ராசிபுரம் அண்ணா சாலை அரசுப் பள்ளி நூற்றாண்டு விழா நுழைவாயில் திறப்பு: அமைச்சா், ...
கல்யாணமாகப்போகுதா..? அப்போ இந்த 4 பாயின்ட் உங்களுக்காகத்தான்! - காமத்துக்கு மரியாதை 230
''திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்றால், சில அடிப்படை விதிகள் கட்டாயம் உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும்'' என்கிற டாக்டர் காமராஜ், அந்த விதிகள்பற்றி விவரிக்கிறார்.
``திருமணத்துக்கு முன்பு வரை, 'திருமணமான புதிதில் இருப்பது போல எப்போதும் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாகவே இருக்காது. சின்னச் சின்ன பிரச்னைகள் வந்து போகும்' என்கிற உண்மை எல்லாருக்குமே புரியும். இது பொதுவான ஒரு விஷயம் என்பதை மற்றவர்களுடைய திருமண வாழ்க்கையின் மூலம் அறிந்து கொள்ளலாம். என்றாலும் தனக்கென்று வரும் போது 'நாம எத்தனை வயசானாலும் லவ் பண்ணிக்கிட்டே தான் இருப்போம்' என்றுதான் நம்புவோம். ஆனால், திருமண வாழ்க்கையில் இணைந்த பிறகுதான், 'எல்லாருக்கும் எதுவோ அதுவேதான் எனக்கும்' என்கிற தாம்பத்தியத்தின் மிகப்பெரிய உண்மை புரியும்.
திருமணத்துக்கு முன்னால் திருமண வாழ்க்கை குறித்து நிறைய கனவுகள் காணுங்கள். வாழ்க்கையின் மிக அற்புதமான காலகட்டம் அல்லவா அது... அதே நேரம், திருமணமான புதிதில் இருப்பதுபோலவே எப்போதும் நம்முடைய பார்ட்னர் கொஞ்சிக்கொண்டு இருக்க மாட்டார்; நம்மாலும் அப்படி இருக்க முடியாது என்கிற எதார்த்தத்தையும் நினைவில் வையுங்கள். தாம்பத்திய வாழ்க்கையில் சுவாரஸ்யம் குறையும்போதெல்லாம், மனதின் ஓரத்தில் இருக்கிற இந்த எண்ணம் 'இதெல்லாம் எனக்கு முன்னாடியே தெரியும். இதையெல்லாம் கண்டுக்காம எப்பவும் மகிழ்ச்சியா இருக்கணும்' என்ற தெளிவை உங்களுக்குள் ஏற்படுத்தும்.
திருமணத்துக்கு முன் 'எவ்ளோ வேடிக்கையா பேசுறார்' என்று மகிழ்ந்தவர்கள், திருமணத்திற்குப் பின் 'என்ன இவரு(இவ) இவ்ளோ பொறுப்பில்லாம இருக்காரே (ளே)' என்று தோன்றலாம்
திருமணத்துக்கு முன் துறுதுறுப்பாக தெரிந்த குணம், திருமணத்திற்குப் பின் ' நிலையில்லாத புத்தியோட இருப்பதாக'த் தோன்றலாம்.
'ஸ்ட்ராங்கான மனநிலை கொண்டவர்' என்று திருமணத்துக்கு முன்னால் பாராட்டப்பட்டவர், பிறகு 'எதுக்கும் விட்டே கொடுக்க மாட்டேங்குறார்' என்று கெட்ட பெயர் வாங்கலாம்.
திருமணத்துக்கு முன்னால் 'டென்ஷன் இல்லாத கூலான நபராக' கொண்டாடப்படுபவர், திருமணத்திற்குப் பிறகு சலிப்பூட்டும் நபராகத் தெரியலாம். திருமணத்துக்கு முன்னால் 'நிறைய ஏ ஜோக் அடிக்கிற கிளுகிளுப்பான நபராகப் பார்க்கப்பட்டவர், திருமணத்திற்குப்பின் 'இந்த ஆளுக்கு எப்போ பார்த்தாலும் இதே நினைப்பு' என்று கெட்ட பெயர் வாங்கலாம்.
