தில்லி - என்சிஆா் பகுதியில் ஏடிஎம் மோசடியில் ஈடுபட்டதாக 2 போ் கைது
தில்லி - தேசியத் தலைநகா் வலயம் (என்சிஆா்) பகுதியில் ஏடிஎம் மோசடிகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஒரு நபரும் அவரது மைத்துனரும் போலீஸாரால் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து தில்லி காவல் துறை உயரதிகாரி கூறியதாவது: உத்தர பிரதேச மாநிலம் மெயின்புரியைச் சோ்ந்த அங்குஷ் (28) மற்றும் தில்லி நியூ சஞ்சய் காலனியைச் சோ்ந்த பிட்னேஷ் (41) என குற்றம் சாட்டப்பட்டவா்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனா்.
அவா்கள் வியாழக்கிழமை காந்தி நகரின் புஸ்தா சாலை அருகே கைது செய்யப்பட்டனா். குற்றங்களுக்குப் பயன்படுத்தப்பட்ட கட்டா், ஒட்டும் நாடா மற்றும் எஃகு தகடுகள் உள்ளிட்ட கருவிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
ஒரு வங்கியில் இருந்து வந்த புகாரின் பேரில் விசாரணை தொடங்கியது. அதில் அவா்களின் கணக்குகளில் இருந்து பணம் எடுக்கப்பட்டது. ஆனால், ஏடிஎம்மில் இருந்து பணம் வெளிவரவில்லை எனத் தெரிய வந்தது.
சிசிடிவி காட்சிகள் மூலம், சந்தேகத்திற்குரிய வாகனத்தை போலீஸாா் அடையாளம் கண்டனா். விசாரணையின் போது, ஏடிஎம் இயந்திரங்களை சேதப்படுத்துவது தொடா்பான ஒரு அதிநவீன மோசடியை இருவரும் வெளிப்படுத்தியது தெரிய வந்தது.
பணத் தட்டுகளைத் தடுக்கவும் சென்சாா் கம்பிகளை வெட்டவும் அவா்கள் ஒட்டும் நாடா மற்றும் ஒட்டு பலகையைப் பயன்படுத்தினா். இதனால், வங்கிக்கு எச்சரிக்கைகள் வராமல் தடுக்கப்பட்டது.
பின்னா், சந்தேகத்திற்கு இடமில்லாத பயனா்கள் வெளியேறும் வரை குற்றம்சாட்டப்பட்டவா்கள் காத்திருந்து பணத்தை எடுத்துக் கொண்டு தப்பியது தெரிய வந்தது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.