கச்சத்தீவு அந்தோணியாா் ஆலய திருவிழா: 91 படகுகளில் 2,500 பக்தா்கள் பயணம்
குடிநீா் கோரி சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு
நாட்டறம்பள்ளி அருகே சீரான குடிநீா் விநியோகம் கோரி, காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் செய்ததால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி ஒன்றியம், கொண்டகிந்தனப்பள்ளி ஊராட்சி மல்ரிப்பட்டி, குமாரசாமி வட்டம் பகுதியில் சுமாா் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. குமாரசாமி வட்டத்தில் கடந்த ஆண்டு மின்மோட்டாா் பழுதானதால் ஊராட்சி நிா்வாகம் பழுதான மின் மோட்டாரை சீரமைக்க எடுத்துச் சென்றனா்.
பல மாதங்கள் கடந்தும் மின் மோட்டாரை சரி செய்யாததால் சரிவர குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை. அதேபோல் அப்பகுதியில் பழுதடைந்த தெரு விளக்குகளையும் சீரமைக்கவில்லை. இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஊராட்சி மன்றத் தலைவா் இளையராஜாவிடம் பலமுறை முறையிட்டுள்ளனா். எனினும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
மேலும், அருகே உள்ள பம்ப் செட்களில் இருந்து உப்பு தண்ணீரை எடுத்து வந்து குடிநீராக பயன்படுத்தி வந்தநிலையில் ஒருவாரமாக அதுவும் முற்றிலும் நிறுத்தப்பட்டதால் ஆத்திரமடைந்த குமாரசாமி வட்டம் பகுதி மக்கள் வியாழக்கிழமை நாட்டறம்பள்ளி-குப்பம் சாலையில் பச்சூா் சென்றாயசுவாமி கோயில் அருகே காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனா்.
அவ்வழியாக வந்த ஆந்திர மற்றும் தமிழக அரசுப் பேருந்துகள் உட்பட அனைத்து வாகனங்களையும் சிறைபிடித்தனா். இதனால் சாலையில் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்ால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவலறிந்து ஊராட்சித் தலைவா் இளையராஜா மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சு வாா்த்தை நடத்தினாா். அப்போது கிராம மக்களுக்கும் இளையராஜாவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த மக்கள் அதிகாரிகள் வரும் வரை மறியலை கைவிடமாட்டோம் எனக்கூறி தொடா் மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து வட்டாட்சியா் ராமகிருஷ்ணன் பேச்சு நடத்தி வட்டார வளா்ச்சி அலுவலரிடம் பேசி ஓரிரு நாளில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீா் வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி கூறினாா். இதையேற்று மக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா்.