Budget 2025 : `'இந்த' வரிக்கு சிங்கப்பூர் மாடல்’ - வரவிருக்கும் பட்ஜெட் குறித்து...
Food & Health: நாம் அடிக்கடி சாப்பிட வேண்டிய 10 உணவுகள்!
ஓமவல்லிப் பச்சடி
தேவையானவை: ஓமவல்லி (அல்லது) கற்பூரவல்லி இலை - கைப்பிடி அளவு, இஞ்சி - சிறு துண்டு, பச்சை மிளகாய் - 1, மிளகு - 5, சீரகம், பெருங்காயம், உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன், தேங்காய் - அரை டீஸ்பூன், தயிர் - தேவையான அளவு. தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு, எண்ணெய்.
செய்முறை: கடாயில் ஒரு துளி எண்ணெய் விட்டு, மிளகு, சீரகம், உளுத்தம்பருப்பு, பெருங்காயம் போட்டு வறுத்து, பருப்பின் வாசனை போனதும், கழுவிய ஓமவல்லி இலை அல்லது கற்பூரவல்லி இலை, பச்சை மிளகாய் சேர்த்து ஒரு முறை வதக்கி, அடுப்பை அணைக்கவும். இல்லையெனில் இலை மிகவும் வெந்துவிடும். இதனுடன் இஞ்சி, தேங்காய், உப்பு, ஒரு கரண்டி தயிர் விட்டு அரைத்து, எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு சேர்த்துத் தாளித்துக் கொட்டவும்.
ஹெர்பல் டீ
தேவையானவை: கிராம்பு, ஏலக்காய் - தலா 2, தனியா, மிளகு - தலா அரை டீஸ்பூன், சீரகம், சுக்குப்பொடி - தலா ஒரு டீஸ்பூன், கருப்பட்டி (அல்லது) வெல்லம் - 5 கிராம்.
செய்முறை: இருப்புச்சட்டியைச் சூடாக்கி, தனியா, மிளகு, சீரகம், கிராம்பு, ஏலம் என ஒவ்வொன்றாகப் போட்டு, ஒரு கிளறு கிளறி, அடுப்பை அணைத்துவிடவும். இளம் சூட்டிலேயே மிக்ஸியில் போட்டு (தனியா இரண்டாக உடைந்தால் போதும்) அரைக்கவும்.
டீ போடும்போது, ஒரு டம்ளர் தண்ணீரைக் கொதிக்கவைத்து, கருப்பட்டியைத் தட்டிப்போட்டு, நன்கு கொதித்ததும் சுக்குப்பொடி, மூலிகைப்பொடி இரண்டையும் தலா அரை டீஸ்பூன் போட்டு, அடுப்பை அணைத்து, தட்டுப் போட்டு மூடிவிடவும். ஐந்து நிமிஷங்கள் கழித்து, வடிகட்டிச் சூடாக அருந்தலாம்.
ஐங்காயப்பொடி (அங்காயப்பொடி)
தேவையானவை: சுண்டைக்காய் வற்றல், வேப்பம்பூ, மணத்தக்காளி வற்றல், சீரகம் - தலா 5 கிராம், மிளகு, சுக்குப்பொடி - தலா கால் டீஸ்பூன், பெருங்காயம், நெய் - தலா அரை டீஸ்பூன், பொடித்த இந்துப்பு - 3 கிராம்.
செய்முறை: கடாயைக் காயவைத்து, நெய் விட்டு, வற்றல்கள், வேப்பம்பூ, மிளகு, சீரகம், காயம் இவற்றை ஒவ்வொன்றாகத் தனித்தனியே போட்டு வாசம் வர வறுத்து, தட்டில் தனியாக வைக்கவும்.
வறுத்த பொருட்கள், இந்துப்பு சேர்த்து நன்கு பொடித்து, டப்பாவில் எடுத்துவைத்துக்கொள்ளவும். சூடான சாதத்தில் நல்லெண்ணெய் விட்டு, இந்த அங்காயப்பொடியைப் போட்டுப் பிசைந்து சாப்பிடவேண்டியதுதான்.
வாழைப்பூ வடகம்
தேவையானவை: வாழைப்பூ - 4 மடல்கள், உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - 2 சிட்டிகை, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வாழைப்பூவில் உள்ள கள்ளனை ஆய்ந்து, பொடியாக நறுக்கி மோரில் போட்டு வைக்கவும். (இது வாழைப்பூ கருப்பதைத் தவிர்க்கும்). பருப்பு வகைகளை ஊறவைத்து, அதனுடன் காய்ந்த மிளகாய், உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து மிக்ஸியில் இரண்டு சுற்று சுற்றவும். மிகவும் மையாக அரைக்கத் தேவை இல்லை. கடைசியாக வாழைப்பூவைப் பிழிந்து எடுத்து, இந்தக் கலவையுடன் சேர்த்து, மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும். இதை, சிறு சிறு உருண்டைகளாகக் கிள்ளியோ, சிறிய அடையாகத் தட்டியோ வெயிலில் நன்கு உலர்த்திப் பத்திரப்படுத்தவும். இந்த வடகத்தை, எண்ணெயில் வறுத்துப் பயன்படுத்தலாம். காரக்குழம்புக்கு வறுத்தும் சேர்க்கலாம்.
இஞ்சி தேனூறல்
தேவையானவை: இஞ்சி - 100 கிராம், தேன் - தேவையான அளவு.
