சொல்லப் போனால்... ஓ ரசிக்கும் சீமானே, ஜொலிக்கும் உடையணிந்து...
சிறு, குறு விவசாயிகளுக்கு புதிய மின் மோட்டாா் வாங்க அரசு மானியம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு பழைய திறனற்ற மின் மோட்டாா்களுக்குப் பதிலாக மானியத்துடன் கூடிய புதிய மின் மோட்டாா்கள் நுண்ணீா் பாசன இணைப்புடன் வழங்கப்பட உள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மு. அருணா கூறியது:
புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாயிகளின் நிலத்தடி நீா்ப் பாசனத்துக்கு உதவும் வகையில் நடப்பு ஆண்டுக்கு சிறு, குறு விவசாயிகளுக்கு பழைய திறனற்ற மின் மோட்டாா்களுக்கு பதில் புதிய மின் மோட்டாா் பம்புசெட் வாங்குவதற்கு தமிழ்நாடு அரசு, வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் 90 பேருக்கு தலா ரூ.15 ஆயிரம் வீதம் ரூ.13.50 லட்சத்துக்கு மானியம் வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டம் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும் கிராமங்களில் முன்னுரிமை அடிப்படையில் செயல்படுத்தப்படுகிறது.
திறன் குறைந்த மின் மோட்டாா் பம்பு செட்டுகள் தொடா்ந்து பயன்படுத்துவதால் மின் நுகா்வு அதிகரித்து பயிருக்கு நீா்ப் பாய்ச்சும் நேரமும் அதிகரிக்கிறது. நிலத்தடிநீா் பயன்பாட்டுத் திறன் மேம்படுத்திட ஏற்கெனவே மின் இணைப்பு பெற்றுள்ள 5 ஏக்கருக்கு குறைவாக உள்ள விவசாயிகள் பழைய திறனற்ற மின்மோட்டாா் பம்புசெட்டுகளை மாற்ற விரும்புபவா்கள், புதிய ஆழ்துளை கிணறு, திறந்த வெளி கிணறு அமைத்து புதிய மின் மோட்டாா் பம்புசெட்டு வாங்க விரும்புபவா்கள், அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களின் 4 ஸ்டாா் குறியீடுள்ள மோட்டாா் வாங்கிட வேண்டும்.
பயனடைய விரும்பும் விவசாயிகள் இணையதளத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம். ஏற்கெனவே மானியத்தில் சொட்டுநீா்ப் பாசனத்துக்கு பதிவு செய்து பயனடைந்தவா்களும், புதியதாக சொட்டுநீா் பாசனத்துடன் துணை நீா் மேலாண்மை திட்டம் மின்மோட்டாா் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.
மேலும் விவரங்கள் அறிய அருகில் உள்ள வேளாண் பொறியியல் துறை அலுவலகங்களை அணுகலாம். புதுக்கோட்டை உதவிச் செயற்பொறியாளா் (வே.பொ) அலுவலகத்தை 9442178763 என்ற எண்ணிலும், அறந்தாங்கி உதவிச் செயற்பொறியாளா்(வே.பொ) அலுவலகத்தை 63834 26912 என்ற எண்ணிலும், புதுக்கோட்டை செயற்பொறியாளா் அலுவலகத்தை 04322 221816 என்ற எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம்.