வெற்றியாளராக, பணம் பண்ணத் தெரிந்தவராக கொண்டாடப்படுகிற ஒரு நபர், திருமணத்திற்குப் பிறகு 'பணம் பணம்னு ஓடுறார்; குடும்பத்துக்கு நேரம் செலவழிக்க மாட்டேங்கிறார்' என்ற விமர்சனத்திற்கு உள்ளாகலாம். திருமணத்துக்கு முன்னால் நம்மிடம் அனைத்தையும் பகிர்ந்து கொள்பவராகத் தெரிந்த நபர், திருமணத்திற்குப் பிறகு 'எல்லாத்துக்கும் நம்மளையே சார்ந்து இருக்காங்க' என்ற எண்ணத்தை ஏற்படுத்தி விடலாம். இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்... அதனால், திருமணத்திற்கு முன்னரே, இப்போது பிடிக்கிற விஷயங்கள் பின்னாளில் பிடிக்காமலும் போகலாம் என்கிற தெளிவை ஏற்படுத்திக் கொண்டால், இது போன்ற குழப்பங்களில் சிக்கிக் கொள்ள மாட்டீர்கள்.
நம் வீட்டுக்கு வருகிற விருந்தாளி தவறுதலாக காபி கப்பை கீழே போட்டுவிட்டால், 'பரவாயில்லை விடுங்க' என்று சொல்வோம். இதுவே காபி கப்பை போட்டது கணவர்/மனைவி என்றால், 'இதைக்கூட பார்த்து எடுத்துட்டு வரத் தெரியாதா' என்று பல்லைக் கடிப்போம். இதேபோல, இன்னொருவர் வீட்டில் சாப்பிடும்போது உப்பு, காரம் சரியாக இல்லையென்றாலும் அட்ஜஸ்ட் செய்து கொள்வோம். இதுவே நம் வீட்டில் என்றால், 'ஒரு கல்லு உப்பு கூடிடுச்சு' என்று துல்லியமாகக் குற்றம் கண்டுபிடிப்போம். வாழ்க்கைத் துணையிடம் கடுமையாக நடந்துகொள்ள நமக்கு உரிமையிருப்பதாக நாம் அனைவரும் நினைக்கிறோம். என்றைக்கோ ஒருநாள் சந்திக்கிற விருந்தாளிகளை முகம் வாடாமல் நடத்த வேண்டுமென்று யோசிக்கிற நாம், நம் வாழ்க்கைத் துணையையும் விருந்தாளிபோலவே நடத்தலாமே... இப்படிப்பட்ட குடும்பங்களில் எப்போதும் மகிழ்ச்சி தங்கும்.
சிலருக்கு தானொரு பர்ஃபெக்ட்டான நபர் என்கிற எண்ணம் இருக்கும். துணையின் சின்னச் சின்ன பலவீனங்களையும் சொல்லிக் காட்டிக்கொண்டே இருப்பார்கள். 'துணையை என்னைப்போலவே பர்ஃபெக்ட்டான நபராக்குவதே என் லட்சியம். அப்படிச் செய்தால் மட்டுமே துணையின் வாழ்க்கை உருப்படும்' என்கிற அளவுக்குப் பிடிவாதமாக இருப்பார்கள். இப்படி நினைப்பதெல்லாம் அறிவின்மையின் உச்சம். பரஸ்பரம் சிறு சிறு பலவீனங்களை ஏற்றுக்கொண்டுதான் வாழ வேண்டுமென்கிற வாழ்க்கையின் எதார்த்தம் புரிந்துவிட்டால் என்றும் மகிழ்ச்சிதான்.”
விகடன் Whatsapp சேனலுடன் இணைந்திருக்க இங்கே க்ளிக் செய்யவும்:https://whatsapp.com/channel/0029Va7F0Hj0bIdoYCCkqs41