செய்திகள் :

Prashant Kishor: அப்பாவின் ஆசை; ஐ.நா சபை பணி; மோடி அலை; விஜய்யுடன் மீட்டிங் - பி.கே கடந்து வந்த பாதை

post image

2014 - ஒரு முன்னுரை

2014 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக பிரசாரம் பரபரப்பாக நடந்துகொண்டிருந்த நேரம் அது. நான் 10 ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். `இந்தியாவுலயே நம்பர் 1 மாநிலமா குஜராத்தை மாத்தியிருக்காங்க. அங்க ஒயின் ஷாப்பே கிடையாதாம். பாக்கு போட்டா கூட யாரும் ரோட்ல துப்ப மாட்டாங்களாம். அந்த மோடி எல்லாத்தையும் மாத்திட்டாரு!' என பள்ளியில் ஆசிரியர் ஒருவர் பெருமிதமாகப் பேசிக்கொண்டிருந்தார். அரசியலைப் பற்றிய எந்தப் புரிதலும் இல்லாமல் சுவாரஸ்யமாக எதோ கதையைக் கேட்பது போல அவர் கூறியதைக் கேட்டுக் கொண்டிருந்தேன்.

அப்படியே நாட்கள் ஓடின. பத்திரிகையாளராக 2023 ஐ.பி.எல் ப்ளே ஆப்ஸ் போட்டிகளை கவர் செய்வதற்காக அஹமதாபாத்துக்குச் சென்றிருந்தேன். நரேந்திர மோடி மைதானத்திலிருந்து நாங்கள் தங்கியிருந்த ஹோட்டல் 7 கி.மீ தொலைவில் இருந்தது. கிட்டத்தட்ட ஒரு வாரம் அங்கே தங்கியிருந்தோம். மைதானத்திலிருந்து ஹோட்டலுக்கு ஆட்டோவில் திரும்புகையில் அந்த ஆட்டோக்காரரிடம் பேச்சு கொடுத்தேன். என்னுடைய ஆசிரியர் வழி நான் கேட்ட கதைகளை ஒரு ஆர்வத்தோடு அந்த ஆட்டோக்காரரிடம் வினவினேன்.

 மோடி
மோடி

'பாட்டிலெல்லாம் இங்க ஈசியா கிடைக்கும் சார். ஆனா, எல்லாமே ப்ளாக்லதான். உங்க போன் நம்பர துண்டு சீட்டுல எழுதிக் கொடுத்துட்டுப் போங்க. நானே வாங்கிட்டு வந்து தரேன்.' என்றார். இன்னாரு நாள் போட்டி மழையினால் தடைபட்டது. இரவு 11 மணி. மைதானத்தில் கூடியிருந்த மொத்தக் கூட்டமும் மெட்ரோவை முண்டிக் கொண்டிருந்தது. மெட்ரோவில் ஷட்டரை அடைத்து வைத்து பட்டி போல ஆட்களை உள்ளே விட்டார்கள். அந்த நேரத்தில் அங்கே ஒரு பேருந்து இல்லை. ஒரு ஆட்டோ இல்லை. கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் மக்கள் கூடியிருந்தார்கள். அந்தக் கூட்டம் கலைந்துசெல்ல எந்தவித சிறப்பு ஏற்பாடுகளையும் குஜராத் அரசு செய்திருக்கவில்லை. இந்த இரண்டு சம்பவங்களோடு எனக்குக் கதைசொன்ன அந்த ஆசிரியரை நினைத்துப் பார்த்தேன். இப்போது எனக்கு விவரம் தெரியும். அரசியல் தெரியும். தமிழகத்தின் ஒரு மூலையிலிருந்த, அதுவும் ஆசிரியராக இருந்தவருக்கு அப்படியொரு மாயையைக் கொடுத்து மோடியை வளர்ச்சியின் நாயகனாகக் காட்டியது பிரசார உத்திகள்தான். அந்தப் பிரசார உத்திகளுக்குப் பின்னால் இருந்தது பிரஷாந்த் கிஷோர்.

'யார் இந்த பிரஷாந்த் கிஷோர்?'

பிரஷாந்த் கிஷோரை இப்போது நினைவுகூர காரணமும் இருக்கிறது. பிரஷாந்த் கிஷோர் இப்போது மீண்டும் பேசுபொருளாகியிருக்கிறார். தமிழகம் வந்து விஜய் மற்றும் விஜய்யின் தவெக வட்டாரத்தினருடன் இரண்டு நாட்களுக்கு முக்கிய மீட்டிங்கை நடத்திவிட்டுச் சென்றிருக்கிறார். 2026 தேர்தலுக்காக பிரஷாந்த் கிஷோர் விஜய்க்கு சிறப்பு வியூகங்களை வகுத்துக்கொடுக்கப் போகிறார் எனும் தகவல்களும் வெளியாகியிருக்கின்றன.

