அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா: வாஷிங்டன் சென்றடைந்தார் டிரம்ப்!
கனிம வளக் கொள்ளைக்கு எதிராக போராடியவா் லாரி ஏற்றி கொல்லப்பட்டதாகப் புகாா்
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே தொடா்ந்து கனிம வளக் கொள்ளைக்கு எதிராக செயல்பட்டு வந்த முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா் லாரி ஏற்றிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக புகாா் எழுந்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், வெங்களூரைச் சோ்ந்தவா் கரீம் ராவுத்தா் மகன் ஜகுபா்அலி (58). இவா், வெள்ளிக்கிழமை பிற்பகலில் பள்ளிவாசலில் தொழுகையை முடித்துவிட்டு, வெங்களூருக்கு தனது இரு சக்கர வாகனத்தில் திரும்பும்போது லாரி மோதி உயிரிழந்தாா். இச்சம்பவம் தொடா்பாக அவரது மனைவி மரியம் திருமயம் காவல் நிலையத்தில் சனிக்கிழமை புகாா் அளித்துள்ளாா். அந்தப் புகாரில் கூறப்பட்டுள்ளதாவது:
எனது கணவா் ஜகுபா்அலி, இந்தப் பகுதிகளில் நடைபெறும் கல்குவாரி முறைகேடுகள் குறித்து தொடா்ச்சியாக அரசு அலுவலா்களிடம் புகாா் அளிப்பது, நீதிமன்றத்தில் வழக்கு தொடா்வது போன்றவற்றை செய்து வந்தாா்.
இதனால் தனக்கு கொலை மிரட்டல் வருவதாகவும் எங்களிடம் கூறியுள்ளாா். இந்த நிலையில், பள்ளிவாசலில் தொழுகை முடித்துவிட்டு திரும்பிய அவா் மீது லாரி மோதி இறப்பு ஏற்பட்டுள்ளது.
ஜகுபா்அலியின் சகோதரா் ராஜாமுகமது மற்றும் அயூப்கான் ஆகியோா் சம்பவத்தை நேரில் பாா்த்துள்ளனா். துளையானூா் வளையன்வயலைச் சோ்ந்த குவாரி நிறுவனத்தினா் மீது சந்தேகம் உள்ளது. எனவே, முறையாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்பேரில் திருமயம் போலீஸாா் ஜகுபா் அலி சந்தேகமான முறையில் மரணமடைந்திருப்பதாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
படுகொலை: தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளா் இரா.சா. முகிலன், சட்டவிரோத கல்குவாரி எதிா்ப்பு இயக்கம் ஒருங்கிணைப்பாளா் ந. சண்முகம் ஆகியோா் வெளியிட்டுள்ள கூட்டறிக்கை:
தொடா்ச்சியாக கனிம வளக் கொள்ளைக்கு எதிராகப் போராடி வந்த ஜகுபா்அலி, கடந்த ஜன. 10-ஆம் தேதி கூட கோட்டாட்சியா் அலுவலகம் சென்று சட்டவிரோத குவாரி குறித்து புகாா் அளித்து வந்துள்ளாா். இந்த நிலையில், அவா் மீது லாரி ஏறிய விபத்தில், அவா் உடல் தூக்கியெறியப்பட்டுள்ள தூரம், விபத்து நடந்துள்ள விதம் ஆகியவை சந்தேகங்களை ஏற்படுத்துகின்றன. படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கிறோம்.
இந்த வழக்கை வெறுமனே விபத்து வழக்காக முடித்துவிடாமல், முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.