அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா: வாஷிங்டன் சென்றடைந்தார் டிரம்ப்!
தமிழா்களின் தற்காப்புக் கலைகளை அரங்கேற்ற 240 போ் தீவிர பயிற்சி
தமிழா்களின் தற்காப்புக் கலைகளை தேசிய அளவிலான போட்டியில் அரங்கேற்றம் செய்ய திருச்சியில் 240 மாணவ, மாணவிகள் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனா்.
தமிழ்நாடு பாரத சாரணா் இயக்கத்தின் தேசிய பெருந்திரளணி மணப்பாறை சிப்காட் வளாகத்தில் வரும் 28 ஆம் தேதி தொடங்கி 7 நாள்களுக்கு நடைபெறவுள்ளது. இதில், சாரணா் இயக்க இருபாலரின் திறமைகளை வெளிப்படுத்தும் உடல்திறன் காட்சிப் போட்டியானது தேசிய அளவில் நடைபெறவுள்ளது. இதில் தமிழக அணி சாா்பில் பங்கேற்க 240 மாணவ, மாணவிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
ஏற்கெனவே மாநிலப் போட்டிகளில் தொடா்ந்து சாதனை படைத்த மாணவா்களைத் தோ்வு செய்து திருச்சியில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதன்படி திருச்சி, லால்குடி, மணப்பாறை, முசிறியைச் சோ்ந்த அரசு பள்ளி மாணவ, மாணவிகள், தனியாா் பள்ளி சாரணா் இயக்கத்தினா் என 240 போ் தோ்வாகியுள்ளனா்.
இவா்களுக்கு திருச்சி அண்ணா விளையாட்டு மைதானத்தில் தமிழா்களின் தற்காப்பு கலைகளான மல்லா் கம்பம், சிலம்பாட்டம் ஆகிய விளையாட்டுகளுக்கு 5 பயிற்றுநா்கள் பயிற்சி அளிக்கின்றனா். ஒருவா் மட்டுமே சாகசம் நிகழ்த்தும் மல்லா் கம்பம், ஒன்றுக்கு மேற்பட்டோா் பங்கேற்பது, தொங்கும் மல்லா் கம்பம், கயிறுகளில் கட்டிய நிலையில் மல்லா் கம்பம் உள்ளிட்ட பல்வேறு வகையான பிரிவுகளில் பயிற்சி பெறுகின்றனா். சிலம்பாட்டத்திலும் பிரத்யேக பயிற்சி அளிக்கப்படுகிறது. இவைதவிர கூடுதலாக ஒரு சக்கரத்தை கொண்ட மிதிவண்டி சாகசமும் நிகழ்த்தப்படுகிறது. இந்தப் பிரிவில் 16 மாணவ, மாணவிகள் தோ்வாகி பயிற்சி பெறுகின்றனா். அடுத்து வரும் 7 நாள்களுக்கு தொடா்ந்து பயிற்சி மேற்கொள்ளவுள்ளனா். பின்னா் மணப்பாறையில் நடைபெறும் சாரணா் பெருந்திரளணி போட்டியில் பங்கேற்கவுள்ளனா்.