சமகால அரசியலில் அரசியல்வாதிகளை மட்டும் அறிந்துகொண்டால் போதவே போதாது. அவர்களுக்கு பின்னால் இருந்து இயக்கும் பிரஷாந்த் கிஷோர் போன்றவர்களை பற்றியும் நாம் அறிந்தே ஆக வேண்டும்.

பிரஷாந்த் கிஷோர் 45 வயதைக் கடந்தவர். இந்தியாவில் சாமான்ய ஆண்கள் உழைத்து அலுத்து களைத்து அயர்ச்சியோடு வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கும் வயது. ஆனால், பிரஷாந்த் கிஷோர் இந்த வயதில்தான் இந்திய அரசியலில் முக்கியமான சதுரங்க நகர்வுகளை சுறுசுறுப்பாக எடுத்துவைத்துக் கொண்டிருக்கிறார்.

பீகாரில் கோனார் என்கிற கிராமத்தில் பிறந்த பிரஷாந்த் கிஷோருக்கு அரசியல் ஒன்றும் புதிதான விஷயமாக இருந்திருக்கவில்லை. அவரின் அப்பா ஒரு டாக்டர். தீவிர காங்கிரஸ்காரர். அம்மாவுக்குதான் அரசியல் என்றாலே பிடிக்காது. PK அம்மா செல்லம்தான். ஆனாலும் அப்பாவின் வழியைக் கடைபிடிக்கவே அவர் விரும்பினார். அரசியலையும், சமூகத்தையும் கூர்ந்து கவனிப்பத்தில் ஆர்வம்மிக்கவராக வளர்ந்தார். ஐ.நா சபையுடனான உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் சம்பந்தமான பணியில் ஈடுபட்டிருந்தார். கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் ஆப்பிரிக்க நாடுகளில் பணி செய்திருக்கிறார். அந்த ஐ.நா சபை பணிதான் PK வை தேர்தல் அரசியல் நோக்கியும் நகர்த்தியது. இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் சுகாதாரத்துறை மேம்பாடுகள் பற்றிய அறிக்கையோடு ஐக்கிய முன்னேற்றக் கூட்டணியின் இரண்டாம் ஆட்சி காலத்தில் காங்கிரஸை அணுகினார். காங்கிரஸ் அந்த அறிக்கையை பெரிதாகப் பொருட்படுத்தவில்லை. அந்த சமயத்தில் குஜராத் முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடி கைக்கு அந்த அறிக்கை செல்கிறது. ஒரு தேநீர் வேளையில் PK வை சந்தித்துப் பேசுகிறார் மோடி.

பிரஷாந்த் கிஷோர்

குஜராத் அரசுடன் இணைந்து சுகாதாரத்துறையின் மேம்பாடு சம்பந்தமாக PK வின் டீம் வேலை பார்க்கத் தொடங்கியது. ஆனால், PK வுக்கு சுகாதாரத்துறையை தாண்டியும் அவரின் எல்லையை விஸ்தரிக்க விருப்பமுண்டு. அதற்குக் காரணம் அவரின் பீகார் மாநிலம். 'பீகாரில் முறையான குடிநீர் இல்லை. மருத்துவம் இல்லை. வாழ்வாதாரம் இல்லை. ஆனால், ஓட்டு போடும்போது மக்கள் இது எதையும் கணக்கில் கொள்வதில்லை. ஜாதியையும் மதத்தையும் பார்த்து வாக்களித்துவிட்டு வருகிறார்கள்.' எனும் ஆதங்கம் PK வுக்கு உண்டு. இந்த சிஸ்டத்தை மாற்ற வேண்டும் என்ற சராசரி இந்திய இளைஞனுக்கு இருக்கிற கோபமும் அவருக்கு உண்டு. அந்த எண்ணத்தை மோடியும் புரிந்துகொண்டதால்தான் PK வுக்கு இன்னும் அதிக இடத்தைக் கொடுத்தார். மோடிக்கான பிரசார வியூகங்களை அவர் வடிவமைக்க ஆரம்பித்தார்.

'மோடிக்கான பிரசார வியூகம்!'