செய்முறை: இஞ்சியை நன்றாகக் கழுவி, தோல் நீக்கி, மெல்லியதான வட்ட வடிவ வில்லைகளாக நறுக்கிக்கொள்ளவும். இதை ஒரு பாட்டில் அல்லது ஜாடியில் போட்டு, அது மூழ்கும் அளவு தேனை ஊற்றி, இறுக்கமாக மூடிவைத்துவிடவும். நான்கு ஐந்து நாட்களில், அது நொதித்து, நுரைத்தாற்போல் வரும். இந்தச் செய்கை, நல்ல பாக்டீரியாவால் இப்படி நிகழும். ஏழு, எட்டு நாட்கள் கழித்து, நுரைத்தல் தானாகவே அடங்கிவிடும். 10 நாட்கள் கழித்து, தேனில் இஞ்சி நன்கு ஊறி இருக்கும். தினமும் ஒன்று எடுத்துச் சாப்பிடலாம். ஒரு முறை தயாரித்த தேனூறலை இரண்டு, மூன்று மாதங்களுக்கு வைத்துக்கொள்ளலாம்.
லெமன்கிராஸ் - நெல்லி இலை டீ
தேவையானவை: லெமன்கிராஸ், நெல்லி இலை (உலர்த்திய கலவை) - ஒரு டீஸ்பூன், தேன் - ஒரு டீஸ்பூன்.
செய்முறை: நறுக்கிய லெமன் கிராஸ் 3 பங்கு என்றால், அதில் ஒரு பங்கு முழுநெல்லி இலைகள் எடுத்துக்கொள்ளவேண்டும். இரண்டையும் நிழல்காய்ச்சலாக உலரவிட வேண்டும். நன்கு உலர்ந்ததும், ஒரு பாட்டிலில் எடுத்துவைத்துக்கொள்ளலாம். டீ போடும்போது, முக்கால் டம்ளர் தண்ணீரைக் கொதிக்கவைத்து, 2 சிட்டிகை லெமன் கிராஸ், நெல்லி இலைக் கலவையை எடுத்துப் போட்டு மூடிவிட வேண்டும். ஐந்து நிமிஷங்களில், அதிலிருக்கும் சத்துக்கள் தண்ணீரில் இறங்கியிருக்கும். அதை வடிகட்டி, தேன் கலந்து குடிக்கலாம்.
நெல்லிக்காய்ப் பச்சடி
தேவையானவை: பெரிய நெல்லிக்காய் - 2, பச்சை மிளகாய் - சிறிய துண்டு, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, தயிர் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு, கறிவேப்பிலை, கொத்துமல்லி - தேவையான அளவு, தாளிக்க: கடுகு, சீரகம், பெருங்காயம் - தலா கால் டீஸ்பூன்.
செய்முறை: நெல்லிக்காயைத் துருவி, பச்சை மிளகாய், துருவிய இஞ்சி, உப்பு சேர்த்து மிக்ஸியில் இரண்டு சுற்று சுற்றி எடுக்கவும். அதனுடன் தயிர் சேர்த்துத் தாளித்து, கறிவேப்பிலை, கொத்துமல்லியைப் பொடியாக நறுக்கித் தூவிப் பரிமாறவும்.
திப்பிலி ரசம்
தேவையானவை: ரசப்பொடி, சீரகம், வறுத்த வெந்தயம், பெருங்காயம், தனியா, மிளகு, காய்ந்த மிளகாய், புளி, திப்பிலி இலை - 4, பருப்புத்தண்ணீர், உப்பு, தாளிக்க: கடுகு, சீரகம், நெய்.
செய்முறை: புளியைத் தண்ணீரில் கரைத்து வடிகட்டி, ரசப்பொடி, உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். பச்சை வாசனை போனதும், பருப்புத் தண்ணீரைச் சேர்த்து ஒரு கொதி வந்ததும், சின்னதாக நறுக்கிய திப்பிலி இலையைச் சேர்த்து, அடுப்பை அணைத்துவிடவும். கடைசியாக நெய்யில் தாளித்துக் கொட்டி மூடவும்.
வெந்தய தேங்காய்ப் பால்
தேவையானவை: வெந்தயம், துருவிய தேங்காய், இளநீர், இளநீரில் உள்ள தேங்காய் வழுக்கை சிறிதளவு, சர்க்கரை.
செய்முறை: வெந்தயத்தை முதல் நாள் இரவே ஊறவைக்க வேண்டும். இதனால் கசப்புச் சுவை அறவே போய்விடும். பிறகு துருவிய தேங்காய் மற்றும் இளநீர் வழுக்கை ஆகியவற்றுடன் இளநீர் சேர்த்து நன்றாக மிக்ஸியில் அடிக்க வேண்டும். ஊறவைத்த வெந்தயத்தைத் தனியாக அரைத்து, இளநீர் கலவையில் சேர்க்க வேண்டும். இதனுடன் (விருப்பப்பட்டால்) தேவையான சர்க்கரை கலந்து குடிக்கலாம். வெந்தயத்தின் பலனைப் பலர் அறிந்தாலும், அதன் கசப்புச் சுவை காரணமாகப் பலரும் விரும்புவது இல்லை. அந்தக் குறையைத் தீர்க்கவே இந்த வெந்தய-தேங்காய்ப் பால்.
எள்ளு சாதம்
தேவையானவை: கருப்பு எள்ளுத் தூள், நறுக்கிய பூண்டு, சின்ன வெங்காயம், கடுகு, கறிவேப்பிலை, உப்பு, வெந்த சாதம், மிளகாய்த்தூள்.
செய்முறை: எண்ணெயில் பூண்டு, வெங்காயம், கடுகு, கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டு வதக்கவும். இவற்றுடன் எள்ளு பொடி, மிளகாய்த்தூள் சேர்த்து, வேக வைத்த சாதத்தைக் கலந்தால்... எள்ளு சாதம் தயார். மேற்கண்டவற்றை இடித்தும், சாதத்துடன் கலக்கலாம்.
Vikatan Play
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...