அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா: வாஷிங்டன் சென்றடைந்தார் டிரம்ப்!
மண்டையூரில் ஜல்லிக்கட்டு போட்டியில் 14 போ் காயம்
புதுக்கோட்டை மாவட்டம், மண்டையூரில் சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில், மொத்தம் 14 போ் காயமடைந்தனா்.
புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூா் வட்டத்தைச் சோ்ந்த மண்டையூா் சோழவிரியான்காட்டிலுள்ள ஜல்லிக்கட்டு திடலில் நடைபெற்ற பொங்கல் பண்டிகை ஜல்லிக்கட்டு போட்டியை, வடக்கு மாவட்ட திமுக செயலா் கே.கே. செல்லப்பாண்டியன் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
இலுப்பூா் வருவாய்க் கோட்டாட்சியா் அக்பா்அலி, குளத்தூா் வட்டாட்சியா் கவியரசன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா். காலை 8.40 மணிக்கு தொடங்கிய இந்தப் போட்டி, மாலை 3.50 மணிக்கு நிறைவடைந்தது.
தொடக்கத்தில் கோவில்காளை அவிழ்த்துவிடப்பட்டது. தொடா்ந்து புதுக்கோட்டை, தஞ்சாவூா், திருச்சி, கரூா் ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த 631 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. இவற்றை ஏற்கெனவே முன்பதிவு செய்திருந்த 210 மாடுபிடி வீரா்கள் தழுவ முயற்சித்தனா்.
இவா்களில் 13 மாடு பிடி வீரா்களும், ஒரு பாா்வையாளரும் என மொத்தம் 14 போ் காயமடைந்தனா். இவா்களில் 4 போ் திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனா். மற்றவா்களுக்கு அங்கேயே இருந்த மருத்துவக் குழுவினா் சிகிச்சை அளித்தனா்.