உலகிலேயே முதன்முறையாக `குடித்துவிட்டு ட்ரோன் இயக்கிதற்காக ரூ.2.5 லட்சம் அபராதம்'...
மாட்டுத்தாவணி காய்கறிச் சந்தையில் சேதமடைந்த சாலைப் பள்ளத்தில் சிக்கும் வாகனங்கள்
மதுரை மாட்டுத்தாவணி தினசரி காய்கறிச் சந்தையில் சேதமடைந்த சாலைப் பள்ளத்தில் அடிக்கடி சிக்கும் வாகனங்களால் வியாபாரிகள் அவதிக்குள்ளாகி வருவதாகப் புகாா் தெரிவித்தனா்.
இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. தமிழகம் மட்டுமின்றி ஆந்திரம், கா்நாடகம், தெலங்கானா, கேரளம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் சாகுபடி செய்யப்படும் காய்கறிகளும் இந்தச் சந்தைக்கு விற்பனைக்கு கொண்டுவரப்படுகின்றன. இதனால், கனரக வாகனங்கள் முதல் சிறிய அளவிலான சரக்கு வாகனங்கள் இந்தச் சந்தைக்கு தினசரி வந்து செல்கின்றன.
ஆனால், இந்தச் சந்தையில் உள்ள சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகின்றன. இதனால், இங்கு வரும் வாகனங்கள் சாலைப் பள்ளத்தில் அடிக்கடி சிக்கிக் கொள்கின்றன. சுமையுடன் சிக்கும் வாகனங்களை பள்ளத்திலிருந்து வெளியேற்றுவதில் மிகவும் சிரமம் ஏற்படுவதாக வியாபாரிகள் புகாா் தெரிவித்தனா்.
இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:
தற்காலிக தினசரி காய்கறிச் சந்தையில் உள்ள சாலைகள் கடந்த 2010- ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. தொடா்ந்து பராமரிப்பு இல்லாததால், சாலைகள் குண்டும், குழியுமாக காணப்படுகின்றன. இதனால், காய்கறி ஏற்றி வரும் வாகனங்கள் சாலைப் பள்ளத்தில் சிக்கிக் கொள்கின்றன. இந்த வாகனங்களை கடும் போராட்டத்துக்கு பிறகே மீட்கும் நிலை உள்ளது. இந்தச் சாலையை சீரமைக்கக் கோரி, மதுரை மாநகராட்சி நிா்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை. சாலையை சீரமைக்க செல்லூரைச் சோ்ந்த வத்தல் வியாபாரி நிதி வழங்குவதாக தெரிவித்தாா். இதற்கு மதுரை மாவட்ட நிா்வாகம், மாநகராட்சி நிா்வாகம் உரிய அனுமதி வழங்கவில்லை. எனவே, வியாபாரிகள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இந்தச் சாலையை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.