Pongal: சர்க்கரைப் பொங்கல் முதல் பல காய்க்குழம்பு வரை... பொங்கல் ரெசிப்பீஸ்!
சர்க்கரைப் பொங்கல்
தேவையானவை:
பச்சரிசி - 200 கிராம் (புதியது)
தண்ணீர் - 3 டம்ளர்
வெல்லம் - 200 கிராம்
தேங்காய்த் துருவல் - கால் கப்
முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ் (திராட்சை) - தலா 10
நெய் - 4 டீஸ்பூன்
ஏலக்காய் - 1
செய்முறை:
பச்சரிசியை முதல்முறை நன்றாகக் கழுவவும். இரண்டாவது முறை கழுவும் தண்ணீரில், அரிசி வேகவைக்கத் தேவைப்படும் 3 டம்ளர் தண்ணீரை எடுத்து வைத்துக்கொள்ளவும். அந்த தண்ணீரை வடிகட்டி, பொங்கல் வைக்கும் பாத்திரத்தில் ஊற்றிக் கொதிக்கவிடவும். பொங்கிவரும் போது, அரிசியைச் சேர்த்து தீயைக் குறைத்து வேகவிடவும். அரிசி வெந்தவுடன் பொடித்த வெல்லத்தைச் சேர்த்து, வெல்லம் கரையும் வரை நன்கு கிளறவும். நெய்யில் வறுத்த முந்திரி, கிஸ்மிஸ் (திராட்சை), ஏலக்காய் மற்றும் தேங்காய்த்துருவலை பொங்கலில் சேர்த்து நன்கு கிளறி இறக்கிப் பரிமாறவும்.
சர்க்கரைவள்ளிக் கிழங்குப் பொரியல்
தேவையானவை:
சர்க்கரைவள்ளிக் கிழங்கு - கால் கிலோ
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு - கால் டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - கால் டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
கறிவேப்பிலை - 10 இலைகள்
செய்முறை:
சர்க்கரைவள்ளிக் கிழங்கை கழுவிதோலுடன் வட்டமாக நறுக்கவும். பாத்திரத்தில் தண்ணீர், உப்பு, சர்க்கரைவள்ளிக் கிழங்கு சேர்த்து வேகவிடவும். பிறகு, தண்ணீரை வடிக்கவும். காய்ந்த மிளகாயை சிறு துண்டுகளாக உடைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து, பின்னர் வேகவைத்த கிழங்கைச் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
மொச்சைக் கூட்டு
தேவையானவை:
ஃப்ரெஷ் மொச்சை - கால் கிலோ
துவரம்பருப்பு - 100 கிராம்
தண்ணீர் - ஒன்றரை கப்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
சின்னவெங்காயம் - 6 (இரண்டாக நறுக்கிக்கொள்ளவும்)
சாம்பார் பொடி - அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை - 10 இலைகள்
தேங்காய்த்துருவல் - 3 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
சீரகம் - கால் டீஸ்பூன்
எண்ணெய் - 2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - கால் டீஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
செய்முறை:
துவரம்பருப்பை ஒன்றரை கப் தண்ணீர், மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து அரை பதமாக குக்கரில் வேக விடவும். இதனுடன் ஃப்ரெஷ் மொச்சை, சின்ன வெங்காயம், சாம்பார்பொடி, உப்பு சேர்த்து மேலும் வேக விடவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து, மொச்சைக் கலவையில் சேர்த்துக் கலக்கவும். இத்துடன் தேங்காய்த்துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
பால் பொங்கல்
தேவையானவை:
பச்சரிசி - அரை கப்
பால் - முக்கால் கப்
தண்ணீர் - இரண்டரை அல்லது 3 கப்
உப்பு - ஒரு சிட்டிகை
செய்முறை:
பால் மற்றும் தண்ணீரை அடிகனமான பாத்திரத்தில் சேர்த்து, அடுப்பில் வைத்து காய்ச்சவும். அரிசியைக் கழுவி பாலோடு சேர்த்து வேகவிடவும். தீயை மிதமாக்கவும். அரிசி நன்கு மிருதுவாக வெந்ததும், கரண்டியால் நன்கு மசித்துவிடவும். இந்தப் பதத்தில் உப்பைச் சேர்த்து தொடர்ந்து கிளறவும். இல்லையென்றால் அடி பிடித்துவிடும். பிறகு பல காய்க்குழம்புடன் பரிமாறினால் சுவை அள்ளும்.
பல காய்க்குழம்பு
தேவையானவை:
முருங்கைக் காய், கருணைக்கிழங்கு, உருளைக்கிழங்கு, கேரட், சர்க்கரைவள்ளிக் கிழங்கு - தலா 1
கத்திரிக்காய் - 3
சுரைக்காய், பறங்கிக்காய், பலாக்காய், வாழைக்காய் - சிறிதளவு
அவரைக்காய் - 10
ஃப்ரெஷ் மொச்சை - அரை கப்
காராமணி - 10
தக்காளி - 2 (பொடியாக நறுக்கவும்)
சின்ன வெங்காயம் - 10 (இரண்டாக நறுக்கவும்)
கறிவேப்பிலை - 20 இலைகள்
புளி - எலுமிச்சை அளவு
தண்ணீர் - 2 கப்
சாம்பார் பொடி - 5 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்
கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், பெருங்காயத்தூள் - தலா அரை டீஸ்பூன்
செய்முறை:
புளியை 2 கப் தண்ணீரில் ஊறவைத்துக் கரைக்கவும். சுரைக்காய், வாழைக்காய், பலாக்காயைத் தோலை நீக்கி ஒரே அளவில் சதுரத் துண்டுகளாக நறுக்கவும். மற்ற காய்கறிகளையும் நறுக்கவும். குக்கரை அடுப்பில் வைத்து புளிக்கரைசல், சாம்பார் பொடி, உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். இதில் நறுக்கிய காய்கறிகள், ஃப்ரெஷ் மொச்சை, காராமணி, சின்ன வெங்காயம், தக்காளி சேர்த்து மூடி, ஒரு விசில் வரும் வரை வேகவிடவும். வாணலியை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் விட்டு சூடானதும், கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை தாளிக்கவும், பிரஷர் அடங்கியவுடன் குக்கரைத் திறந்து தாளித்ததைச் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு இறக்கிப் பரிமாறவும்.
VIKATAN PLAY
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...