`இல்லாத பிரச்னை' பெரும்பாலான இந்திய மனைவிகளுக்கு இது தெரிவதில்லை..! | காமத்துக்கு மரியாதை -231
பெண்களைப்போல ஆண்களும் உருவகேலிக்கு ஆளாகிறார்கள். முன்நெற்றியில் முடிகொட்டிப் போனால், பரந்த மார்பு இல்லையென்றால், போதுமான உயரம் இல்லையென்றால், ஏன் அவர்களுடைய நிறத்தை வைத்துக்கூட சில நேரங்களில் கேலி செய்யப்படுகிறார்கள். இது அவனுடைய தன்னம்பிக்கையைத் தகர்த்துத் தாழ்வு மனப்பான்மைக்குள் தள்ளிவிடும். ‘மொத்தமா கொட்டிப் போறதுக்கு முன்னாடி கல்யாணம் பண்ணித்தொலைடா’ என்கிற நண்பர்களின் அக்கறையினால்கூட ஆண் உருவகேலிக்கு ஆளாகிறான். காலாகாலத்தில் மகன் திருமணம் செய்துகொள்ள மறுக்கிறானே என்கிற வேதனையில் பெற்ற அம்மாகூட இதே வார்த்தையால் மகனைப் புண்படுத்திவிடலாம். நெருக்கமானவர்களிடம்கூட ஆணால் பகிர்ந்துகொள்ள முடியாத மற்றொரு தாழ்வு மனப்பான்மையும் இருக்கிறது. ஆணுறுப்பு அளவு தொடர்பானது அது. இந்தப் பிரச்னையில் இருக்கிற ஆண்கள் வீட்டில் திருமணப் பேச்சையெடுத்தால் பிடிகொடுக்க மாட்டார்கள். காதலிப்பார்கள், ஆனால் திருமணத்தைத் தள்ளிப்போட்டுக்கொண்டே போவார்கள். காரணம் தெரியாமல் தவிப்பார்கள் இந்த ஆண்களைச் சேர்ந்த பெண்கள். ஆண்களின் தாழ்வு மனப்பான்மையைப் போக்க அவனைச் சேர்ந்த பெண்கள் எந்த வகைகளில் எல்லாம் உதவலாம் என்பதைத்தான் இப்போது பேசவிருக்கிறோம்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2024-10-30/wnwedbb9/painting-person-suffering-from-anxiety23-2150859330.jpg)
’’இந்த சமூகம் ‘அவனுக்கென்ன ஆம்பளை’ என்ற பார்வையுடனே அணுகுவதால், அவனுடைய அந்தரங்க தாழ்வு மனப்பான்மைகளை பெரும்பாலும் வெளித்தெரிவதில்லை. சமூகத்தின் பார்வை இப்படியிருப்பதால், பெரும்பாலான பெண்களுக்கு இதுதொடர்பான புரிந்துணர்வு இருப்பதில்லை. புரிந்துணர்வு இருக்கிற பெண்களோ, ஆண்களின் தாழ்வு மனப்பான்மை அதிகமாகும்படிக்கு உருவகேலி செய்வதில்லை’’ என்கிற செக்ஸாலஜிஸ்ட் கார்த்திக் குணசேகரன், தொடர்ந்து பேச ஆரம்பித்தார். ‘’வழுக்கைத்தலை வந்தால் மட்டுமல்ல, மீசை, தாடி வளரவில்லையென்றாலும், உடம்பில் தசை போடவில்லை என்றாலும் ஆணுக்குத் தாழ்வு மனப்பான்மை வந்துவிடும். இந்த எண்ணம் ஆணுடைய பள்ளிக்காலத்திலேயே ஏற்பட்டு விடுகிறது. விளக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், ஒன்பதாம் வகுப்பில் ஒரு வருடத்தின் ஆரம்ப மாதங்களில் பிறந்த மாணவனும் படிப்பான். அதே வருடத்தின் கடைசி மாதங்களில் பிறந்த மாணவனும் படிப்பான். ஜனவரியில் பிறந்தவனைவிட அக்டோபரில் பிறந்தவனுடைய மீசை வளர்ச்சியும் தசை வளர்ச்சியும் நிச்சயம் குறைவாகத்தான் இருக்கும். இதெல்லாம் தெரியாமல் டீன் ஏஜின் ஆரம்பத்திலேயே தாழ்வு மனப்பான்மைக்குள் விழுந்துவிடுவார்கள். பதினான்கு அல்லது பதினைந்து வயது ஆண் குழந்தைகளிடம், இந்த விஷயங்களை அம்மாக்களால் மிகச் சுலபமாக விளக்கிச் சொல்ல முடியும்.
