந்தேகம் இல்லை. நேரில் முகத்தைப் பார்க்க முடியாமல், ஏதோ ஒரு மூலையில் இருக்கும் ஒருவருக்கு, அவர் எதிர்ப்பாலினமாகதான் இருப்பார் என்ற நம்பிக்கையில், நலம் விசாரிப்புகளுடன் தொடங்கியது, கடிதக் காதலுக்கு அடுத்தகட்ட காதல்.
அப்போதுதான் "நீங்க யாருனு எனக்குத் தெரியாது... நான் யாருனு உங்களுக்கும் தெரிய வேணாம். நீங்க எப்படி இருந்தாலும் எனக்குக் கவலை இல்ல, நான் எப்படி இருப்பேன்னு நீங்க கவலை படாதீங்க. நாம இரண்டுபேரும் ஒருத்தரை ஒருத்தர் பார்க்காமலே காதலிப்போம்" என்ற காதல் கோட்டைகளெல்லாம் கட்டப்பட்டு, பேஜரில் (Pager) தொடங்கி, செல்போன் எஸ்.எம்.எஸ் கவிதைகளால் நிரம்பி காதலாகப் பரிணமித்தது.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-11/y8tkirpu/hero-image-14.jpg)
இந்தக் காதலின் மற்றொரு உருவமாக வந்து நின்றது "தேடித் தேடித் தீர்ப்போமா" என்று ஜே ஜே'வெனக் கொண்டாடப்பட்ட சமூக வலைத்தள காதல். Orkut தொடங்கி, வெறும் புளு லைக் மட்டும் இருந்த பேஸ்புக் காலம் வரை புதிய மனிதர்களையும், காதலையும் தேடும் காலத்துடன் வளர்ந்தது சமூக வலைத்தள காதல்.
வெறி எதிலிருந்தாலும் அது ஏற்கத்தக்கதல்ல என்பதை உணர்ந்து, இப்போது `இலந்தப்பழம் இலந்தப்பழம் உனக்குத்தான்... செக்க சிவந்த பழம், சிவந்த பழம் உனக்குத்தான்...' என டிக்டாக்கில் ஆடி, 'தேன் தேன் உன்னைத் தேடி அலைந்தேன்' என சிங்கிங் ஆப்-ல் பாடி, வித்தியாசமான புகைப்படங்களைப் பதிவேற்றி, ரீலஸ் போட்டு எனக் காதலின் இன்னொரு வெர்ஷனை, 90's, 2k கிட்ஸ் தலைமுறை பார்த்தது.
![](https://gumlet.vikatan.com/vikatan/2024-05/037dd191-053e-4a62-bf1f-acf230e4e028/vikatan_love_story_2.jpg)
அதன் அப்டேட்டாக, 2k கிட்ஸ் முன்னகர்ந்து, இன்ஸ்டாகிராம், ஸ்னாப் சாட் வழியாக `லவ் டுடே' போல டேட்டிங் ஆப்பில் காதல் தேடப்படும் இடங்களாக மாற்றியிருக்கின்றனர். இத்தனை தலைமுறைகளை, இத்தனை வித்தியாசங்களை, இத்தனை பரிணாமங்களைத் தனக்குள் செறித்துக்கொள்ளும் காதல், இன்றும், என்றும் நீடித்து வாழும் என்பதற்கு அதன் பயணங்களே சாட்சி. அதனால் நிலைத்து நீடித்து நிற்கும் காதலையும், மனிதத்தையும் காதலிப்போம்.