இந்திய பிரதமர்களிலேயே நரசிம்மராவ்தான் தனக்கு பிடித்தமான பிரதமர் எனக் கூறும் PK முதலில் மோடிக்காக இறங்கி வேலை பார்த்தது அதிசய முரண்தான். PK வின் வியூகங்கள் குஜராத் சட்டமன்றத் தேர்தலில் நல்ல பலன்களைக் கொடுக்க ஆரம்பித்தன. மோடி மூன்றாவது முறையாக முதலமைச்சர் ஆனார். இப்போதுதான் PK வுக்கு மிகப்பெரிய அசைன்மென்ட் ஒதுக்கப்பட்டது. 2014 நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு மோடிக்கான பிரசார திட்டங்களை வகுக்க வேண்டும். 'பதவியில் இருப்பவர்கள் மக்களிடம் இறங்கிச் சென்று அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிவதில்லை. மக்கள் செய்தித்தாள்களை படிக்கிறார்கள் என்றால் நீங்கள் செய்தித்தாளில் இருக்க வேண்டும். மக்கள் டிவிக்கு நகர்ந்தால் நீங்கள் டிவியில் இருக்க வேண்டும். மொபைல் போனுக்கு நகர்ந்தால் நீங்கள் மொபைல் போனுக்குள் வர வேண்டும். வருங்காலத்தில் எதாவது மக்கள் கைக்குள் வந்தால் அதற்குள்ளும் நீங்கள் வர வேண்டும்.' PK அடிக்கடி சொல்லும் விஷயம் இது.

பிரஷாந்த் கிஷோர்

இதற்கான கள உதாரணம் 2014 இல் மோடிக்கு அவர் அமைத்த பிரசாரங்கள்தான். வளர்ந்துகொண்டிருந்த சோசியல் மீடியாவை மோடிக்கென முழுமையாகப் பயன்படுத்தினார். வேறெந்த கட்சியும் சோசியல் மீடியாவின் பலத்தை அவ்வளவு சீக்கிரம் உணரவில்லை. என்னுடைய ஆசிரியர் ஒருவர் குஜராத் பற்றி ஒரு கதை சொன்னார் எனக் குறிப்பிட்டேனே. சமூக வலைதளங்களில் PK டீம் செய்த பிரசாரங்களால் இன்ப்ளூயன்ஸ் செய்யப்பட்ட கோடிக்கணக்கான நபர்களில் அவரும் ஒருவராக இருந்திருக்கக்கூடும். மோடி குஜராத்தில் பேசிக்கொண்டிருக்கையில் அதை இந்தியாவின் பல இடங்களிலும் ஹோலோகிராம் வழி லைவ்வில் டெலிகாஸ்ட் செய்தார்கள். இதெல்லாம் டிஜிட்டலுக்கு. களத்திற்கு வேறுவிதமாகத் திட்டம் தீட்டினார்கள். மோடியை டீக்கடை டீக்கடையாக அமர வைத்து மக்களோடு மக்களாக உரையாட வைத்தார். ஒரே இடத்தில் 20,000 கல்லூரி மாணவர்களைக் கூட்டி கிட்டத்தட்ட 6 மணி நேரம் மோடியை அவர்கள் மத்தியில் செலவளிக்க வைத்தார். தமிழகத்துக்கு வந்தபோது ரஜினி விஜய்யை சந்தித்ததைப் போல ஒவ்வொரு மாநிலத்திலும் பிரபலமானவர்களை தேடிச் சென்று சந்தித்தார்.

செயற்கையான மோடி அலை:

இதற்கெல்லாம் நோட்ஸ் போட்டுக் கொடுத்தது PK. இன்னொரு பக்கம் 'குஜராத் மாடல்' எனத் தனி விளம்பரம் செய்தார்கள். நீங்கள் காணாத சொர்க்கத்தைக் காண வைக்கப்போகிறோம் என்பதைப்போல மக்களை நம்ப வைத்தார்கள். இதெற்கெல்லாம் சூத்திரதாரியாக இருந்தது PK. செயற்கையாக உருவாக்கப்பட்ட மோடி அலை மற்ற கட்சிகளை அடித்துச் சுருட்டியது. மோடி பிரதமரானார். பா.ஜ.க ஆட்சியின் வழி தனக்கென இருக்கும் திட்டங்களை நிறைவேற்றிக் கொள்ளலாம் என PK கணக்குப் போட்டார். ஆனால், RSS பிரஷாந்துக்கு எதிராக இருந்தது. அவர் ஓரங்கட்டப்பட்டார். ஆத்திரமடைந்த PK பீகாருக்கு சென்று நிதிஷ் குமாருடன் கைகோத்தார். பா.ஜ.கவுக்கு எதிராகப் பெரிய கூட்டணியை அமைத்துக் களமாடினார்.