ஒருவேளை டீன் ஏஜ் தாண்டியும் மீசை, தாடி வளர்ச்சியில்லாமல் இருந்தால், மூளையிலிருந்து விதைப்பைக்குச் செல்கிற ஹார்மோன் உற்பத்திக்குறைவாக இருக்கும் அல்லது விதைப்பையில் ஹார்மோன் உற்பத்திக் குறைவாக இருக்கும். இவர்களுக்கு தசை வளர்ச்சியும் இருக்காது. விளைவு, தாழ்வு மனப்பான்மை. காலேஜ் படிக்கிற உங்கள் மகனுக்கு இந்தப் பிரச்னை இருக்கிறது என்றால், பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் மீசை, தாடியை வளர வைக்க முடியும். மற்ற ஆண்களைவிட உடல் வளர்ச்சிக் குறைவாக இருந்தால், வேறு திறமைகளிலோ, அறிவிலோ தங்களை மேம்படுத்திக்கொள்ள அறிவுறுத்துங்கள். விளம்பரமொன்றில், குள்ளமாக இருப்பதாக வருத்தப்படும் மகளின் நீண்டக்கூந்தலை உயர்த்திக்காட்டி ‘நீ தான் இவ்வளவு உயரமா இருக்கியே’ என்று தேற்றுவார் அம்மா. உருவம் தொடர்பான தாழ்வு மனப்பான்மையுடன் இருக்கிற மகனை அதிலிருந்து மீட்பதற்கான உதாரண வழி இதுதான்.
ஆணுலகத்து அடுத்தப் பிரச்னை திருமண வயதில் முன்னந்தலையில் முடிகொட்டுவது. சிலருக்கு மட்டும்தான் ஹார்மோன் பிரச்னையால் முடிகொட்டும். மற்றபடி பரம்பரைத்தன்மைதான் காரணம். பரம்பரைக் காரணமாக வழுக்கை விழுகிறது என்றால், அதை ஏற்றுக்கொள்வதுதான் தாழ்வு மனப்பான்மை வராமல் இருப்பதற்கான சிறந்த வழி. கூடவே, காதலியோ அல்லது மனைவியோ ‘தலைன்னு இருந்தா வழுக்கை விழறதும் சகஜம்தான்’ என்று இருந்துவிட்டாலோ அல்லது அடர்த்தியான தலைமுடி கொண்ட இன்னோர் ஆணுடன் தன்னுடைய ஆணை விளையாட்டுக்கூட கம்பேர் செய்யாமல் இருந்தாலோ, பாதிக்கப்பட்ட ஆண்களுக்குக் கூடுதல் பலம் வரும். தேவைப்பட்டால் முடிமாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டு தன்னம்பிக்கையாக வாழலாம்.
