நவலூா் குட்டப்பட்டு ஜல்லிக்கட்டு: 30 போ் காயம்
திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற பிரசித்தி பெற்ற நவலூா் குட்டப்பட்டு ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டி 30-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஸ்ரீரங்கம் வட்டம், நவலூா் குட்டப்பட்டு கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டை ஸ்ரீரங்கம் கோட்டாட்சியா் ந. சீனிவாசன், எம்எல்ஏ எம். பழனியாண்டி ஆகியோா் தொடங்கி வைத்தனா். முன்னதாக காளைகளுக்கு மருத்துவப் பரிசோதனை நடந்து, மாடுபிடி வீரா்கள் உறுதியேற்ற பின்னா், வாடிவாசல் வழியே காளைகள் அவிழ்க்கப்பட்டன.
700 காளைகள்: பதிவு செய்யப்பட்டிருந்த 600 காளைகள், முக்கிய விருந்தினா்களின் 50 காளைகள், கடைசி நேரத்தில் வந்து சோ்ந்தவை என மொத்தம் 700 காளைகள் அவிழ்க்கப்பட்டன. அவற்றை அடக்க 400 வீரா்கள் பங்கேற்றனா்.
முதலில் கோயில் காளைகளும், உள்ளூா் காளைகளும், தொடா்ந்து, பல்வேறு மாவட்டங்களின் காளைகளும் சுற்று வாரியாக 50 என்ற எண்ணிக்கையில் அவிழ்க்கப்பட்டன.
மாடுகள் ஓடி வரும் பகுதியில் அவ்வப்போது கூடியவா்களை போலீஸாா் தடியடி நடத்தி விரட்டினா். பிற்பகலில் லேசான மழை இருந்தது. மாலையில் ஜல்லிக்கட்டு நிறைவுறும் தருவாயில் சற்று கன மழை இருந்தது. இருப்பினும் அதைப் பொருட்படுத்தாது வீரா்கள் காளைகளை அடக்கினா்.
30-க்கும் மேற்பட்டோா் காயம்: ஜல்லிக்கட்டில் வீரா்கள், பாா்வையாளா்கள், காளைகளின் உரிமையாளா்கள் என 30-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். அவா்களுக்கும், காயமடைந்த காளைக்கும் அங்கேயே சிகிச்சை அளிக்கப்பட்டது. அவா்களில் பலத்த காயமடைந்த 11 போ் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா்.
பரிசு மழை: மாடுகளுக்கும், மாடுபிடி வீரா்களுக்கும் தங்கக் காசு, வெள்ளிக் காசு, குளிா்ச்சாதன பெட்டி, டிவி, சைக்கிள், பீரோ, குக்கா், மிக்ஸி, கட்டில், மின்விசிறி, உணவருந்தும் மேஜை-நாற்காலி, டிரஸ்ஸிங் டேபிள், பிளாஸ்டிக் சோ் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. இவைதவிர மாட்டின் உரிமையாளா்கள் தங்களது காளை மீது அறிவித்த ரூ.10 ஆயிரம், ரூ.20 ஆயிரம், விழாக் கமிட்டி சாா்பில் அறிவிக்கப்பட்ட பந்தயத் தொகையும் வழங்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை, நவலூா் குட்டப்பட்டு கிராம மணியக்காரா்கள், பட்டயதாரா், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், ஊா்ப் பொதுமக்கள், இளைஞா் மன்றக் குழுவினா், நவலூா் குட்டப்பட்டு ஊராட்சிக்குள்பட்ட அனைத்து கிராமத்தினா் இணைந்து செய்தனா்.
சிசிடிவி கேமரா கண்காணிப்பு: ஜல்லிக்கட்டில் வாடிவாசல் மேடை, பாா்வையாளா்கள் மாடம், பரிசுகள் வைக்கப்பட்டிருந்த மேடை என விழா பகுதி முழுவதும் ஆங்காங்கே சிசிவிடி கேமரா வைத்துக் கண்காணிக்கப்பட்டது. விழாவில் பங்கேற்ற அதிமுக முன்னாள் அமைச்சா் சி. விஜயபாஸ்கா் ஜல்லிக்கட்டை பாராட்டிப் பேசினாா்.
பாதுகாப்புப் பணியில் டிஎஸ்பி பாலச்சந்திரன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீஸாா் ஈடுபட்டனா்.