பிரஷாந்த் கிஷோர்

'நிதிஷூக்கான வியூகம்!'

'நிதிஷ் குமாரின் அரசியல் DNA வில் பிரச்சனை இருக்கிறது.' என மோடி பிரசாரத்தில் பேசிவிட, 'மோடி பீகாரிகளையே அவமதித்துவிட்டார்' என அதை மோடிக்கு எதிரான அஸ்திவாரமாகவே மாற்றிவிட்டார் PK. நிதிஷ் குமாரை வீடு வீடாக மக்களை நேரில் சந்திக்க வைத்தார். பீகாரின் நுட்பமான பிரச்னைகளைக் கையிலெடுத்தார். கழிவுநீர் சாக்கடைகள் முறையாக இல்லாததால் மக்கள் பெரிதும் அவதியடைகிறார்கள். இதனால் மக்களுக்குள்ளேயே சண்டை நடக்கிறது என சர்வே மூலம் கண்டடைந்தார். அப்படியான நுட்பமான பிரச்னைகளுக்குத் தீர்வு கொடுக்கும் வகையில் நிதிஷின் பிரசாரத்தைத் திட்டமிட்டார். ஜக்கிய ஜனதா தள கூட்டணி பெரு வெற்றி பெற்றது.

PK வின் புகழ் இந்தியா முழுவதும் பரவியது. தேர்தல்களை வெல்ல வியூக வகுப்பாளர்கள் கட்டாயம் தேவை எனும் மனநிலைக்கு கட்சிகள் சென்றன. பஞ்சாபில் காங்கிரஸூக்காக வேலை செய்து கேப்டன் அம்ரிந்தர் சிங்கை முதல்வர் ஆக்கினார். சரிவிலிருந்த ஜெகன் மோகன் ரெட்டியை மாநிலம் முழுவதும் நடைபயணம் செல்ல வைத்து அவரின் செல்வாக்கை உயர்த்தினார். 10 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாமல் இருந்த திமுகவுக்கு வெற்றி வியூகங்களை வகுத்துக் கொடுத்தார். 'ஸ்டாலின் தான் வராரு விடியல் தரப் போறாரு...' பாடலும் திண்ணைகளில் அமர்ந்து ஸ்டாலின் பிரசாரம் செய்ததும் PK அமைத்துக் கொடுத்த வியூகங்கள்தான்.

இடையில் தான்சானியா நாட்டுக்கெல்லாம் சென்று அங்கேயும் ஒரு கட்சிக்கு தேர்தல் வியூக வேலைகளை பார்த்துக் கொடுத்தார். தேர்தல் வியூகம் என்றாலே பிரஷாந்த் கிஷோர் நினைவுக்கு வரும் அளவுக்கு வேலைகள் பார்த்துவிட்டு இந்தத் துறையிலிருந்து விலகுவதாக அறிவித்தார். அவரின் IPAC நிறுவனத்திலிருந்தும் வெளியேறினார்.

பிரஷாந்த் கிஷோர்

'PK வின் புதிய கட்சி!'

பிரஷாந்துக்கு பெரிய கனவுகள் இருந்தன. அவர் இந்த சிஸ்டத்தை தான் விரும்பியபடி மாற்ற வேண்டும் என நினைத்தார். அதற்கு அதிகாரம் வேண்டும். கடந்த காந்தி ஜெயந்தியன்று ஜன் சுராஜ் என்ற கட்சியைத் தொடங்கினார். 'நீங்கள் மோடியின் முகத்தையும் நிதிஷின் முகத்தையும் பார்த்து வாக்களிக்கிறீர்கள். ஒரு முறையாவது உங்களின் குழந்தைகளின் முகத்தைப் பார்த்து அவர்களின் எதிர்காலத்துக்காக வாக்களியுங்கள்!' என மக்களிடையே பேசினார். எத்தனையோ கட்சிகளுக்கு வெற்றிகரமாக தேர்தல் வியூகங்களை வகுத்துக் கொடுத்த பிரஷாந்த் கிஷோரின் கட்சி பீகாரில் 4 தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் படுதோல்வியை அடைந்தது.

பிரஷாந்த் கிஷோரை அரசியல் சாணக்கியர் என ஒரு கூட்டம் கொண்டாடுகிறது. ஆனால், அவர் பலரின் நிஜ முகங்களுக்கு அலங்கார முகமூடியை மாட்டிவிடும் வேலையைத்தான் பல முறை செய்திருக்கிறார். அவருக்கென ஒரு அரசியல் நிலைப்பாடு இருந்ததாகவே தெரியவே இல்லை. `ஜெயிக்கிற குதிரை மீது மட்டும்தான் பந்தயம் கட்டுவார்'. `வெற்றிகளுக்கு கிரெடிட் எடுத்துக் கொள்பவர் எப்போதுமே தோல்விகளுக்கு பொறுப்பேற்றுக் கொண்டதே இல்லை'. இந்த விமர்சனங்களெல்லாம் அவர் மேல் இருப்பதை மறுக்கவே முடியாது.

தேர்தல் வியூக வகுப்பாளர் என்கிற பெரிய வணிகத்தை PK இந்தியாவில் பரவலாக்கியிருக்கிறார். அவரின் வழிதொட்டு பல டஜன் தேர்தல் வியூக வகுப்பாளர்கள் இப்போது உருவாகிவிட்டார்கள். ஒரு பொருளை எப்படி விளம்பரம் செய்தால் வியாபாரம் ஆகும் என்பதை அறிந்து விளம்பரம் செய்வதைப் போல இப்போது அரசியல்வாதிகளை விளம்பரம் செய்யத் தொடங்கிவிட்டார்கள்.ஆனால், அரசியல் வியாபாரமோ, வாக்குகள் வணிகமோ அல்ல. அதை உணர்ந்து விழிப்புணர்வோடு இருக்க வேண்டியது மக்களின் கடமையே.

TVK : `கட்டுத்தொகையை இழப்பதையே தேர்தல் வியூகமாகக் கொண்ட...' - சீமானுக்கு தவெக பதில்!

விஜய் - பிரஷாந்த் கிஷோர் சந்திப்பை 'பணக்கொழுப்பு' என சீமான் விமர்சித்திருந்தார். இந்நிலையில், சீமானின் விமர்சனத்துக்கு தவெக சார்பில் பதில் அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. அதில், 'கட்டுத்தொகையை இழப்பத... மேலும் பார்க்க

பஞ்சமி நிலம்: ஓபிஎஸ் நிலப்பட்டா ரத்து... எஸ்சி, எஸ்டி ஆணையம் வழங்கிய அதிரடி உத்தரவு என்ன?

தேனியில் பஞ்சமி நிலத்தை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது அதிகாரத்தை பயன்படுத்தி வாங்கியதாக கூறி, அந்நிலத்திற்கான பட்டாவை ரத்து செய்யுமாறு சென்னை எஸ்சி, எஸ்டி ஆணையம் உத்தரவிட்டுள்ளது.கடந்த 1991ம... மேலும் பார்க்க

`அத்திக்கடவு – அவினாசி திட்டத்திற்கு உரிமை கொண்டாட யாருக்கும் தகுதியில்லை!' - சாடும் ஓபிஎஸ்

'மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களால் வித்திடப்பட்ட அத்திக்கடவு – அவினாசி திட்டத்திற்கு உரிமை கொண்டாட யாருக்கும் தகுதியில்லை' என்று எடப்பாடியை சாடி ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை ஒன்றை வெ... மேலும் பார்க்க

`சமண சமயத்தினருக்கு சொந்தமான திருப்பரங்குன்றம்’ - உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் புதிய மனு

திருப்பரங்குன்றம் விவகாரம்கடந்த சில நாள்களாக திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தர்ஹாவில் வழிபடுவது குறித்து இரண்டு மதங்களைச் சேர்ந்த அமைப்பினர் பல்வேறு கருத்துகளை தெரிவித்தும் போராட்டமும் நடத்தி வருகிறார்... மேலும் பார்க்க

Vijay: `பணக்கொழுப்பு; தனிப்பட்ட விருப்பம்'- விஜய் - PK சந்திப்புக்கு அரசியல் கட்சிகளின் ரியாக்சன்

தவெக தலைவர் விஜய்யும் தேர்தல் வியூக வகுப்பாளரான பிரஷாந்த் கிஷோரும் சமீபத்தில் சந்தித்து முக்கியமான ஆலோசனையில் ஈடுபட்டிருந்தனர். பிரஷாந்த் கிஷோர் விஜய்யின் கட்சிக்காக வியூகங்களை வகுத்துக் கொடுக்கவிருப்... மேலும் பார்க்க

செங்கோட்டையன் : `பொதுச்செயலாளர் பெயரை களங்கப்படுத்த திமுக திட்டமிட்டு செயல்படுகிறது' - செல்லூர் ராஜூ

அத்திக்கடவு - அவினாசி திட்டத்திற்கு நிதி ஒதுக்கியதற்காக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கோவை மாவட்டத்தில் விவசாய சங்கத்தினர் நடத்திய பாராட்டு விழாவில் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் வைக்கவில்லை... மேலும் பார்க்க