சில வருடங்களுக்கு முன்னால் வெளிநாடு ஒன்றில் ஆணுறுப்பின் அளவுத் தொடர்பான ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. அதில், ’உங்களில் எத்தனை பேர் தங்களுடைய ஆணுறுப்பு சிறியதாக இருப்பதாக நினைக்கிறீர்கள்’ என்று கேள்வி எழுப்பப்பட்டது. ஆய்வில் கலந்து கொண்ட 80 சதவிகிதம் பேர் தாங்கள் அப்படி நினைப்பதாக பதில் எழுதி இருந்தார்கள். உண்மையில் இப்படி இருப்பதற்கு வாய்ப்பே இல்லை. ஆண்கள் இல்லாத பிரச்னையை இருப்பதாக நினைத்துக்கொண்டு தங்களைத் தாங்களே வருத்திக்கொண்டிருக்கிறார்கள். இதை சில மருத்துவர்கள் பணமாக்கிக் கொண்டிருக்கிறார்கள்’’ என்று வருத்தப்படுகிற செக்ஸாலஜிஸ்ட் கார்த்திக் குணசேகரன், ஆண்களுக்கு இந்த எண்ணம் வருவதற்கானக் காரணமென்ன, தீர்வுகள் என்ன, இதிலிருந்து ஓர் ஆண் மீண்டு வருவதற்கு சம்பந்தப்பட்ட ஆணின் அம்மா மற்றும் மனைவியின் பங்கென்ன என்பதைப்பற்றியும் சொல்கிறார்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2024-02/9b63b2f9-7ea7-41a2-a601-6347b7b3abdc/iStock_989451024.jpg)
‘’பள்ளிப்பருவத்தில் ஒன்றாக சிறுநீர் கழிக்கும்போது ‘எனக்கு இப்படியிருக்கு, உனக்கு ஏன் சின்னதாயிருக்கு’ என்று விளையாட்டாகப் பேசிக்கொள்வதுதான், பின்னாளில் வினையாகி விடுகிறது. ஒரு சில பையன்களுக்கு நார்மலாகவே பெரிதாக இருக்கும். சில பையன்களுக்கோ விறைப்புத்தன்மை வந்தால் பெரிதாகி விடும். இந்த உடலியல் விஷயங்களெல்லாம் அந்த வயதில் அவர்களுக்குத் தெரியாது. ஆனால், தன்னுடைய உறுப்பு சிறியதாக இருக்கிறதோ என்கிற எண்ணம் மட்டும் மனதின் ஆழத்தில் பதிந்துவிடும். வளர்ந்தபிறகு பார்ன் படங்களைப் பார்த்துவிட்டு இன்னும் குழப்பிக் கொள்வார்கள். விளைவு, திருமணத்தைத் தள்ளிப்போட்டுக்கொண்டே வருவார்கள். அப்படியே திருமணம் செய்துகொண்டாலும், தன்னுடைய தாழ்வு மனப்பான்மையுடனே வாழ்ந்துகொண்டிருப்பார்கள். அபூர்வமாக சில ஆண் குழந்தைகளுக்கு ஹார்மோன் குறைபாடு காரணமாக ஆணுறுப்பு வளர்ச்சி குறைவாக இருக்கும். இதை பத்து வயதுக்குள்ளேயே அம்மாக்கள் கண்டுபிடித்துவிட்டால், ஹார்மோன் சிகிச்சை மூலம் சரி செய்துவிடலாம்.
இந்தியாவைப் பொறுத்தவரைக்கும், கணவனே ‘என்னுடைய உறுப்பு சின்னதா இருக்கு’ என்று மனைவியிடம் சொன்னால் ஒழிய, பெரும்பாலான மனைவிகளுக்குக் கணவரின் ஆணுறுப்பு அளவுக்குறித்த விஷயங்கள் தெரிவதில்லை. என்றைக்காவது சண்டை வரும்போது எங்கோ ஒரு மனைவி இதைச் சொல்லிக் காட்டி விடலாம். இதுவும் உருவகேலி என்பதால், இதை மனைவிகள் செய்யாமல் இருப்பதே நலம். இதையெல்லாம் ஆண்கள் பெண்களுக்குச் செய்துகொண்டிருக்கிறார்களே என்று நீங்கள் கேட்கலாம். யார் செய்தாலும் உருவகேலி மனிதத்தன்மையற்ற செயல்தான். ஒருவேளை உங்கள் மகனோ அல்லது காதலனோ காரணமில்லாமல் திருமணத்தைத் தள்ளிப் போட்டுக்கொண்டே வந்தால், அவரை கவுன்சிலிங்குக்கு அழைத்துச் செல்லலாம். அங்கு ஆணுறுப்பின் நீளத்தை எப்படி அளப்பது என்பதைச் சொல்லித்தருவார்கள். இதிலேயே உங்கள் வீட்டு ஆணின் தாழ்வு மனப்பான்மை போய்விடும்’’ என்கிறார் டாக்டர் கார்த்திக் குணசேகரன்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2024-01/29b715fa-3ed2-4a4f-b296-df919a5421fb/dr_karthik_gunasekaran_59675e0a56b9d.jpeg)
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs